கல்முனை வலய ஆசிரியர் நிலுவை கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Written By avathani Media Network on Tuesday, January 17, 2017


(எம் எம் எம். நூறுல்ஹக்)

"மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்குவதற்கு இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை, அவரால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கை என்ன என்பது பற்றிய எந்தத் தகவல்களையும் எங்களுக்கு அறியத் தரவுமில்லை. இதனையிட்டு எமது சங்கம் மிகவும் மனவேதனை அடைகின்றது.” என இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் கிழக்கு மாகாண சபை ஆளுனருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அக்கடிதத்தில் மேலும், தெரிவித்திருப்பதாவது,

”கல்முனை வலயப் பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைகள் வழங்கும் செயற்பாடு கவனிப்பாரற்றதாகவும், செல்வாக்குள்ளோர் பெற்றுக்கொள்கின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது.

கல்முனை வலயக் கணக்காளர் சம்பள நிலுவை வழங்காமைக்கான காரணமாகக் கூறும் நிதியின்மை மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிதி வழங்காமை என்பனவற்றுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தரக் கோரி எமது இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தினால் 08.11.2016இல் தங்களுக்கு கோரிக்கைக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.

தாங்கள் அதனை உரிய நடவடிக்கையின் பொருட்டு கல்விச் செயலாளர் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான கடிதங்கள் ( தங்களதும், கல்விச் செயலாளரதும் ) கிடைக்கப்பெற்றன.

ஆயினும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்குவதற்கு இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை, அவரால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கை என்ன என்பது பற்றிய எந்தத் தகவல்களையும் எங்களுக்கு அறியத் தரவுமில்லை. இதனையிட்டு எமது சங்கம் மிகவும் மனவேதனை அடைகின்றது.

ஆசிரியர்களின் நலன் மேன்பாட்டிற்காக செயற்படும் எமது இலங்கை மகா ஆசிரியர் சங்கமானது அநீதி இழைக்கப்பட்டுள்ள கல்முனை வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவைக்காக குரல் கொடுக்க வேண்டிய கடமைப்பாடு கொண்டதாக உள்ளது.

எனவே எங்களது கோரிக்கையானது கௌரவ ஆளுனராகிய தங்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கல்முனை வலய ஆசிரியர்களின் சம்பள நிலுவையினைப் பெற்றுத்தர வேண்டும் என்பதாகும்.

இக்கோரிக்கைக்கு வலுவூட்டு வகையில் எமது சங்கமானது கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் தீர்மானம் எடுத்துள்ளது. என்பதையும் பணிவுடன் அறியத்தருகின்றோம்.” எனவும் அக்கடிதத்தில் காணப்படுகின்றது.

ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண, மாகாண கல்வித் திணைக்கள மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்முனை வலயக் கல்வி அலுவலக வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.