வலம்புரி கவிதா வட்டத்தின் வருடாந்த விழாவும், கௌரவிப்பும், பாராட்டும், கவியரங்கும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் 17-7-2016 ஞாயிற்றுக்கிழமை காலை வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் விசேட அதிதியாக கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி அனூஷா கோகுல பிரனாந்து கலந்து கொண்டார்.
இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர், நாவலர் நற்பணி மன்றத் தலைவர் கருணை ஆனந்தன், புரவலர் அப்துல் கையூம் ஆகியோர்; கௌரவ அதிதிகளாகவும் பூபாலசிங்க புத்தக நிலைய உரிமையாளர் ஸ்ரீதர்சிங், அஸீஸ் மன்றத் தலைவர் அஸ்ரப் அஸீஸ், சிரேஷ்ட வானொலி கலைஞர் எம்.எஸ்.எம். ஜின்னா ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
விசேட உரையாற்றிய பணிப்பாளர் திருமதி அனூஷா கோகுல பிரனாந்து தனது உரையை பலத்த கைத்தட்டல்களுக்கு நடுவே தமிழிலேயே தொடங்கினார். தொடர்ந்து சிங்களத்தில் உரையாற்றிய அவர்,
' இவ்வாறான ஒரு தமிழ் நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. வகவம் என்ற இந்த கவிஞர்களின் அமைப்பை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக நான் காண்கிறேன்.
அடுத்த வருடம் நடக்கும் வகவ வருடாந்த விழாவுக்கு கலாசார திணைக்களம் அனுசரணை வழங்கும்.
எமது கலாசார நிகழ்வுகளில் தமிழ் முஸ்லிம்கள் பங்கெடுப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.
பத்து சிங்கள கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்தும், பத்து தமிழ் கவிஞர்களின் கவிதைகளை சிங்களத்தில் மொழி பெயர்த்தும் ஒரு கவிதை நூல் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறோம். அதற்கான பணிகளில் வகவமும் எம்மோடு இணைந்து பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுகிறேன். இம்முறை கலாபூஷண விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். சிங்கள கலைஞர்களோடு 70 தமிழ்க் கலைஞர்களுக்கும், 25 முஸ்லிம் கலைஞர்களுக்கும் விருது வழங்குகிறோம். முஸ்லிம் கலைஞர்கள் 24 பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் ஒருவருக்கு வெற்றிடம் உள்ளது. அதற்காக தகுதி வாய்ந்த முஸ்லிம் ஒருவரை சிபார்சு செய்யுமாறு வகவத்திடம் கேட்டுக்கொள்கிறேன். வலம்புரி கவிதா வட்டத்தின் வளர்ச்சிக்கு எமது திணைக்களம் என்றும் துணை நிற்கும்' என தெரிவித்தார்.
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஸ்தாபக உரையை ஸ்தாபக உறுப்பினர் கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ.நாகூர் கனி நிகழ்த்தினார்.
வகவத்தின் வளர்ச்சிக்காகவும்,; கவிதை இலக்கியத்திற்கும் இன்றுவரை அரும்பாடுபட்டுவருபவரும், வகவ தேசிய அமைப்பாளரும், 'கவின்' சஞ்சிகை ஆசிரியருமான கவிஞர் கலா விஸ்வநாதன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவருக்கான கௌரவிப்பு உரையை வகவ ஸ்தாபகத் தலைவர் டாக்டர் தாஸிம் அகமது மேற்கொண்டார்.
உலக கவிதை தினம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மிக பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டபோது அங்கே மூத்த தமிழ் கவிஞர்கள் இருவருக்கு சிங்கள கவிஞர்களுக்கு வழங்கப்பட்டது போன்றே 'காவ்யாபிமானி' விருது வழங்கி, இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பொற்கிழி வழங்கி கௌரவித்தமைக்கும் தமிழ் கவிஞர்களின் கவிதை தொகுப்பொன்று வெளிவர காரணமாய் அமைந்ததற்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக பணிப்பாளர் அனூஷா கோகுல அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி நினைவு கேடயமும் வழங்கப்பட்டது.
கலாசார திணைக்கள கூட்டத்தில் மூத்த தமிழ் கவிஞர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் கவிஞர்களின் கவிதை தொகுதியும் வெளியிடப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து 82 தமிழ் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்த கவிஞர்கள் மேமன்கவி, வதிரி சீ. ரவீந்திரன் ஆகியோரும் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டப்பட்டனர்.
உலக கவிதை தின விழாவில் 'காவ்யாபிமானி' பட்டம் பெற்ற கலைவாதி கலீல் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். மற்றொரு கவிஞரான கல்வயல் குமாரசாமி சுகயீனம் காரணமாக சமுகமளித்திருக்கவில்லை.
இவர்களுக்கான கௌரவிப்பு பாராட்டு உரையை தமிழ்த் தென்றல் அலி அக்பர் ஆற்றினார்.
வலம்புரி கவிதா வட்டத்தின் மீள் ஆரம்பத்தில் பின் நடைபெற்ற 28 கவியரங்கங்கள் பற்றிய 'வகவப் பதிவுகள்' என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலின் முதல் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமருக்கு வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் கையளித்தார்.
'சிங்கள தமிழ் கவிதை உறவுகள் ' எனும் தலைப்பில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்ட இலக்கிய செயற்பாட்டாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஹேமச்சந்திர பத்திரன சிறப்புரையாற்றினார். ஆழமான அவரது உரை சபையின் பாராட்டைப் பெற்றது. செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈழ கணேஷின் நன்றியுரையோடு முதல் அமர்வு நிறைவு பெற்றது. இரண்டாவது அமர்வில் கவிஞர் மேமன்கவியின் தலைமையில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வகவக் கவிஞர்கள் ரவூப் ஹசீர், எம்.ஏ.எம். ஆறுமுகம், வதிரி சீ. ரவீந்திரன், கலையழகி வரதராணி, எஸ்.தனபாலன், ரி.என்.இஸ்ரா, இப்னு அஸூமத் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா நிகழ்வுகளை இளநெஞ்சன் முர்ஷிதீன், இந்துஜா சிவலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


