(குருநாகல் நிருபர்)
மாவத்தகம பொலிஸ் பிரிவில் கைத்தொழில் பேட்டையில் அமைந்துள்ள பொலிதீன் தொழிற் சாலை மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீயினால் சுமார் 60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இந்த மின் ஒழுக்கு இன்று (16.10.2016) பி. ப 12.15 மணி அளவில் இடம்பெற்றது. உடனடியாக விரைந்த தீ அணைப்புப் படையினரின் உதவியுடன் தீயை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்த போதும் எந்த பயனும் கிட்ட வில்லை. தொழிற்சாலை முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளது.
பல கோடி ரூபா பெறுமதியான இயந்திர உபகரணங்கள் மற்றும் மூல தனப் பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைப்பதற்காக குருநாகல் மற்றும் கண்டி மாநகர சபைச்குச் சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் வருகை தந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணித்தியாலயங்கள் போராடியும் இந்த தீயை முற்றாக கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இந்த தொழிற் சாலையில் 140 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேவையாற்றி வருகின்றனர். இன்று விடுமுறை தினம் காணரமாக குறைந்தளவு எண்ணிக்கையிலான தொழிலாளர் பணிபுரிந்துள்ளனர். எந்த விதமான உயிர்ச் சேதங்களும் ஏற்பட வில்லை.
காலை 9.00 மணி அளவில் மின்சாரம் தடைப்பட்டு மீண்டும் பி .ப 12.15 அளவில் வழமைக்குத் திரும்பியது. இந்தச் சந்தர்ப்பத்திலேயே சிறு புகையுடன் தீ பற்ற ஆரம்பித்துள்ளதாக அங்குள்ள பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடாபான மேலதிகமான விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இக்பால் அலி








