(எம்.எம்.எம்.நூறுல்ஹக் -
சாய்ந்தமருது)
கல்முனை மாநகர சபையில் தற்போது அமைந்திருக்கும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கென்று தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை கடந்த 1987களிலிருந்து முன்வைக்கப்பட்டு வருவது நாமறிந்ததே. இந்த கோரிக்கையின் பின்னாலுள்ள நியாயங்கள் பல்வேறு கட்டுரைகளில் பலராலும் குறிப்பாக இக்கட்டுரையாளராலும் பலமுறை பேசப்பட்டு வருகின்றது.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி சபை ஒன்று வழங்குவது குறித்து இன்றைய கல்முனை மாநகர சபை எல்லையுள் அமைந்திருக்கும் எந்தப் பிரதேசத்தவரும் பகிரங்கமாக மறுத்துரைக்காமல் இருப்பதுவே அதன் தேவையையும் நியாயத்தையும் உறுதிப்படுத்த போதுமானது.
கடந்த பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி கல்முனையில் நடாத்திய பிரதான பிரசார மேடையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை தரப்படுமென்று அறுதியிட்டு குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கோரிக்கை மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீண்டகாலமாக பாராமுகமாகவும் மௌனமாகவும் இருந்துவந்த தமது நிலைப்பாட்டை மாற்றி, தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னர் அமைந்திருந்த நூறு நாள் வேலைத்திட்ட அரசாங்க காலப்பகுதியில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கை விடயத்தில் சார்பு நிலையை முன்னிறுத்த தொடங்கியிருந்தது என்பது மு.கா.வினரின் வரலாறாகும்.
இவைகள் ஒருபுறமிருக்க இறுதியாக சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை ஒன்று நிறுவுவதில் ஏற்பட்டு வரும் காலதாமதத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு வந்த பிரதான காரணம் ’உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய ஏற்பாடுகள் பூரணத்துவம் அடையாத நிலையே அன்றி வேறெந்த அக அரசியல் நோக்கங்களும் கிடையாது’ என்பதாகும்.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றினை சாய்ந்தமருது உள்ளூராட்சி கோரிக்கையினை வலியுறுத்தியோர்களிடம் இது ஒரு காரணமாக அமைய முடியாது என்பதை மிகவும் வலிமையான ஆதாரங்களின் ஊடாக முன்வைத்துமிருந்தனர். அவற்றினை போதிய சான்றுகளுடன் நிறுவி கட்டுடைப்புச் செய்யாமல் ஏனோ தானோ என்ற அலட்சிய நடவடிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் இதுவிடயத்தில் பிரயோகித்து வந்திருப்பதும் நமது அவதானங்களுக்கு அப்பாலானதல்ல.
ஓர் உள்ளூராட்சி சபையை நிறுவுகின்ற விடயத்தில் உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் அடிப்படையிலும் இதுகாலவரை நடைமுறையிலிருந்து வருகின்ற நடப்பியல் அரசியல் நோக்கிலும் குறித்த உள்ளூராட்சி அமைச்சருக்கான அதிகாரமாகவே இருந்து வந்திருக்கின்றது. அந்த அடிப்படையில் இது ஒரு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாகவும் மற்றும் அதற்கென்று நிறுவப்படுகின்ற ஆணைக்குழுவின் அடிப்படையிலும் நிறைவேற்றித்தான் தரப்படவேண்டுமென்பது கட்டாயமானதல்ல என்பதை நமது நாட்டில் உருவாக்கப்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்கள் தாபிக்கப்பட்ட கோணங்களிலிருந்து உணரத்தக்கதாகும்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட கல்முனை நகர சபை, மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டமை, காரைதீவு மற்றும் ஆலையடி வேம்பு பிரதேச சபைகள் உருவாக்கியமை, அக்கரைப்பற்று – கருங்கொடித்தீவு பிரதேச சபை மாநகர சபையாகவும், பிரதேச சபையாகவும் பிரிக்கப்பட்டமை போன்ற பல்வேறு உதாரணச்சான்றுகளை காணக்கூடியதாகவும் உள்ளன.
நமது நாட்டில் தற்போது நிறுவப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது கடந்த மகிந்தவின் அரசாங்கத்தின்போதே எல்லைகளை வகுத்து அவரிடம் கையளிக்கப்பட்ட ஒன்றாகும். அவற்றில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அங்குமிங்குமாக சில குரல்கள் ஒலித்த போதிலும் அது வலிமைப்பட்டு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடியாத கையறு நிலையில் இருந்தது என்பது இது விடயத்தில் ஒரு வெளிப்படையான அம்சமாகும்.
என்றாலும் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து அமைக்கப்பட்ட நூறு நாள் வேலைத்திட்ட அரசாங்கத்தின்போதும் அதன் பின்னர் பொதுத்தேர்தலை அடுத்து உருவாக்கப்பட்ட இன்றைய அரசாங்கத்திலும் தொடர்ந்தும் இந்த விடயம் முன்வைக்கப்பட்டதினால் மீளாய்வு செய்வதற்கென்று உள்ளூராட்சி எல்லை நிர்ணய ஆணைக் குழுவினை நிறுவியும், அதன் காலத்தை ஓரிரு தடவை நீட்டிக் கொடுத்துமிருக்கின்றது.
எது எவ்வாறிருந்தாலும் ஒரு புதிய உள்ளூராட்சி சபையை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்படும் எல்லா இடங்களிலும் எல்லை நிர்ணய தேவை சம்பந்தப்பட்டிருப்பதில்லை. அவ்வாறு எல்லை பிரிப்பை எதிர்கொண்டுள்ள பிரதேசங்களில்தான் எல்லை நிர்ணய தொழிற்பாடு முடிவுற்றதன் பின்னரே அங்கு ஒரு புதிய உள்ளூராட்சி சபையினை நிறுவ முடியும். இத்தகைய நிலைப்பாடு காணப்படாத இடங்களில் உள்ளூராட்சி சபையை நிறுவுவதில் சட்டச் சிக்கலோ, நடைமுறைப் பிறழ்வோ ஒரு தடைக் காரணங்களாக அமைய முடியாது.
இந்த வகையில்தான் அண்மையில் 1998/02ஆம் இலக்கம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம், திகதி திங்கள் கிழமை வெளிவந்த இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப் பத்திரிகை அதி விசேஷமானதில், ’தம்மன்கடுவ பிரதேச சபையை கலைத்து அதற்குள் அடங்கியிருந்த எல்லைகளின் சில பகுதியை பொலன்னறுவை மாநகர சபை என்றும், ஏனைய பகுதிகளை பொலன்னறுவை பிரதேச சபை என்ற வகையில் இரு சபைகளை அமைத்து எதிர்வரும் 2017/06/30 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் வண்ணம் கலைக்கப்படுவதாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மேற்சுட்டிக்காட்டிய நிகழ்வானது சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை நிறுவுவதை காலதாமதப்படுத்தாது விரைவுபடுத்தி செய்து தந்திருக்கக்கூடியது என்பதை மேலும் வலிமைப்படுத்துகின்றது. ஏனென்றால், தற்போதைய கல்முனை மாநகர சபையின் எல்லையினுள் வகுக்கப்பட்டிருக்கின்ற வட்டாரங்களில் குறிப்பாக சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் வேறெந்த ஊர்களும் இணைக்கப்படாது தனியாக வகுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நோக்குகையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கான வட்டாரங்களை வகுப்பதில், எந்த சிக்கலும் இல்லை. அதுமட்டுமன்றி அங்கு ஏலவே சாய்ந்தமருது பிரதேச செயலகம் அமைந்திருப்பதினால் அதற்கென்று திட்டவட்டமான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இவை சாய்ந்தமருதுக்கென உள்ளூராட்சி சபை வழங்குவதில் எந்தத் தடையையும் கொண்டிருக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டக் கூடியதாகும்.
ஏறத்தாள மூன்று மாதங்களுக்கு முன்னர் 21.10.2016இல் சாய்ந்தமருதில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்ட வைபவமொன்றில் ”சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை நான் தருவேன் அதில் சந்தேகப்படத் தேவையில்லை” என்ற கருத்தை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்திருந்தார். இதேவேளை சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் 18.12.2016இல் வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்வில் கலந்துகொண்ட மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை சம்பந்தமான கேள்விக்கு பதிலளிக்கும் போது தெளிவாக இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டார்.
(01) உள்ளூராட்சி அமைச்சராக பைஸர் முஸ்தபா இருப்பதால் அவரை நாம் ஓரிரு முறை சந்தித்து சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை நிறுவுவது குறித்து விளக்கங்களை முன்வைத்திருந்தோம். எமது சந்திப்பை அவர், அவரிடமிருந்து புள்ளி பெறுவதற்காக சென்றிருந்ததாக வர்ணித்திருந்தார். அவரிடமிருந்து எந்தவிதமான புள்ளிகளையும் பெற வேண்டிய தேவை எங்களுக்கில்லை. (02) சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை அவர் வழங்குவதாக வாக்குறுதியளித்திருக்கிறார். எனவே, எங்களை அழைத்தோ அழைக்காமலோ உரிய அமைச்சராக அவர் இருப்பதினாலும் இதனை வழங்கி அதற்கான விழாவை அவர்கள் கொண்டாடினால் கூட எங்களுக்குச் சந்தோஷமே என குறிப்பிட்டார்.
இவற்றினூடாக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தன்னிடமிருந்த சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை வழங்க வேண்டும் என்ற பந்தை நியாயபூர்வமாக கைமாற்றிவிட்டார். இது அவர் அவரது பொறுப்பிலிருந்து விலகிச் சென்றார் என்று பார்ப்பதைப் பார்க்கிலும் தாராளத் தன்மையோடும், விட்டுக்கொடுப்போடும் யாரூடாகவேனும் சாய்ந்தமருது மக்களின் தேவைப்பாடு நிறைவடைந்தால் போதுமானது. அதுதான் இந்த விடயத்தில் முக்கியம் என்ற நோக்கில் முன்வைத்த கருத்தாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.,
இந்நிலையானது சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை உருவாக்குவதில் அதிக பொறுப்பும், கடப்பாடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சார்ந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சாய்ந்தமருது ஊரை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராஸாஹிபு போன்ற முக்கியஸ்த்தர்களின் கரங்களில் தங்கியிருகின்றது. இன்றைய உள்ளூராட்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர்களுக்கு சார்பாகவும் அதேவேளை இக்கோரிக்கை நியாயமானது என்று ஏற்றவராகவும் இருப்பதினாலும் இலகுவாக சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையினை எய்திக்கொள்ளக்கூடிய சூழலும் வாய்த்திருக்கின்றது. இதனை வலுப்படுத்துவதற்கு துணைக்காரணியாக அண்மையில் பொலன்னறுவை மாநகர சபை மற்றும் பொலன்னறுவை பிரதேச சபை என்பனவற்றின் உருவாக்கமும் இணைந்திருக்கின்றது.
நாட்டின் முதற் தலைவரான ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா அணியைச் சார்ந்தவரான மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா இருப்பதினால், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை ஒன்றை வழங்குவதிலிருக்கின்ற நியாயத்தை எளிதாக ஜனாதிபதிக்கு தெரிவிக்க முடியும். அதேநேரம் நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்க சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை நிறுவப்படும் அவசியத்தை ஏலவே விளங்கியவராவார். அதுமாத்திரமன்றி சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை தருவதாகவும் உறுதியளித்தவருமாவார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது விடயத்தில் பகிரங்கமாக ஏற்றும் தமது ஆதரவினை வெளிப்படுத்தியும் உள்ளனர் ஆகவே, அரசியல் காய்நகர்த்தல்களிலூடாகவும் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கை பின்தள்ளப்படுவதற்கு எந்தத் தடையுமில்லை என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது.
ஆகவே, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை நிறுவப்படுவது தொடர்ந்தும் தள்ளிச் செல்லுமேயானால், அதன் முழுப்பொறுப்பையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உட்பட அவரது கட்சி சார்ந்த இவ்வூர் அரசியல் பிரமுகர்களும் பலியை கூட்டு மொத்தமாக சுமக்க வேண்டிய கடப்பாட்டிலிருந்து தப்புவதற்கு எந்த வாய்ப்பையும் முன்னிறுத்தாத சூழலை உருவாக்கி, முஸ்லிம் காங்கிரஸ் இதிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றது.
என்றாலும், அவர்கள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை நிறுவுவதில் கரிசணை காட்டி பல முன்னேற்பாடுகளை தற்போதைய அரசாங்கத்தில் முன்னெடுத்திருந்த நிலையில், சாய்ந்தமருதில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்ட உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபையை வழங்குவதாக திட்டவட்டமாக உறுதியளித்திருந்தார். இதற்கு காலாக அமைந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸே இனி இந்த விடயத்தை முழு மூச்சாக நின்று பெற்றுத்தரல் வேண்டும். பெற்றுத்தரவில்லையானால் அந்த இயலாமையின் சொந்தக்காரர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை இம்மக்கள் கணிப்பது தவிர வேறு வழி இருக்காது.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பந்தை பவ்வியமாகவும், பக்குவமாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பக்கம் நகர்த்தியிருப்பது அவரது அரசியல் சாணக்கியத்தின் உச்சபட்ச செயற்பாடு என்பது உற்று நோக்கும்போது நாம் விளங்கிக்கொள்ள முடியும். என்றாலும் இனி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையின் கோரிக்கையின் வெற்றி, தோல்வியில் முழுப்பங்காளர்களாக இருக்கப்போகின்றனர் என்பது மட்டும் நிச்சயமானது.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையினை இன்றைய உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா அவசரமாக நிறைவேற்றி வைப்பாராயின் எதிர்காலத்தில் சாய்ந்தமருது மக்களின் கூட்டு மொத்தமான ஆதரவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு திரும்பலாம். அது உள்ளூராட்சி சபை உடன் நிறைவேற்றப்படுவதன் மூலமே சாத்தியமாகும். மாறாக காலம் கடந்து உள்ளூராட்சி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முடிவுற்றதன் பின்னர் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கை நிறைவேறுமானால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சாதகமாகவே அமைய முடியும்.
அண்மையில் பொலன்னறுவை மாநகர சபை, பிரதேச சபை உருவாக்கம் போன்று உடன் நிறுவப்படுவதன் ஊடாகவே முஸ்லிம் காங்கிரஸ் இதுகாலவரை கூறி வந்த காரணம் சாக்கு போக்கானது என்பது நிரூபிக்கப்படும். இதன் மூலமே இம்மக்களின் எண்ணம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பக்கம் திருப்பப்படும் என்பதும் ஓர் உறுதியான அனுமானமே.
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கை அரசியல்வாதிகளின் பலப்பரீட்சைக்குரிய ஒன்றாக காலத்துக்குக்காலம் மாற்றப்படுவது ஓர் ஆரோக்கியமான விளைவைத்தராது. உண்மையில் இக்கோரிக்கையானது இம்மக்களின் உணர்வோடு சம்பந்தப்பட்டது. அதனோடு விளையாட எத்தனிப்பது நியாயமற்றது. “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்ற ஒரு பழமொழி உண்டு. இதனடிப்படையில் இம்மக்கள் முடிவெடுக்கும் நிலையென்பது பொதுவாக முஸ்லிம் கட்சிகளுக்கு பேராபத்தானது.
MMM.Noorulhagu
129b, Osman Road,
Sainthamaruthu – 05
077-2612094


