அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை தமிழ் ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.

Written By avathani Media Network on Tuesday, January 3, 2017

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவர்களின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட சீருடைகளை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், பாலர் பாடசாலைக் கல்விப் பணியகமும் இணைந்து, அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலை தமிழ் ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்வு சமீபத்தில் கல்முனை, நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் இடம் பெற்றது.

அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் செயலாற்;றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம், அம்பாரை மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வில் 371 ஆசிரியர்களுக்கு இரண்டு சீருடைகள் வீதம் வழங்கப்பட்டன.
'மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரனின் ரூபா 10 இலட்சம் நிதிஒதுக்கீட்டின் மூலமே மேற்படி ஆசிரியைகளுக்கான சீருடைகள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், ஏனைய முஸ்லீம், சிங்கள ஆசிரியைகளுக்கான சீருடைகள் காலக் கிரமத்தில் வழங்கப்படும் என்றும், அதற்கான நிதிஉதவிகளை ஏனைய அரசியல் தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும். முன்மாதிரியாகத் திகழ்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவர்களுக்கு எமது ஆசிரியச் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசார் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.
மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்குப் பொருத்தமான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். சின்னப்பிள்ளைகள் தானே, அவர்களுக்கு கதை சொல்லிக் கொடுக்க, பாடல் பாடிக் காட்ட, எழுத்துக்களைப் பழக்க எங்களால் முடியும். எங்களுக்குப் பயிற்சிகள் தேவையில்லை என ஆசிரியர்கள் நினைத்தால், அவர்களால் தொழில் துறையில் முன்னேற முடியாமல் போய் விடும். வெளிநாடுகளில் பாலர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்நிலை நமது நாடுகளில் இல்லை. இந்நிலையை நாம் உருவாக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

















Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.