(எம்.எம்.எம் நூறுல்ஹக்)
உத்தேசிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்துவதோடு அதில் உள்வாங்குவதற்காக கருத்தறியும் நோக்கில் முழு நாள் செயலமர்வொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்க்கிரஸ் கடந்த 21.04.2016 வியாழக்கிழமை மட்டக்களப்பு லகூன் ஹோட்டலில் நடாத்தியது நாம் அறிந்ததே.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சிப்பதவி நிரல் செயற்பாட்டளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சிப்பிரமுகர்கள் என அழைக்கப்பட்டிருந்தனர். பொதுவான நமது சமூகத்தளத்தில் உள்ள புத்திஜீவிகள், புலமைசார் ஆளுமைகள் என அடையளப்படுத்தும் வகையிலான நபர்கள் இந்த கலந்துரையாடலில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
உத்தேச புதிய அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கோரப்பட்ட கருத்துப்பதிவுகள் யாவும் முடிவுற்று ஓய்ந்த பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுகுறித்து தெளிவுபடுத்தும் கூட்டத்தை ஒழுங்கு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் அமைப்பு தொடர்பில் இறுதி முடிவை எடுப்பது நாடாளுமன்ற அரசியல் அமைப்பு நிர்ணய சபை என்ற வகையில் நமது மக்கள் பிரதி நிதிகள் தீர்க்கமான முடிவுகளை முன்மொழிவதற்கான ஒரு சந்தர்ப்பம் அல்லது இடைவெளிக்காலம் இருக்கும் தருவாயில் இவ்வாறான முனைப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்றென்றுதான் கூற வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏற்பட்ட உத்வேகத்தைப்போல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் மேற்கிளம்பி உள்ளது. இதன் காரணமாக தீர்வுகளின் முன்மொழிவுகள் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தறிதல் எனும் படலங்களும் விரிவுபடுத்தப்படுகின்றன.
அதே நேரம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நமது மக்கள் பிரதி நிதிகளும் ஒன்றிணைந்து இன்னும் இரு வாரத்தில் தமது முன்மொழிவுகளை சம்ர்ப்பிக்க இருப்பதாகவும் செய்திகள் புறப்படத்தொடங்கி இருக்கின்றன.
மறுபுறம் நீண்ட இடைவெளிகளுக்கு பின்னர் புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டு புத்துணர்ச்சி பெற்றது போன்ற ஒரு பிரமிப்பை நமக்கு ஏற்படுத்தும் வகையில் தேசிய காங்கிரஸும் அதன் தலைவர் எ.எல்.எம்.அதாவுல்லாவும் தமது பங்குக்கு கடந்த 23-04-2016 இல் பேராளர் மாநாடு என்ற வகையில் சில தீர்வுகளை பிரேரணையாக நிறைவேற்றியிருக்கின்றார்.
இவை எல்லாவற்றையும் கூட்டுமொத்தமாக வைத்து நாம் நோக்கினால் உத்தேச புதிய அரசியல் அமைப்புக்கு நமது மக்கள் சார்பான தேறிய கருத்துக்கள் சபைப்படுத்தப்படும் என்ற ஒரு நம்பிக்கையை நமக்குள் கட்டமைத்து வைத்திருக்கின்றது.
நமது அரங்கில் இயங்கி வருகின்ற நமக்கான தினிக்கட்சிகளில் இந்த முன்வருகை என்பது சற்று முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும் என்கின்ற ஆதங்கம் நமக்குள் ஏற்படுவது தவறல்ல. ஏனெனில் பொது மக்களினதும் பொது அமைப்புக்களினதும் குடியியல் சமூகத்தினதும் கருத்து சமர்ப்பிப்பும் ஒரே கோணம் கொண்டதாக அமையவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு போதிய தெளிவூட்டல், விழிப்பூட்டல் என்பன முறையாக முன்னெடுக்கப்பாடாமையாகும்.
அந்த வகையில் இன்றெழுந்துள்ள எழுச்சி அல்லது சமூக அக்கறை மீதான ஆர்வ உரம் சற்று காலம் பிந்தி பிறந்திருந்தாலும் காலம் கடந்துவிடாத நிலையில் ஏற்பட்டிருப்பது நமக்கு ஆறுதலான விடயமாகும். அதுகூட சரியான முறையில் பிரயோகிக்கப்படும் அடைவுமட்டத்தை எய்திக்கொள்ளும்போதே இவ் எழுச்சிக்கோர் அர்த்தம் இருக்கும்.
நமது நாட்டைப்பொறுத்தவரை முஸ்லிம் மக்களாகிய நாம் மூன்று கோணங்களில் இருப்புக்கொண்டுள்ளோம். அதற்கேற்ற்வகையில்தான் நமது மக்களின் பிரச்சனைகள் வேறுபட்டுக்காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் முஸ்லிம்களின் பிரச்சனைகள், வடக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சனைகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் பிரச்சனைகள் என இவை மூன்று வகைப்படுகின்றன.
இந்த இயல்புக்கு ஏற்ப நமது பிரச்சனைகளின் தீர்வுகளை அடையாளம் காணவும் அவற்றுக்கான நிவாரணங்களை பெறவும் மூன்று குழுமங்களாக செயற்பட்டு அறுதியும் உறுதியுமான தீர்க்கமான தீர்வுகளை எட்டி, அதனை ஒரு முகமாக முன்வைக்கும் பொறிமுறை நமக்குள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதனை செய்வதற்கு நாம் தவறிய காரணத்தினால் நம்மத்தியில் இயங்கி வந்த அமைப்புக்கள் அவற்றுக்கு எட்டிய வரையில் காணப்பட்ட முன்மொழிவுகளை உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தம் அல்லது மாற்றம் பற்றிய கருத்தறிதல் குழுவிடம் சர்ப்பித்தும் உள்ளனர்.
ஏற்கனவே இதுகுறித்த தெளிந்த சிந்தனையுடன் இதுபற்றி ஆராயப்பட வேண்டும் என்ற கருத்துக்களை எம்போன்ற விமர்சகர்களினால் பல்வேறு தளங்களில் சுட்டிக்காடியிருந்தும் அவற்றினை புறக்கணித்ததன் விளைவுதான் குறுகிய கால இடைவெளிக்குள் மாற்றம் தேடி புறப்பட வேண்டிய அவசியத்தை அவசரமாக நம்முன் நிறுத்தியிருக்கின்றது.
காலம் கடந்துவிடாத ஒருசூழலில் தமது கட்சிகளுக்கும் மக்கள் பிரதி நிதிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் தேடல் குறித்தான ஆர்வம் மங்கிக்கொள்ளாத நிலையில் சரியான அனுகுமுறைமையில் முன்னெடுக்கப்படவேண்டும். இன்றும்கூட ஆளுக்கொரு தெருவில் எம்மை அழைத்துச்செல்லும் அளவில்தான் இந்த எழுச்சி அல்லது வழிகாட்டல் தோற்றம் பெற்றிருக்கின்றதே தவிர, கூட்டுமொத்தமான ஒரு இணைப்பு முறைமையில் உருவாகாமை நமக்கு கசப்பான பக்கமே.
தனியான முஸ்லிம் அரசியல் கட்சிகளெல்லாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாம் சொன்னால்; உடனே அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏதிரான சதிக்கதையாடல் என துள்ளிக்குதிக்கின்ற ஒருசிலர் நம்மத்தியில் இருக்கின்றனர். அவர்களிடம் பினவரும் கேள்விகளை நாம் கேட்கவேண்டும் போலிருக்கின்றது. அதற்கு அவர்கள் விடை தருகின்றார்களா? இல்லையா? என்பது நமக்கு முக்கியம் அல்ல. நமது மக்கள் நியாயங்களை புரியத்தொடங்கினால் அது போதுமானது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தாங்கி அனைத்து தனி முஸ்லிம் கட்சிகளையும் முஸ்லிம் சமூகத்தின் நலன் குறித்தான விடயங்களை வரையறுத்து அதனை அடைந்து கொள்ள ஒரு பொது வேலைத்திட்டமாக்கிக்கொண்டு செயற்பட இதுகாலவரை முயற்சி எதுவும் எடுக்காதிருப்பது ஏன்? அதற்கான காலம் சூழ்ந்திருந்தும் இது குறித்து அக்கறையின்றி இருப்பதன் மர்மம்தான் என்ன?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனித்துச் செயற்பட்டு சாதனையாக புரிந்த செயற்திட்டங்கள் எவை எவையென அடையாளப்படுத்தி வரிசைப்படுத்தும் வகையில் இருக்கின்றாரா? என்றால் இல்லை என்ற பதிலைத்தான் பெற முடிகின்றது. ஆகக்குறைந்தது சமூகத்தளத்தில் சாதித்த ஒருவிடயத்தையாவது சொல்லிக்காட்டும் படியாக உள்ளதா?
ஆட்சிகளுக்கு முண்டு கொடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் பலமுறை பிரயோகித்துக்கொண்டார். அந்த நேரங்களில் ஆவது பேரம் பேசுதலுக்கு அர்த்தம் பெறக்கூடிய அந்த தருணங்களையாவது நமது மக்கள் பிரச்சனைக்கு உபயோகித்துக்கொண்டாரா என்றால் அதுவும் இல்லையென்ற பதிலாகவே எஞ்சுகின்றது.
இப்படிப்பட்ட ஒரு கட்சி நமக்கு எதற்கு? "பழைய பிடவை பெட்டிக்கு சிறப்பு" என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்ப நமது மக்களின் மனதிலும் நீண்டகாலமாகவும் பெரும்பாலானவர்களிடமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நமது கட்சி என்ற உறுதிப்பாடு நிலைப்பேறாக ஆனதினால், எதுவும் கேட்காதும் எதுவும் செய்யாவிட்டாலும் பெட்டிச்சிறப்பு போல் வைத்து அக்கட்சியை நாம் அழகுபார்ப்பதைதத்விர நாம் வேறென்ன செய்து கொண்டிருக்கின்றோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்ய வேண்டிய நமது கட்சிகள் அனைத்தையும் நமது மக்கள் பிரதி நிதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியின் முன்னெடுப்பாக முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று அவர்களிடமிருந்து குரல் எழுப்ப படாமையினால்தான் அது வேறு திசையிலிருந்து பெரும் குரலாக ஒலிப்பதன் பின்னணி ஆகும்.
முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு தேவையானதொரு சூழலில் அதனை முன்னிறுத்தி வழி நடாத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆயத்தமாக இல்லாத கரணத்தினால்தான் இந்த நிலையை எய்துகின்றது என்பதை நாம் புரியத்தொடங்கினால் இக்கோஷம் அல்லது எதிர்பார்ப்பு என்பது சமூக நலன் சார்ந்த விடியலுக்கான வாசல் என்பது துலங்குவதுடன் ; மு.காவை அழிப்பதற்கான சதிப்புரட்சி என்ற பிதற்றலான கூற்றுக்கள் வெறும் புரளியான தொடக்கம் என்பது வெளிப்பட்டு விடும்.
அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் நடாத்திய கருத்தரங்கு செயற்பாடு கூட பல சந்தேகங்களை நம்மத்தியில் ஏற்படுத்துவதற்கு வழியாக்கியிருக்கின்றது. இப்படி நாம் சொல்வதினால் இதனை வெறும் மு.காவின் எதிர்ப்புக்கதையாடல் என தூரமாக்கி வைப்பதற்கு எம்மில் பலர் தயாராகிவிடுகின்றனர். இதுதான் நமது சமூகம் பின்னடைவை எட்டுவதிலிருந்து விலகிவிட முடியாது ஆக்கப்பட்டிருப்பதன் இரகசியமாகும்.
சொல்பவனைக்கவனியாது சொல்லைக் கவனி என்ற அலி (ரழி) அவர்களின் கூற்று வழிநின்று நாம் நமது சிந்திப்புத்தளத்தை விரிவு படுத்தும் போதுதான் நமது சுயத்தின் இழப்பிற்கு மு.கா எவ்வளவு கெடுதிகளை செய்திருக்கின்றது என்பது துலங்கத்தொடங்கும்.
நமது மு.காவை பொறுத்தவரை சட்டத்தரணிகள் நிறைந்த ஒரு கூடாரம் என்ற வர்ணிப்பு அன்றும் சரி இன்றும் சரி இருந்துகொண்டே இருக்கின்றது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அதன் உதவி பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் சட்ட முதுமானிகள் ஆவர். எம்.எச்.எம் ஹரீஸ், சல்மான், பாயிஸ், ஆரிப் சம்சுதீன் போன்ற சட்டத்தரணிகளும் மு.காவினுள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.
அப்படி இருந்தும் கட்சிக்கு வெளியிலிருந்து சட்டத்தோடு தொடர்புடைய வனவாளர்களை கொண்டு வரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் மு.காவிற்கு ஏற்பட்டிருந்தால் அதற்கு இசைவாக நமது முஸ்லிம் தளத்தில் உள்ள சட்டப்புலமை உடையவர்களை அடையாளம் கண்டு அழைத்து வந்திருக்க வேண்டும். இதற்கு புறம்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எ சுமந்திரனை மட்டு நகரில் நடைபெற்ற செயலமர்வுக்கு கூட்டி வந்திருப்பது ஒரு கூடாத செயலாகவே பார்க்க வேண்டியும் இருக்கின்றது.
எது எவ்வாறு இருப்பினும் நமது மு.கா கட்சி பிரமுகர்களுக்கு தெளிவூட்டல், அவர்களின் கருத்தை அறிதல் என்ற இலக்கில் நடாத்தப்படும் ஒரு செயலமர்வு திறந்த வெளியாகவும் நமது சுயமான கருத்துக்களை எந்த விதமான தயக்கமும் இல்லாத நிலையில் வெளிப்படுத்தும் சூழல் அங்கு ஏர்படுத்தப்பட்டிருப்பது முக்கியமானது. இதற்கு நேரெதிரான சந்தர்ப்பங்கள்தான் அந்த செயலமர்வில் கட்டமைக்கப்பட்டிருந்தது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த செயலமர்வுக்கு அழைக்கப்பட்டது மாபெரும் தவறாகும். ஏனெனில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே விதமான நசுக்குதல்களுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் பல விடயங்களில் வேறுபட்ட நசுக்குதல்களை தனித்தனியாக இவ்விரு சமூகங்களும் அனுபவிக்கின்ற ஒரு நிலைமை பௌத்த-சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
அதே போன்று குறிப்பாக முஸ்லிம்கள் மீது தமிழ் மக்களின் தரப்பிலிருந்து ஆயுதம் ஏந்திய அனைத்து போராட்ட குழுக்களாலும் இம்சிக்கப்பட்டது போன்றே அம்மக்களில் இருந்து தோற்றம் பெற்ற அகிம்சை போராட்டம் குணாம்சம் கொண்ட மிதவாத போக்குடைய தமிழ்க்கட்சிகளும் பல அமைப்புக்களும் அடர்ந்தேறுதல்களை நம்மீது பாய்ச்சியிருக்கின்றனர். இப்படிப்பார்த்தாலும் நமக்கான பிரச்சனைகளில் காரணமாகின்ற காரணியுடன் தொடர்புபட்ட கட்சிக்குரிய நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனை வைத்துக்கொண்டு எப்படி நமது சுதந்திரமான அபிலாசைகளை, மாற்றுத்தடங்களை குறித்து உரத்துச் சொல்வது?
இப்படியான இக்கட்டான சூழல் ஒரு பக்கம், அங்கு வருகை தந்திருந்த பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரினதும் கையடக்க தொலைபேசிகளை நிறுத்தி வைக்கப்பட்டு மண்டபத்திற்கு வெளியே கையளிக்க பணித்தது எந்த வகையில் சரியானது? இது நமது பிரச்சனைகளை தெளிவுபடுத்துவது, அதற்கான உள்வாங்குதல்களை பெறுவதுமென்றால், இது இரணுவ யுத்த திட்டமிடலுக்கு ஒப்பானதல்ல, மூடிய அறைக்குள் பேசப்பட வேண்டியதும் அல்ல. ஆனால் அங்கு நமது மக்கள் பிரசன்ணம் மட்டுமே இருந்திருக்க வேண்டும் . இது தவிர்க்கப்பட்டது ஏன்?
எங்கையோ தீர்மானிக்கப்பட்ட ஒரு தீர்வுப்பொதியை நமது மக்களிடமும் விநியோகிப்பதற்காக நடாத்தப்பட்ட ஒரு விளம்பரத்தன்மையை ஒத்ததாகவே இந்த செயற்பாட்டை நாம் நோக்க வேண்டியிருக்கின்றது. உண்மையில் நமது பிரச்சனைகள் சில தமிழர் தரப்புடன் தொடர்புபடுகின்றது என்பதற்காக அவர்களை வைத்துக்கொண்டு நமது தீர்மானங்களை எடுக்க முடியாது. ஒரு எதார்த்தத்தை நாம் மறந்துவிடக்கூடாது. இதனை சரியாக விளங்கிவதினால்தான் தலைவர் ரவூப் ஹக்கீமினால் மட்டக்களப்பில் கூட்டப்பட்ட கருத்தாடலில் குறுகிய அல்லது மறைமுக கரங்களின் தொழிற்பாடும் சம்பந்தப்பட்டிருப்பதை சரியாக புரிந்து கொள்ள முடியும்.
பிரச்சனைக்கான தீர்வுகளை ஏற்றுக்கொண்டு ஒரு முடிவுக்கு வருவதென்பது நாட்டின் அரசாங்கத்தின் பக்கம் உள்ள செயற்பாடாகும். அவர்களுக்கென்று ஒரு இலக்கும் நோக்கும் எமது சிந்தனைக்கு புறம்பாக இருந்தாலும் தீர்மானிக்கும் சக்தி அரசாங்கம்தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தமிழர் தரப்பும் தமது தீர்வை நம்மைக்கூட்டி வைத்துக்கொண்டு தீர்மானிக்கவில்லை. அவர்களுக்கு வசதியானதும் சரியானதும் எனப்படுவதை நமது திட்டங்களாக அரசாங்கத்திடம்தான் முன்வைக்கின்றனர். அது போன்று தமது முஸ்லிம் சமூக செயற்திட்டங்களையும் அரசாங்கத்திடம் தான் சொல்ல வேண்டும். அதுவரை நமது தீர்வுப்பொதிகளை தயாரிக்கும் பங்களிப்புக்களை நாம் மட்டும் பங்குபற்றும் கூடாரத்திலிருந்துதான் காணப்பட வேண்டும்.
பின்னர் நமது தீர்வுப்பொதி, தமிழ்மக்களின் தீர்வுப்பொதி, சிங்கள மக்கள் சார்பான தீர்வுப்பொதி என்று முக்கோணங்களில் சந்திக்கும் அந்த மேசையில்தான் யார் யார் எதை விட்டுக்கொடுப்பது, ஒரு சமூகத்தையும் பாதிக்காத வகையில் எது வழிகாட்டும் என்பதை நிர்ணயித்துக்கொள்ளும் இடத்தில்தான் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சமமான நிலையில் பங்கு பெற வேண்டுமே தவிர அதற்கு முன்னர் நமது தீர்மானிக்கும் இடத்தில் அல்ல.
இந்த கூற்று நமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,முஸ்லிம் அல்லாத ஏனைய சில கட்சிகளுடன் தமது பிரச்சனைகள் குறித்து பேசவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திக்கும் பொருந்தக்கூடியதாகும். முஸ்லிம் அல்லாத மாற்று அரசியல் கட்சி குடியல் சமூகம் என்று இப்போது முஸ்லிம் தரப்பிலிருந்து பேச வேண்டிய எந்த தேவையும் இல்லை.
இப்போதைக்கு நமக்கு இருக்கும் தேவை நமக்குள் பேசி நமக்கு வசதியான, ஏதுவான தீர்வுகளை அடையாளப்படுத்திக்கொள்வதும் அவற்றில் எவற்றை விட்டுக்கொடுக்க கூடாது என்பதிலும் நாம் உறுதியாக இருக்கும் நிலைப்பாடுதான் நமது இன்றைய தேவையாகும்.
MMM.Noorulhagu, 129/b Sainthamaruthu – 05 0772612094

