(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்டத்தில் அமைந்துள்ள லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம் தரம் 9வரை தரம் உயர்த்தப்பட்ட பாடசாலையாகும்.
இங்கு வருடாவருடம் மாணவர்களின் அனுமதி அதிகரித்துவரும்நிலையில் தளபாடங்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டநிலையில் உள்ளது.
அந்த அடிப்படையில் இவ்வருடம் தரம் 1ற்கு 60 மாணவர்கள் புதிதாக அனுமதிபெற்றுள்ள நிலையில் அவர்களுக்கான தளபாடப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும்முகமாக சாய்ந்தமருது மழ்ஹரியன் 2000 சமூக சேவை அமைப்பினர் தாமாக முன்வந்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரும்பு மேசைகள் மற்றும் பிளாஸ்டிக் கதிரைகள் போன்ற தளபாடங்களை அவ்வமைப்பின் குழு சார்பாக அமைப்பின் வெளிநாடுகளுக்கான தொடர்புச் செயலாளரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியருமான எப். முகம்மட் அஸ்லமினால் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இவ்வுதவியில் பங்கேற்ற அவ்வமைப்பின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்களுக்கு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றிகளை தெரிவித்துத்துக் கொள்கின்றனர்.




