இந்த வார ஜூம்ஆவும் இனிதே நிறைவேறியது.

Written By avathani Media Network on Friday, April 8, 2016


(மதியன்பன்)

வெள்ளிக் கிழமைதான்
சிலருக்கு பள்ளிக்கிழமை!
இன்று-
ஜூம்ஆவை முடித்து விட்டு
எந்தக் கவலையும் இல்லாமல்
பலர்
இல்லம் வந்து சேர்ந்தார்கள்.

ஒரு மணிநேரம்
உறங்கவும் ஓய்வெடுக்கவும்
உகந்த நேரமாக
பள்ளியை இவர்கள்
பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஓதிய குத்பாவும்
அவர்களை உறங்க வைத்தது.

பள்ளிக்கு வரும்போது
வாயலில் வழங்கிய
அந்த
துண்டுப் பிரசுரங்களையும்
அவர்கள்
உள்ளே வைத்துத்தான்
ஒருவாறு வாசித்து முடித்தார்கள்.

பள்ளிவாயல் உடைத்தது பற்றி
அதற்காக
ஆர்ப்பாட்டம் நடத்தியது பற்றி
கடற்கரைப் பள்ளிக்கு
நமது குமர்கள் போனது பற்றி
இன்னும்
என்னென்னவோ
நமது ஈமானிய இளைஞர்கள்
வெளியிலே நின்று
விலாவாரியாகப் பேசிக் கொண்டார்கள்.

ஹதியா கேட்பவர்களிடம்
சிலர்
காலணிகளைக் கொடுத்துவிட்டு
எப்போது
குத்பா முடியுமென
குறுகுறுத்து நின்றார்கள்.

வீதியோரம்
கையேந்தி நின்றவர்களுக்கு
இன்னும் சிலர்
விருப்பத்துடன் சில்லறைகளை
வீசியெறிந்தார்கள்.

பள்ளிக்குள் சிலர்
பாதித் தூக்கத்தில்
அடுத்தவர் மீது சாய்ந்து
அறிவுரையும் பெற்றுக் கொண்டார்கள்.

முசல்லாவைக் கொண்டுவந்தவர்கள்
கொழுத்தும் வெயிலுக்கு
அதனை
குடையாகப் பிடித்துக் கொண்டு
தொழத் தொடங்கும் வரை
ஹென்போனில் எதையோ
கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இளசுகள் சில
மோட்டார் சைக்கிள்மேல்
அமர்ந்து கொண்டு
பள்ளித் தெருக்களை
பவணி வந்து கொண்டிருந்தது.

'அந்தப் பள்ளிக்குப் போனால்
அழகான பயான் கேட்கலாம்'
ஓதும் குத்பாவைக் 
உற்றுக் கேட்டபின் கேட்டபின்
பள்ளிக்கு வந்த 
இளைஞர் படையொன்று 
தவ்ஹீத் பள்ளிக்கு
தாமாகச் சென்றது

பழைய பல்லவியைப்
பாடிமுடித்தார் பள்ளி கதீப்!
வெளியில் நின்றவர்கள்
உள்ளே வந்து சேர
இந்த வார ஜூம்ஆவும்
இனிதே நிறைவேறியது.
அகோர வெயிலிலும்
பலபேர்
அகப்பட்டுக் கொண்டார்கள்.

நடப்பு விவகாரங்கள்
நமக்கிருக்கும் பிரச்சினைகள்
ஊழல் அநியாயங்கள்
சிர்க்கையும் பித்அத்தையும்;
சிறைப்படுத்தும்
சிந்தனைக் கருத்துக்கள்
ஓதப்படும் பள்ளிகளும்
ஓதுகின்ற உலமாக்களும்
இன்னும் வேண்டும்
இவர்கள் நம்மிடம் 
இல்லாமலுமில்லை 

இவர்களை அணுகுவதும்;
அழைத்து
குத்பாக்கள் கொடுப்பதும்
யார் பொறுப்பு..?

இனிமேலாவது
சிந்திக்கட்டும் 
பள்ளி நிருவாகங்கள்…

(மதியன்பனின் "ஆனாலும் திமிருதான் அவளுக்கு.." கவிதை நூலிலிருந்து..)


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.