கடந்த 11.03.2016 வெள்ளிக்கிழமை அன்று காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் வட்டார விளையாட்டுப் போட்டி நிகழ்வு நடாத்தப்பட்டதை நாமனைவரும் அறிவோம்.
குறித்த இந்நிகழ்வில் இஸ்லாத்திற்கு முரணான இசைவாத்தியக் கருவிகள் பயன்படுத்தப்பட்ட நிகழ்வானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு அம்சமாகும். முஸ்லிம்கள் செறிந்து வாழும் இவ்வூரில் இது போன்ற மோசமான நிகழ்வை ஆசிரியர் குழாம் ஏற்பாடு செய்திருப்பதை இட்டு நாம் வெட்கமும் வேதனையும் அடைகிறோம்.
பயிர்களைக் காக்க வேண்டிய வேலிகளே அவற்றை மேய்ந்தால் இஸ்லாமியப் பண்பாடுகளுள்ள இளைஞர் சமுதாயத்தை எப்படி கட்டியெழுப்ப முடியும்? என்ற வினாவையும் இங்கு ஆசிரியர் குழாமிடம் நாம் தொடுக்க விரும்புகிறோம்.
சில மாதங்களுக்கு முன்பு காத்தான்குடி மீராபாலிக்கா பாடசாலையில் இது போன்ற மோசமான நிகழ்வு நடைபெற்ற நேரத்திலும் காரசாரமாக எமது கண்டனத்தை வெளியிட்டிருந்தோம். இசை இஸ்லாத்தில் ஹராமானது என்ற விடயம் இவ்வளவு தெளிவாக உலமாக்களால் முன்வைக்கப்பட்டும் அதை அப்பட்டமாக மீறும் வகையில் காத்தான்குடி ஆசிரியர் குழாம் செயற்பட்டிருப்பதானது இஸ்லாத்திற்கும் அதன் கலாசார விழுமியங்களுக்கும் அகௌரவம் ஏற்படுத்தும் செயலாகவே நாம் கருதுகிறோம்.
பேண்ட் இசைவாத்தியங்கள் இஸ்லாத்தில் ஹராம் என்பதுதான் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் மார்க்கத்தீர்ப்பாகவும் உள்ளது. அத்தீர்ப்புதான் இஸ்லாத்தில் சரியான தீர்ப்புமாகும். இந்தத் தீர்ப்பையெல்லாம் காலுக்குக் கீழ் போட்டு மிதிக்கும் வகையில் படித்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் எமதூரில் செயற்பட்டிருப்பதானது எவ்வகையிலும் அங்கீகரிக்க இயலாத செயலாகும். ஒவ்வொருவரும் தங்களது மரணத்தின் போது இப்படி இசை வாசிக்கப்படுவதை விரும்புவார்களா? விரும்பமாட்டார்களே! அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த இச்செயல்களைப் புரிந்து ஏன் பாவங்களை ஆசிரியர் குழாம் சுமந்து கொள்ள வேண்டும்? பாடசாலைகளில் இசை வாசிக்கப்பட வேண்டும் என்பது இலங்கையின் கட்டாயச் சட்டமா? கிடையாதே! பிறகு ஏன் அப்பாவத்தில் ஆசிரியர் குழாம் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?
இந்நிகழ்வுக்கு யாரெல்லாம் ஒத்துழைப்பாக இருந்தார்களோ அவர்கள் அனைவரும் இறைவனிடம் தௌபா செய்து மீள வேண்டும். இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்திலாவது இது போன்ற அநாச்சார நிகழ்வுகளை பாடசாலைகளில் அரங்கேற்றாமலிருக்க ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்பதை அன்பாக இங்கு வேண்டிக் கொள்கிறோம்.

