ஹீரோ இல்லாத படம்

Written By avathani Media Network on Tuesday, January 3, 2017


(Mohamed Nizous)


இது
சிக்கலில் சிக்கிய
மக்களைப் பற்றிய படம்.

எண்ணெய்ச் சட்டிக்குள்
இருக்க முடியாததால்
அடுப்புக்குள் பாய்ந்த
அப்பாவித் தொப்பிகளின்
அவஸ்தைக் கதையினை
அடிப்படையாகக் கொண்ட படம்


வில்லன்கள்
விடாமல்
வெறுப்பேற்றிக் கொண்டிருக்க
கதா நாயகர்கள்
கடைசியிலேனும்
காட்சி தருவார் என
காத்திருக்கும் மக்களின்
கண்ணீர்க் கதை.

ஏந்திய கைகளுக்கு
எப்போதும் பலன் உண்டு.
இந்த நம்பிக்கை மட்டுமே
இப்போதைக்கு கதையில் மிச்சமிருக்கிறது.
எல்லோர்க்கும் உள்ளுக்குள்
அச்சமிருக்கிறது.

இந்தப் படத்திலும்
இருக்கின்றனர் ஜோக்கர்கள்.
வயது போன பின்னாலும்
வால் பிடிக்கும் ஜோக்கர்.
ஆளில்லாக் கட்சி மூலம்
அறிக்கை விடும் ஜோக்கர்.
கடிவாளமின்றிக் கதைத்து
வடிவேலுக்கு போட்டியிடும்
வெங்காய ஜோக்கர்களுக்கு
இங்கே பஞ்சமில்லை

அடிமேல் அடிவிழும்
அடிப்படைக் கதையிருக்க
பொடிப் பொடிக் கதைகளில்
போராட்டம் வெடிக்கும் இங்கு.

ஆட்டுவதா கூடாதா
கூட்டாகவா தனியாகவா
இருபதா எட்டா
இன்னும் பல கதைகள்
வெய்ட்டாக வந்து
பைட் சீனில் முடியும்

பின்னணி இசையில்
பின்னி எடுக்கிறார்கள்
பக்க வாத்தியம் வாசிக்கும்
பதவி வெறியர்கள்

கதாநாயகன் என்று
காட்டிய நபர்களே
வில்லத் தனமாய்
தொல்லை தருவதால்
யார் பின்னால் போவதென்று
யாருக்கும் தெரியவில்லை.

இந்தப் படம்
இரு நூறு நாளல்ல
இரண்டாயிரம் நாளல்ல
எந் நாளும் ஓடும்.
ஏனென்றால்
இந்தக் கதையை ஓட்டினால்தான்
அந்த தலைவர்கள்
அதிகாரத்தில் இருக்கலாம்...!
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.