ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அமைச்சர் ஹலீம் வேண்டுகோள்

Written By avathani Media Network on Monday, July 4, 2016


(இக்பால் அலி)

நல்லாட்சி அரசில் சிறுபான்மையின மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும் சமீப காலமாக  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரா தேரரின் கருத்துகள் நடவடிக்கைகள் கடந்த காலத்தில்  இடம்பெற்ற சம்பவங்களை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன. எனினும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர முழு நாட்டினுடைய பௌத்த மக்களுடைய கருத்தல்ல.  இது இன்னமும் தொடர்ந்து கொண்டே இருப்பது முஸ்லிம் மக்களின் மனதைப் புண்படுத்துவது மட்டுமல்ல கவலையளிக்கின்ற விடயமாகவும் இருக்கிறது எனவும் இதற்குரிய  சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டி நேரடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரிடம் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை 30 -06-2016 பிரதமரின் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட இப்தார் வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம ரனில் விக்கிரமசிங்க ஆகிய இருவரிடமும் முஸ்லிம் சமயம கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் என்ற வகையில் இந்தச் சந்தர்ப்பத்தில் பொது மக்களின் வேண்டுகோளை நேரடியாக தாம்  முன்வைத்துக் கலந்துரையாடியதாக அமைச்சர் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் 
கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கும் , முஸ்லிம் மதத்திற்கும் எதிராக நிந்தனை செய்யும் நடவடிக்கைகள், போலியான பரப்புரைகள் இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தர்கா டவுன் சம்பவத்தினைப் போல மஹியங்கனையையும் நடத்திக் காட்வோம் என்று சூலுரைக்கும் வகையிலான அதிர்ச்சி தரும் கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம் மக்களின் மனதை புண்படுத்தி வருவது  இன வன்முறைக் கலாசாரத்திற்கு மேலும் வழிகோலும் நடடிவக்கைக்கு  உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் குறித்த இனவாத சக்திகளின் செயற்பாடுகள் குறைந்துள்ள போதிலும் அதற்கான முழுமையான முற்றுப் புள்ளி வைக்கப்பட வில்லை .எனவே இது முற்றாக இல்லாதொழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து நாடு ஜனநாயகத்தின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் நல்லாட்சியை சீர் குலைப்பதற்கான தீய சக்திகள் சூழ்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான தீய சக்திகளின் செயற்பாடுகளை  தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி தம் கருத்தினை நேரடியாகப் பகிர்ந்து கொண்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.