(இக்பால் அலி)
நிலையான சமாதான முன்னெடுப்புக்கும் ஒற்றுமைக்கான ஸ்திரத்தன்மைக்கும் வழிசமைக்கக் கூடிய எதிர்பார்த்த நல்ல சூழல் தற்போது கண்டி நகரில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்வ மதத் தலைவர்களையும் , சர்வ மதப் பிரமுகர்களையும் , சிறார்களையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படுகின்ற மனிதாபிமானப் பணிகள் வரவேற்கத் தக்கவையாகும். இது நிரந்தரமான ஒற்றுமைக்கு வழிகோலுவதோடு மட்டுமல்ல மனதிற்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எட்வட்; மஹேந்திர தெரிவித்தார்.
கண்டி நகரிலுள்ள மலே ஜும்ஆப் பள்ளிவாசலின் முஸ்லிம் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிஙகள, முஸ்லிம், தமிழ். கிறிஸ்தவ பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பள்ளிவாசல் மேல் மாடியில் அமைப்பின் தலைவர் முஹமட் சாமில் தலைமையில் 31-12-2016 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எட்வன் மஹேந்திர இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு பேசுகையில்
துரதிருஷ்டவசமாக கடந்த மாதம் கண்டியில் உறவில் விரிசலை ஏற்படுத்துகின்ற பாதை யாத்திரைக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தது. எனினும் பொலிஸார் சிறுபான்மையின மக்களின் அமைதிக்காகவும் பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் மிக நிதானத்துடன் கையாண்டு சட்டத்தை நிலைநிறுத்தினோம். கண்டியில் வாழும் சிறுபான்மையின முஸ்லிம்களுடைய மனித குல மேம்பாட்டுக்கும் அவர்களுடைய கௌரவத்திற்கும் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கும் உறுதியான நடவடிக்கைளை நாங்கள் எப்பொழுதும் மேற்கொள்ளத் தயராக இருக்கின்றோம். தீய சக்திகளினால் மேற்கொள்ளப்படும் இனவாதச் செயற்பாடுகளுக்கு நாங்கள் இடம்கொடுக்கப் போவதில்லை. கடந்த காலங்களில் முஸ்லிம்களுடைய நலன்சார் விடயங்களில் கூடுதலான கவனம் செலுத்தி நாங்கள் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை கண்டி முஸ்லிம் நன்கு அறிவார்கள். இங்கு அமர்ந்துள்ள இஸ்லாமிய மார்க்க உலமா அஷஷெய்க் பஸ்லுர் ரஹ்மானுக்கு நன்கு தெரியும் கூட.
எமது முஸ்லிம் இளைஞர் அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த மனிதாபினமானச் செயற்பாட்டில் பௌத்த சமய குரு, முஸ்லிம் சமய குரு, இந்து சமய குரு, கிறிஸ்தவ சமய உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் இந்த பள்ளிவாசல்களில் ஒன்று சேர்ந்திருப்பது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. எல்லாயின மக்களைச் சார்ந்த பிள்ளைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கற்றல் உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இங்கே ஒன்று சேர்ந்திருப்பது இந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் நல்ல முயற்சியாகும்.
கண்டி கட்டுக்கலையிலுள்ள இந்த இஸ்லாமிய இளைஞர் அமைப்பு முன்னெடுத்துள்ள சேவைப் பணி பாராட்டத்தக்கது. இவ்வாறான நல்ல காரியங்கள் தான் கூடுதலாக இடம்பெறவேண்டும்.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய ,பௌத்த சமய, இந்து சமய, கிறிஸ்தவ சமய பிரதான குருக்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
