தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கடந்த 06.04.2016 அன்று தனது உத்தியோகபூர்வ சமூக வலை தளத்தில் “மதமாற்றங்கள் சகவாழ்வை குழப்புகின்றன” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மத மாற்றம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
இலங்கையின் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் என்ற பாரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளத் தக்க ஒன்றல்ல.
மதம் மாறிக் கொண்ட ஒருவர் பற்றிய ஒரு அறிவிப்பு 06.04.2016 அன்று காலையில் ஒரு பத்திரிக்கையில் வெளிவந்திருந்ததாகவும், அந்த அறிவிப்புக் குறித்து ஒருவர் தனக்கு தொலை பேசி மூலம் தெரிவித்து விட்டு வருத்தப்பட்டதாகவும் கூறியுள்ள அமைச்சர் அவர்கள் அதனைத் தொடர்ந்து குறித்த செய்தி பற்றிய தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஒருவர் விரும்பி ஒரு மதத்தை ஏற்றுக் கொண்டு நடப்பது நாட்டின் சகவாழ்வுக்கு உகந்தது அல்ல என்றும், விரும்பிய மதங்களை கடைப்பிடிக்கும் தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. நாட்டின் இன்றைய சூழலில் நாம் இன, மத, மொழி நல்லுறவுகளை, ஒற்றுமையை, சகவாழ்வை, வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கும்போது, அதற்கு முரணான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.” என்று அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சகவாழ்வு என்பதையே தவறாக புரிந்து கொண்டதின் வெளிப்பாடாகத்தான் அமைச்சரின் இந்தக் கருத்து அமைந்துள்ளது. ஒருவர் தான் விரும்பிய மதத்தை, கொள்கையை, சித்தாந்தத்தை கடைப் பிடிக்க தடை விதிப்பது என்பது எந்த விதத்திலும் மனித உரிமையை மதிப்பதாகவோ, ஜனநாயகத்தை வாழ வைக்கப் பாடுபடுவதாகவோ, சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை மேம்படுத்துவதாகவோ அமையாது. தான் விரும்பிய மொழியைப் பேசவும், மதத்தை பின்பற்றவும், கொள்கையை ஏற்றுக் கொள்ளவும் என்றைக்கு ஒரு மனிதனுக்கு உரிமைகள் வழங்கப்படுகின்றனவோ அன்றைக்கே ஜனநாயகம் உயிர்ப்பெறுகிறது என்று அர்த்தமாகும். இதுதான் சமூக சகவாழ்வுக்கும் வழி வகுக்கும். அதை விடுத்து, “விரும்பிய மதங்களை கடைப்பிடிக்கும் தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்பது ஜனநாயகத்திற்கு நேர் விரோதமான, அடிப்படை மனித உரிமை மீறலாக அமைந்து விடும் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும், மதத்தை, கொள்கையை, சித்தாந்தத்தை பின்பற்றும் பூரண உரிமை வழங்கப்படும் போதுதான் சமூக சகவாழ்வு உயிர்பெருமே தவிர. உரிமைகளை பரித்து உணர்வுக்கும், மத சுதந்திரத்திற்கும் சட்டத்தின் பெயரால் தடை கொண்டு வருவது என்பது அடக்குமுறையின் உச்சத்திற்கு ஜனநாயகத்தை மாற்றுவதற்கு சமனானதாகும்.
1958 காலப்பகுதியில் S.W.R.D.பண்டாரநாயக்கவினால் தமிழ் மொழியினை புறக்கணித்துவிட்டு கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமூலம் எப்படி பல்லாயிரம் அப்பாவி உயிர்களையும் உடைமைகளையும் காவு கொள்ளும் அளவுக்கு 30 ஆண்டுகால கோர யுத்தமாக பரிணாமம் பெற்றதோ அதற்கு நிகரான ஒரு விளைவினைதான் அமைச்சர் மனோ கனேசன் கொண்டு வர விரும்பும் மதமாற்றத் தடைச்சட்டம் உருவாக்கும் என்பதை பொறுப்புணர்வுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றோம்.
"நாட்டின் இன்றைய சூழலில் நாம் இன, மத, மொழி நல்லுறவுகளை, ஒற்றுமையை, சகவாழ்வை, வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கும்போது, அதற்கு முரணான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது” என்று குறித்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
நாட்டின் இன்றைய சூழல் என்று அமைச்சர் குறிப்பிடும் இந்த சூழ்நிலையிலோ அல்லது இதற்கு முன்னரான நாட்டின் சூழலிலோ விரும்பியவர் விரும்பிய மதத்தை பின்பற்றலாம் என்ற அடிப்படை உரிமையை மத மாற்ற தடை சட்டம் என்ற பெயரால் யாரும் மாற்றி விட வில்லை. சக வாழ்வை ஏற்படுத்த அதற்கு உரிய வகையில் அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து “தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர்” என்ற பொறுப்பில் அமர்ந்து கொண்டு இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது சகவாழ்வுக்கும் சமூக ஒற்றுமைக்கும் எதிரானது என்பதை அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர் மனோ அவர்கள் தொடர்ந்தும் தனது கருத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“பெளத்தர்களும் ஆங்காங்கே இஸ்லாத்தை நோக்கி மதம் மாற்றப்படுவதால் அங்கேயும் முரண்பாடு முற்றுகிறது. பெளத்த, இந்து மதத்தவர் மத்தியில் கிறிஸ்தவ மதத்தை நோக்கிய மாற்றங்களும் நடைபெறுகின்றன. கிறிஸ்தவ மதம் என்னும்போது அது மதத்துடன் மாத்திரம் நின்று விடுகிறது. இஸ்லாம் என்று சொல்லும்போது அது ஒரு இனமாக மாறி விடுகிறது.
எனவே மத, இன முரண்பாடுகளால், ஏற்கனவே குழம்பி போயிருக்கும் இந்நாட்டில், இவை தொடர்பில் விழிப்புணர்வு தேவை.
முற்போக்கு சிந்தனை கொண்ட இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்கள் மத்தியில் கலந்துரையாடல் தேவை. மதமாற்ற தடை சட்டங்களும் தேவை.” “மத, இன முரண்பாட்டு சந்தேக உணர்வுகள், சகவாழ்வுக்கு குந்தகம் விளைவிப்பதால், இவை சகவாழ்வு அமைச்சரான எனது அமைச்சு சார்ந்த பிரச்சினை என எண்ணுகிறேன். எனவே இது தொடர்பில் ஒரு அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்கும்படி, இன, மத சகவாழ்வுக்கு பொறுப்புள்ள அமைச்சர் என்ற முறையில் எனது செயலாளருக்கு இன்று நான் கூறியுள்ளேன். என்று குறிப்பிடுகின்றார்.
அமைச்சர் அவர்களின் கருத்துக்களை நோக்கும் யாராயினும் துள்ளியமாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடியும். அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் விரும்புவது மத மாற்றத் தடை சட்டமல்ல, இஸ்லாமிய மத மாற்ற தடை சட்டம் தான் அது என்பதே அந்த விஷயமாகும்.
பௌத்தர்களும், இந்துக்களும் இஸ்லாத்தை நோக்கி வருவதுதான் அமைச்சருக்க பிரச்சினையாகி விட்டதே தவிர கிருத்தவத்தை நோக்கி நகர்வது ஒரு பிரச்சினையாகவே இல்லை. அதனை தனது எழுத்தில் லாவகமாக அமைச்சர் அவர்கள் உள் நுழைத்து விட்டு செல்கிறார்.
“பெளத்த, இந்து மதத்தவர் மத்தியில் கிறிஸ்தவ மதத்தை நோக்கிய மாற்றங்களும் நடைபெறுகின்றன. கிறிஸ்தவ மதம் எனும்போது அது மதத்துடன் மாத்திரம் நின்று விடுகிறது. இஸ்லாம் என்று சொல்லும்போது அது ஒரு இனமாக மாறி விடுகிறது.” என்பதே அந்த கருத்தாகும்.
கிருத்தவ மதத்திற்கு ஒருவர் மாறுவதும் மதத்துடன் முற்றுப் பெருவதாகவும், இஸ்லாத்திற்கு மனம் மாறி மதம் மாறுவது இனமாக மாற்றம் பெருவதாகவும் அமைச்சர் ஆதங்கப்படுகின்றார்.
இஸ்லாம், கிருத்தவம் ஆகிய இரண்டு மதங்களை நோக்கியும் மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் அமைச்சர் அவர்கள். கிருத்தவத்திற்கு ஒருவர் மதம் மாறுவதை சாதாரண ஒரு விஷயமாகவும் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்வதை மாத்திரம் மிகப் பெரியதொரு சர்சையாகவும் சுட்டிக்காட்டுவது என்பது நகைப்புக்குறியதாகும்.
கிருத்தவத்திற்கு ஒருவர் மாறுவது மத அளவில் நின்று விடுவதற்கும், இஸ்லாத்தை நோக்கி வரும் ஒருவர் இனத்துடன் சேர்ந்து பரினமிப்பதற்கும் பல அர்த்தமுள்ள காரணங்கள் உண்டு. உலகில் உள்ள எத்தனையோ மதங்கள் தங்களை மதக் கொள்கையுடன், கடவுள் சித்தாந்தத்துடன் சுருக்கிக் கொண்ட போதும், இஸ்லாமிய மார்க்கம் மாத்திரம் ஒவ்வொரு மனிதனுடைய முழு வாழ்விற்கும் வழிகாட்டும் அனைத்து விதமான வழிகாட்டல்களை வழங்குவதுடன், மனிதனை ஒரு சமூகவாழ் பிரஜையாக மாற்றுகிறது என்பதையும் அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய மதம் என்பது ஆன்மீக அளவிலான வெரும் மதமாக மாத்திரம் இல்லாமல், மார்க்கமாகவும் இருக்கிறது. அதனால் தான் இஸ்லாத்திற்குள் நுழைபவர்கள் இஸ்லாமியர்களுடன் ஒன்றாக கலந்து விடும் நிலை உருவாகிறது.
மேல் ஜாதி, கீழ் ஜாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன், கடவுளின் நெற்றியிலிருந்து பிறந்தவன், கடவுளின் கால் பாதத்திலிருந்து பிறந்தவன், என்று எந்த மனிதனையும் இஸ்லாம் பிரிக்க வில்லை. வணக்கத் தளத்தின் வாசலுக்கும் வர வேண்டாம் என்று ஒரு பிரிவு மனிதர்களையும், வாசல் வரை வரலாம் உள்ளே வராதே என்றும் இன்னொரு பிரிவினருக்கும், உள்ளே வரலாம் கடவுள் இருக்கும் இடத்திற்கு வராதே என்று மற்றுமொரு பிரிவினருக்கும் இஸ்லாம் வணக்கத்திலோ வேறு எந்த வழிமுறைகளிலோ வேறுபாடு காட்டவில்லை. இதுவும் இஸ்லாம் ஒரு இனமாக உங்கள் பார்வையில் தெரிவதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
ஒருவர் இஸ்லாத்திற்குள் நுழைந்து அதன் பின் பள்ளிக்கு தொழுகைக்காக நுழைந்தார் என்றால் அந்த நிமிடமே அவரிடமிருந்த அனைத்து வேறுபாடுகளும் இல்லாமலாகி விடுகின்றது.
பள்ளிவாயலில் தொழும் ஒருவர் தனக்கு அருகில் இருப்பவன் இதற்கு முன் யாராக இருந்தான் என்று பார்ப்பதில்லை. கீழானவன், மேலானவன், தீண்டத் தகாதவன் என்று பாகுபாடு காட்டி ஒதுங்குவதில்லை. ஆகவே தான் இஸ்லாத்தில் நுழையும் ஒருவன் இஸ்லாமியர்கள் என்ற சமூகத்துடனே இணைக்கப்படுகிறார்கள் என்ற பேருண்மையையும் அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமானவழியைச் சொல்கிறது. போலித்தனமில்லாத வழியைக் கூறுகிறது.
”எனக்கு என் மார்க்கம் தான் பெரிது. உன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிட மாட்டேன்”என்பது இஸ்லாத்தின் நிலை
"உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (109:6)
அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின் படி நடப்பதைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும்.
இம்மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாக உள்ளது.
(அல்குர்ஆன் 2 : 256)
இந்த வசனமும் இஸ்லாம் யாரையும் கட்டாய மத மாற்றம் செய்ய சொல்ல வில்லை. அப்படி செய்வதை அனுமதிக்க வில்லை என்பதையும் தெளிவா உணர்த்துகின்றது.
இந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் போது நல்லிணக்கம் ஏற்பட்டுவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மத மாற்ற தடை சட்டம் ஜனநாயகத்திற்கு நேர் விரோதமானது.
ஒருவர் இன்னொரு மதத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. யார் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதையோ, எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதையோ எந்த ஊரில் வாழ வேண்டும் என்பதையோ யாரும் யாருக்கும் திணிக்க முடியாது. விரும்பிச் செய்யும் காரியங்களை தடுக்கவும் முடியாது.
எந்த முஸ்லிமும் எவறுக்கும் இஸ்லாத்தை திணிக்கும் காரியத்தில் ஈடுபட வில்லை. அப்படி திணிப்பது இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு செயலும் கூட.
பணத்தை கொடுத்து, செல்வத்தை கொடுத்து, தொழில் கொடுத்து யாரும் இஸ்லாத்தின் பக்கம் யாரையும் இழுக்க வில்லை. இழுக்கவும் கூடாது என இஸ்லாம் சொல்கிறது இந்த அடிப்படையை தெரியாத அல்லது புரியாத காரணத்தினால் கூட அமைச்சர் அவர்கள் இத்தகைய அடிப்படையற்ற விமர்சனத்தை முன்வைத்திருக்கலாம்.
அத்துடன் மத மாற்ற தடை சட்டம் தேவை என்பது அமைச்சரின் சொந்தக் கருத்தாக இருந்தால் அதில் பிரச்சினை இல்லை. தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிடுவது ஜனநாயத்தை கேள்விக்கும், பலத்த விமர்சனத்திற்கும் உள்ளாக்கும் செயல்பாடாகும்.
ஜனநாயகம் என்பதே அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஒன்றாகும். அடிப்படை உரிமைகளையே கேள்விக்குள்ளாக்கும் விதமாக மத மாற்ற தடை சட்டம் வேண்டும் என்பது எவ்வகையான ஜனநாயகம்?
தான் விரும்பும் ஒரு கொள்கையை ஒருவர் பின்பற்றுவதை தடுக்கும் உரிமையை யாரும் கையிலெடுக்க முடியாது. எடுக்கவும் கூடாது. ஒருவர் ஹிந்துவாகவோ, கிருத்தவராகவோ, முஸ்லிமாகவோ இருப்பது என்பது அவரவர் உரிமையாகும். அடுத்தவர் உரிமையில் கை வைக்கும் காரியத்திலிருந்து அமைச்சர் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், இதற்கு முன் இந்நாட்டில் அடுத்தவர்களின் உரிமைகளைப் பரித்தவர்கள் எந்நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் அமைச்சர் அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்
இறுதியாக அமைச்சர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“எல்லோரும் வெட்கப்பட்டு தவிர்க்கும், இந்த சர்ச்சைக்குரிய விடயத்தைப்பற்றி எவராவது முன்வந்து பேச வேண்டும். நான் இப்போ பேசிவிட்டேன். இனி என்னை கண்டமேனிக்கு திட்டி தீர்க்கலாம்.”
உங்களை திட்டித் தீர்க்கும் எந்தத் தேவையும் எமக்கு இல்லை. அமைச்சர் அவர்களே!
ஒரு கொள்கையைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ எந்த அடிப்படை அறிவும் அற்று பேசுபவர்களுக்கு திட்டுவதினாலோ, சகட்டு மேனிக்கு விமர்சிப்பதினாலோ எந்த இலாபமும் ஏற்படப் போவதில்லையே?
இஸ்லாத்திற்கு ஒருவர் தன்னை மாற்றிக் கொள்கிறார் என்பதை சாதாரண ஒரு கண்ணோட்டத்தில் மதத் திணிப்பு என்று நீங்கள் புரிந்ததைப் போல் பலரும் புரிந்து கொள்கிறார்கள். அவர்களின் தவறான எண்ணத்திற்கு சரியான புரிதலைத் தான் இஸ்லாம் வழங்க சொல்கிறது.
நினைவூட்டலுக்காக உங்களுக்கு ஒரு செய்தியை சொல்ல நினைக்கிறோம்.
மத மாற்றம் தொடர்பில் நீங்கள் பேசியதால் உங்களை திட்டித் தீர்பார்கள் என்று அமைச்சர் ஆகிய நீங்கள் ஆரம்பப் பள்ளி மாணவனைப் போல் கருத்து சொல்லியுள்ளீர்கள். ஆனால் இதற்கு முன்பு ஒருமுறை தனியார் தொலைக் காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற உங்களை இஸ்லாத்தின் அடிப்படையோ குர்ஆன் மற்றும் நபிகளாரின் விளங்களின் வாசனையோ அற்ற அஸ்வர் அவர்கள் சகட்டு மேனிக்கு “முஸ்லிம்கள் பற்றி பேச மனோ கனேசனுக்கு அருகதையில்லை, அப்படி பேச வேண்டும் என்றால் (சுன்னத்) விருத்தசேதனம் செய்து விட்டு வாருங்கள்” என்று கூறி அவமானப் படுத்திய நேரத்தில் அஸ்வரை கண்டித்து உங்களிடம் சமுதாயம் சார்பில் நாங்கள் மண்ணிப் கோரிணோமே? அஸ்வர் எம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதினால் அவரை பாராட்டி உங்களை நாங்கள் தூசிக்க வில்லையே? அஸ்வர் செய்த குற்றத்தை குற்றமென்றும் சுட்டிக் காட்டினோமே? அப்போதெல்லாம் நியாயமாகத் தெரிந்த சமுதாயம் இப்போது மாத்திரம் அநியாயமாக தென்படுவது ஏனோ?
மனோவுக்கு ஓர் அன்பான அழைப்பு.
மதிப்புக்குறிய அமைச்சர் அவர்களே!
உங்களையும் ஏக இறைவனின் பாதைக்கு நாங்கள் அழைக்கிறோம். இஸ்லாத்தையோ இஸ்லாத்தை நோக்கி வரும் மக்களையோ தவறாக நினைத்து கருத்து சொல்வதற்கு முன்பாக இஸ்லாத்தைப் பற்றி படித்துப் பாருங்கள். குர்ஆனை வாசித்துப் பாருங்கள். இந்த உலகுக்கு இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (அவர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டுமாக!) அவர்களின் வழிகாட்டல்களை படித்துப் பாருங்கள். இஸ்லாத்தின் அடிப்படையை படித்துப் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்.
மட்டக்களப்பு மாமாங்கம் கோவில் வீதியை சேர்ந்த உதயகுமார் இந்துமதி என்ற ஒரு பெண் நபர், புனித இஸ்லாம் மதத்தை தழுவிகொண்டு தன் பெயரை உதயகுமார் மபாசா என்று மாற்றிக் கொண்டுள்ளார் என்பதைப் போன்ற அறிவிப்பு 06/04/16/ புதன்கிழமை வீரகேசரி விளம்பர அனுபந்த பக்கம் 02ல் மாத்திரம் வரவில்லை. தினமும் உலகின் பல இடங்களிலும் பல பத்திரிக்கைகளிலும் இடம் பெருகிறது இது போன்ற செய்திகள் இவைகள் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கூறுவதைப் போல் கத்தியைக் காட்டியோ, துப்பாக்கியைக் காட்டியோ, பணத்தைக் காட்டியோ மத மாற்றம் செய்யப்படும் செயல்கள் அல்ல.
மாறாக, குர்ஆனைப் படிக்கும், நபிகளாரின் வாழ்வைப் படிக்கும் மக்களுக்கு இயற்கையாக ஏற்படும் மன மாற்றங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய கலந்துரையாடலுக்கான அமைச்சர் எனும் பொறுப்பான பதவியில் இருக்கும் தாங்கள் பல்லின சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு வளர ஆவண செய்ய விரும்பின், ஒவ்வொரு மதத்தினரும் சக மதத்தினை குறித்தும், அதன் நம்பிக்கைகள், வாழ்வியல் வழிகாட்டல்கள் குறித்தும் தங்களது மனங்களில் படிந்துள்ள ஐயங்களை நேரடியாக கேட்டு நிவர்த்திக்கும் விதமாய் அமையும் நேரடி கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகம் அதிகமாக உங்கள் அமைச்சின் ஊடாக ஏற்பாடு செய்தால் அதுவொன்றே தப்பெண்ணம் களைந்து சகவாழ்வு மலர அடிப்படையாய் அமைய வழிவகுக்கும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உங்கள் அமைச்சு முன்னெடுக்க வேண்டிய இது போன்ற நிகழ்ச்சிகளை தான் காலத்தின் தேவை கருதி தமிழிலும் சிங்களத்திலும் நாடு தழுவிய ரீதியில் செய்து வருகிறது என்பதனையும் இங்கு வினயமாய் குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

