தொலைக்காட்சி செய்திகளில் சொல்லப்படுவதைப் போன்று அப்படி ஒரு போதும் ஆட்சி மாற்றம் நடக்கப் போவதில்லை. - மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார்

Written By avathani Media Network on Tuesday, January 3, 2017

(இக்பால் அலி)

தொலைக் காட்சியில் இரவு நேரச் செய்தியைப் பார்க்கின்ற போது ஆட்சி மாற்றம் நிகழப் போகின்றது என சிலர் நினைக்கின்றனர். தொலைக்காட்சி செய்திகளில் சொல்லப்படுவதைப் போன்று அப்படி ஒரு போதும் ஆட்சி மாற்றம் நடக்கப் போவதில்லை. அந்த ஊடகங்களால் ஆட்சியை மாற்றம் செய்ய முடியாது. 

அவ்வாறு செய்யக் கூடியதாக இருக்குமாயின் கடந்த 20 வருட காலமாக எதிர்கட்சியில் இருந்த ஐ. தே. கட்சி செய்திருக்கும். அந்த ஊடகங்களில் சொல்லுவது மாதரி ஆட்சியை மாற்றம் செய்ய முடியாது. ஏனென்றால் ஐ. தே. கட்சியைச் சார்ந்தவர்களும் மற்றும் ஸ்ரீ. சு. கட்சியைச் சார்ந்தவர்களும் சேர்ந்து தான் இரு தலைவர்களையும் நியமனம் செய்துள்ளார்கள். இந்த இரண்டு தலைவர்களும் சேர்ந்து இந்த நாட்டை கட்டி எழுப்பவும் அபிவிருத்தி செய்யவும் முன்வந்துள்ளார்கள். யாராவது சரி ஊடகங்களைப் பார்த்து ஆட்சியை மாற்றலாம் என நினைப்பார்களாயின் அவற்றைக் கைவிட்டு விடுங்கள். 

அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செல்லும். எவ்வகையிலான ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் சரி எவ்வகையிலான பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் சரி அத்தனை சவால்களை எதிர் கொண்டு இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு இரு தலைவர்களும் தயாராக இருக்கின்றனர் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார் தெரிவித்தார்.

தெல்தெனிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உடிஸ்பத்துவ ஹைரிய்யா மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுய கைத்தொழில் துறையை ஊக்கும் வகையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இலவசமாக தையல் மிசின் இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு உடிஸ்பத்துவ சனசமூக நிலைய மண்டபத்தில் சங்கத்தின் தலைவி சீனத்துல் ஹினாயா தலைமையில் 01-01-2017 நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்து மாதர் சங்கத்திற்கும் சுயதொழில் வாய்ப்பைக் கருத்திற் கொண்டு தையல் மிசின் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இதில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று இல்லை எல்லோருக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. தங்களுடைய பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட மாதர் சங்கங்கள் ஊடாக இந்த தையல் மிசின் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தெரிவு செய்து தரும் மாதர்களுக்கே இந்த அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. இன்று உலகில் பெண்கள் தான் நூற்றுக்கு 52 விகிதம் பேர் இருக்கின்றனர். ஆண்கள் நூற்றுக்கு 48 விகிதம் ஆண்கள் இருக்கின்றனர். எனவே பெண்களுடைய உழைப்பிலும் முன்னேற்றத்திலும் தான் இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியும். நாங்கள் அவர்களுடைய சுயதொழில் வாய்ப்பை கருத்திற் கொண்டு கிராமத்திற்கு கிராமம் எவ்வாறு பெண்களுக்கு உதவலாம் என முன்வந்திருக்கின்றோம். இந்த தையல் மிசின் இயந்திரத்தைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு சீருடை தைத்து வழங்குதல், புதிய ஆடைவகைகளைத் தைத்து வர்த்தக நிலையங்களுக்கு வழங்குதல் போன்ற இவ்வாறான பல தொழில் முயற்சிகளில் ஈடுபட முடியும். கூட்டு முயற்சியின் மூலமாக கணிசமாளவு பொருளாதாரத்தை ஈட்ட முடியும். அதே போன்று இவை முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. சிங்கள , தமிழ் பெண்களுக்கு சேர்த்துத் தான் வழங்கியிருக்கின்றோம். நாங்கள் ஒன்றுபட்டு தொழில் துறையை மேற்கொள்ளும் போது தான் எமக்கிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் நல்லெண்ணமும் ஏற்படும். எமது தாய் நாடு இது. நாம் எல்லோரும் ஒரு தாய் நாட்டு மக்கள் என்ற எண்ணம் வளரும். நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது நாட்டை கட்டி எழுப்புதவற்காகவே பாடுபட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகிழ்வில் தெல்தெனிய பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஏ. எம். மன்சூர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ராசிக் , மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியாரின் செயலாளர் நளீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.