(Mohamed Nizous)
அழுகை
உள்ளே இருந்து
உலகுக்கு வந்த பிள்ளை
பிஞ்சு வாய் திறந்து
பேசிய முதல் மொழி
அழுகை
பச்சை வயிற்றினிலே
பசிக்குதும்மா என்பதனை
உம்மாவுக்கு மட்டுமே
உடனடியாய் புரியுமாறு
சிறு மழலை சொல்லும்
சீக்ரட் கோடிங் மொழி.
அழுகை
தூக்கம் வருகிறது
தூக்கி வெச்சிக்கோ
நுளம்பு கடிக்கிறது
எழும்பி இருக்க வேணும்
நன்னா குடிக்க வேணும்
ஒண்ணுக்குப் போயிட்டன்
அத்தனை விடயத்தையும்
அடுத்தவர்க்கு அறிவிக்க
கொஞ்சும் பிள்ளைகளின்
கொமுனிசேஷன் சிஸ்டம்.
அழுகை
அஞ்சாறு வயதுகளில்
செஞ்ச தவறுக்கு
பிஞ்சு போக படும் போது
கெஞ்சலுடன் வரும் ஓசை.
அழுகை
பட்ட காயத்திலே
கட்டுப் போட்டுவிட்டு
ஊசி போடும் நேர்ஸின் முன்
பேசுகிற தேசிய கீதம்.
அழுகை
எதிர்பார்த்த பாடத்தில்
எக்ஸாமில் பெய்லாக
மாணவி வர்க்கம்
மற்றவர்க்குத் தெரியாமல்
கட்டிலில் தலையணைக்கு
காட்டுகின்ற சோகம்.
அழுகை
நம்ம ஆளு என்று
நம்பி இருந்த பொண்ணு
உம்மா சொன்னான்னு
ஒருத்தனுக்கு கழுத்த நீட்ட
தம்பி கடற்கரையில்
தனிய இருந்து கொண்டு
நம்பிக் கெட்டேண்ணு
வெம்பி வெடிக்கும் செயல்.
அழுகை
வாப்பாவை உம்மாவை
வாழ்ந்த உறவுகளை
கூப்பிட்டு மரணம்
கூட்டிக் கொண்டு போக
கடந்த காலங்கள்
கண் முன் ஓடி வர
உடைந்த உள்ளங்கள்
உருகி ஓட்டுவது.
அழுகை
அல்லாஹ்வைப் பயந்து
அதிகாலை எழுந்து
உள்ளத்தால் வருந்தி
ஒவ்வொரு தப்பினையும்
சொல்லிக் கேட்கின்ற
சுத்தமான தெளபாவில்
சுரக்கின்ற அழுகையே
எல்லா அழுகையிலும்
எற்றம் மிகுந்த அழுகை

