(NFGG ஊடகப் பிரிவு)
காத்தான்குடி உமர் சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் உமர் பாலர் பாடசாலைக்கு
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG ) யினால் இலவச சீருடைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 14.01.2017 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு உமர் சனசமூக நிலையத்தின்; தலைவர் ஏ.எல். நவ்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நல்லாட்சி;கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஸ்செய்க் பிர்தௌஸ் நழீமி அவர்கள் பிரதம அதியாகக் கலந்து கொண்டு பெற்றோர்கள் முன்பள்ளி கல்வியின் அவசியம் பற்றியும் அல்உமர் பாலர் பாடசாலைக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வழங்கி வரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் இவ்வாறான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொள்ளும் மாணவர்களதும், பெற்றோர்களதும் பொறுப்புக்கள் தொடர்பாகவும் உரையாற்றினார்.
அவர் தனது உரையின் போது 'முன்பள்ளிக் கல்வியானது மாணவர்களை வெறுமனே பாடப்பரப்புக்குள் மாத்திரம் சுருக்கி விடுவதனை இலக்காகக் கொண்டதல்ல மாறாக அவர்களது அறிவுத்திறன் மனப்பாங்கு ஒழுக்கம் நடத்தைசார் விடயங்களையும் வளர்ப்பதற்கான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்குகின்ற ஒரு இடமாகும்.
வருட இறுதியில் விளையாட்டு நிகழ்வுகளிலும் கலை நிகழ்வுகளிலும் தமது பிள்ளைகள் திறன்களை வெளிக்காட்ட வேண்டும் என்பதில் பெற்றோர்கள் காட்டுகின்ற ஆர்வமும் அதற்காக செலவு செய்கின்ற செலவுகளும் நாளாந்தம் பாடசாலை மாணவர்களது முன்னேற்றத்திலும் அடைவிலும் காட்டப்படுவதாக இல்லை. இது பெரும் குறைபாடாகவே உள்ளது.
பாலர் பாடசாலைகளுக்கூடாக எதிர்பார்க்கப்படும் சரியான அடைவுகளை அடையவேண்டுமாயின் பெற்றோர்களின் மனோ நிலையில் பாரிய மாற்றம் ஒன்று தேவப்படுகின்றது. அவ்வாறான ஒரு மாற்றம் ஏற்படுகின்ற போதே எமது பாலர்பாடசாலைகள் சரியான இலக்கை நோக்கி செயற்படுவதற்கு வழியேற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உமர் சனசமூக நிலையத்தின் பிரதித் தலைவர் அப்துல் நஸார் அவர்களும் அதன் பொருளாளர் ஏ.எம்.ஏ. காதர் அவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
இந்நிகழ்வில் சுமார் 30 மாணவர்களுக்கு பாடசாலைக்கான சீருடைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக பிர்தௌஸ் நழீமி அவர்கள் வழங்கிவைத்தார்கள்.
