'கிழக்கின் எழுச்சி ' அமைப்பினரின் ஊடகவியலாளர் மாநாடு.

Written By avathani Media Network on Saturday, July 30, 2016


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

'கிழக்கின் எழுச்சி' அமைப்பினரின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை சாய்ந்தமருது பரடைஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.


'கிழக்கின் எழுச்சி' அமைப்பின் தலைவர் வபா பாறூக் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகத்தின் புத்திரரும், கிழக்கின் எழுச்சி அமைப்பின் பிரதித் தலைவருமான அலி சப்றி ஹசன் அலி, முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரின் புத்திரரும், கிழக்கின் எழுச்சி அமைப்பின் செயலாளருமான அசூர் சேகு இஸ்ஸதீன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.


'கிழக்கின் எழுச்சி' அமைப்பின் தலைவர் வபா பாறூக் இங்கு கருத்துத் தெரிவிக்ககையில்:- 'மைத்திரி, றணில் அரசு விரைவில் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க இருக்கிறது. இதில் வடக்கையும், கிழக்கையும் முஸ்லிம்களின் ஆதரவோடு இணைத்துத் தரவேண்டும் என சம்பந்தன் ஐயா கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்குச் சாதகமான முறையில் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் செயற்படுவதை அறிய முடிகிறது. 18வது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக மஹிந்தவுக்கு வாக்களிப்பதற்காக பணம் வாங்கப்பட்டதாகப் பேச்சுக்கள் அடிபடுவது போல் வடக்கையும்,கிழக்கையும் இணைப்பதற்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ஹக்கீம் தலைமையிலான அரசியல்வாதிகள் இணங்கிப் போவார்கள் என்ற அச்சம் இன்று கிழக்கு மக்களிடம் காணப்படுகிறது. வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்கு எந்தத் தேவையும் கிடையாது. வடக்கு வடக்காக இருக்க வேண்டும். கிழக்கு கிழக்காக இருக்க வேண்டும். வடக்குக் கிழக்கு இணைப்பை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்தார்.


கிழக்கின் எழுச்சி அமைப்பின் பிரதித் தலைவர் அலி சப்றி ஹசன் அலி இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ' நாம் பல்வேறு தியாகங்கழுக்கும், இழப்புக்களுக்கும் மத்தியில் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்று அது ஒரு தனிமனிதனின் பிடிக்குள் சிக்குண்டு, அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு மத்தியில் திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையையை மாற்றி, ஒருதனிமனிதனின் தலைமைத்துவத்திலிருந்து விடுபட்டு, மசூறா சபையின் கட்டுப்பாட்டுடன் செயற்படக் கூடிய ஒரு சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்கி, முஸ்லிம் காங்கிரசைப் பாதுகாக்கவே நாம் இவ்வியக்கத்தை உருவாக்கியுள்ளோம். எனத் தெரிவித்தார்.


கிழக்கின் எழுச்சி அமைப்பின் பொதுச் செயலாளர் அசூர் சேகு இஸ்ஸதீன் கருத்துத் தெரிவிக்கையில்:- 'முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் உதயமாகிய அமைப்பு என்பதால் இதற்கு 'கிழக்கின் உதயம்' என்று பெயர் வைத்துள்ளோம். அதற்காக இது கிழக்கிற்கு வெளியே உள்ளவர்களைப் புறந்தள்ளிய ஒரு அமைப்பல்ல. முஸ்லிம் காங்கிரஸ் எப்படி கிழக்கில் உதயமாகி, நாடு முழுவதும் வியாபித்ததோ, அதே போன்று இந்த கிழக்கின் எழுச்சியும் நாடு முழுவதும் வியாபிக்கும் என்பதில் ஐயமில்லை. தனிமனிதனின் சர்வதிகாரத்திலுள்ள தலைமைத்துவத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மீட்டு, இக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனிக் கட்சிகள் அமைத்துச் செயற்படும் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழ் தேசியம் போன்று, முஸ்லிம் தேசியத்தை நோக்கிப் பயணிப்பதே எமது இலக்கு' எனத் தெரிவித்தார்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.