(முஹம்மது மஸாஹிம்)
அண்மையில் Google நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட Street View தொடர்பில் பல்வேறு சாதக மற்றும் பாதக கருத்தாடல்கள் இன்று பரவலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நானும் ஒரு மாறுபட்ட கோணத்தில் Google Street View – கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ற தலைப்பில் சில கருத்துக்களைப் பதிவு செய்திருந்தேன்.
அதன் மீது எழுந்த விமர்சனங்கள், பிரதிபலிப்புக்களை கருத்தில் கொண்டு அதன் தொடராக மேலும் பல விடயங்களை இந்த கட்டுரை மூலம் தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
ஆம்.. நாம் அறிந்தோ அறியாமலோ நம்மைச் சுற்றி ஒரு நவீன தொழில்நுட்ப வலை பிண்ணப்பட்டு அதற்குள் நாம் தள்ளிவிடப்பட்டுள்ளோம்.
இன்று Google Street View பற்றி அறிந்து கொண்ட நாங்கள் அதுபற்றிய வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுகின்றோம், ஆனாலும் – இன்னமும் இப்படியொரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டதே தெரியாத அப்பாவி பாமரர்களும் நம்மத்தியில் இருக்கவே செய்கின்றார்கள்.
ஒரு வாழைமர உயரமளவு கூட இல்லாத கூகுள் கமராக்களை பயன்படுத்தி, அவர்கள் உள்வீட்டுப் புகைப்படங்களைப் பகிரங்கமாக வெளியிட்டதால் நாங்கள் ஆத்திரப்படுவது நியாயம்தான், இருப்பினும் தென்னை மரங்களை விட உயரமாக அடுக்குமாடிகளை அமைத்துள்ள சிலர் சுற்றியுள்ள எட்டுத் திசைகளையும் அதிநவீன மொபைல் மூலமாகவோ, வேறு வகையிலோ இரகசியமாக படப்பிடிப்பு செய்து எமது அந்தரங்களை, மேற்குலகின் Cloud Server களில் பதிவேற்றிக் கொண்டிருப்பதை பற்றி நம் எத்தனை பேருக்குத் தெரியும்..?
அவ்வளவுமேன், அடுத்தவர் வெளியில் இருந்து பதிவேற்றக் கூட தேவையில்லை - நாம் பயன்படுத்தும், பேஷ்புக், வைபர், வட்ஸ்அப், ஐ.எம்.ஓ, ஸ்கைப் போன்றவற்றின் ஊடாக நமது துணைவர், நண்பர்கள், உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளும் நெருக்கமான புகைப்படங்களின் பிரதியை தங்களது server யில் வைத்துக் கொள்ளும் மேற்குலக நிறுவனங்கள் அதனை தாம் விரும்பியவாறு பயன்படுத்தும் அனுமதியை நாம் கொடுத்துவிட்டே அந்த சேவையை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம் என்பதை எத்தனைபேர் மறுக்க முடியும்..?
இதுவரை நாம் பகிர்ந்துகொண்ட புகைப்படங்களில் எல்லாம், நாங்கள் இயல்பாக இருந்திருக்கிறோமா..? அல்லது ஒழுக்கமுள்ள ஆடைகளுடன் மாத்திரமே காட்சியளித்துள்ளோம் என எத்தனைபேரால் உறுதிவழங்க முடியும். அந்த புகைப்படங்களையெல்லாம் நாளைக்கே, Street View போன்று Virtual Exhibition என்று இன்னொரு தளத்தில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினால், நம் ஒவ்வொருவரின் நிலமை என்னவாகும்..?
தங்களது வீட்டு எல்லைக்குள்ளாவது ஆடை சுதந்திரம் வேண்டுமென்ற கருத்தில் உள்ள சகோதரர்களின் நல்ல நோக்கம் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனாலும், ரோசா பூவில் மயங்கி முள்ளில் விழுந்த கதையாக நமது தனிப்பட்ட வாழ்க்கை இன்று மேற்குலகின் மாயக் கரங்களுக்குள் அகப்பட்டுக் கிடக்கின்றது என்ற யதார்த்தம்.
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடிகளின் நடவடிக்கைகளையும் கண்காணித்து, ஆய்வுசெய்து, எமது எண்ண ஓட்டத்தினை நாடிபிடித்து – அதனை எவ்வாறு வியாபாரமாக்கலாம் என விளம்பர யுக்திகளை தேடிக் கொண்டிருக்கும் மேற்குலகின் சூட்சுமங்கள் வரம்புமீறியவைகள்தான்.
ஆம்.. சுருக்கமாக சொல்லப் போனால், நாம் விரும்பியோ விரும்பாமலோ இரகசியங்களை பேணமுடியாத ஒரு வெளிப்படை உலக நவீனங்களுக்குள் வாழவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
கமரா வைத்து படம்பிடித்தமைக்காக கவலைப்படும் நாம், இன்னும் சில வருடங்களில் அறிமுகமாகப் போகும் வீட்டுக்கு மேலால் பறக்கும் கார்களை என்ன செய்யப் போகின்றோம்..?
இன்று சில மேற்கு நாடுகளில், “Pizza” களை “ட்ரோன்“ என்ற தன்னியக்க ரோபோக்கள் மூலமாக விநியோகிக்க தொடங்கியிருக்கிறார்கள். அத்தகைய “ட்ரோன்“ கள், கழுகுப் பார்வையில் படங்களைப் பிடிக்கவும் சில நாடுகள் அனுமதி அளித்திருக்கின்றன. இவையெல்லாம் நமது நாடுகளுக்கும் தற்போது அறிமுகமாகி வருகின்றதை கடந்த தேர்தலின்போது அறிந்திருப்போம்.
எனவே வருங்காலம், எமது ”பிரைவஸி” குறித்து இன்னும்பல சிக்கலான கேள்விகளை நம்மிடம் கொண்டுவருமே தவிர, இந்த Street View யினை தடுப்பதோடு மாத்திரம் எமது பிரச்சனைகள் முடிவுக்கு வரப் போவதில்லை.
சிலநேரங்களில் நாங்கள் இதிலுள்ள பாரதூரங்களை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென உணர்ச்சிவசப்பட்டு அளிக்கக்கூடிய மேலதிக வர்ணனைகளும், சுட்டிக்காட்டப்படும் காட்சிகளுமே வேறு சிலரை அவைகளை தேடிப் பார்க்கவேண்டுமென்ற தூண்டுதலாக மாறிவிடுகின்றது.
எனவே, எமது தனிப்பட்ட விடயங்களானாலும் சரி, சில சமூகம் சார்ந்த முடிவுகளானாலும் சரி, தொலைநோக்குடன் சிந்தித்து - உணர்வு பூர்வமாக கையாளுவதை விட அறிவு பூர்வமாக கையாளுவதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பவர்களும் நாகரீகமற்றவர்களே, எனவே – சமூக தளங்களில் நின்று ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைப்பவர்கள் அவர்களை பொருட்படுத்த தேவையில்லை.
மேற்குலக கலாச்சாரம், இதைவிட கேவலமான குறைந்த உடைகளுடனான புகைப்படங்களைகூட அலட்டிக் கொள்வதில்லை என்பதால், அவர்களின் நாடுகளில் Google Street View மூலம் தங்களது உடைமைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆனமை தொடர்பிலான அதிக முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாக தெரிகின்றது. ஆனாலும், எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்றாலும் - மிகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு கலாச்சாரப் பின்னனியைக் கொண்ட ஆடை ஒழுங்குகளைப் பேணும் நமது பிரதேசங்களில் வாழும் புத்திஜீவிகள், பாதிக்கப்பட்டது யாரோதானே - எங்களது தலைக்கு ஆபத்தில்லையே என பராமுகமாக இருக்கவும் முடியாது.
அப்படியென்றால் – இந்த விடயத்தை எவ்வாறு கையாலாம்..?
1. சமூக பொறுப்புதாரிகள், இதுபோன்ற நவீன சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சிறந்த பொறிமுறைகளை உருவாக்கக்கூடிய துறைசார் நிபுணர்களை கலந்து பேசி மாற்றுத் தீர்வுகளை தேடவேண்டும்.
2. தர்மசங்கடமான முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ள காட்சிகளை தன்னார்வ தொண்டர்கள், பிரதேசவாரியாக தொகுப்பு செய்து அவைகளை நீக்குவதற்கான முறைப்பாடுகளை கூகுள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.
3. கூகுள் நிறுவனத்திடம் இவ்வாறான சங்கட காட்சிகள் அதன்மீதுள்ள மக்கள் அபிமானத்தை இழக்கச் செய்யும் என்பதை தெளிவுபடுத்தி ஆகக்குறைந்தது உள்ளக வீதிகளையாவது தடைசெய்துவிட்டு பிரதான வீதிகளை மாத்திரம் காட்சிப்படுத்தும் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
4. உள்ளக வீதிகளில் மாத்திரமன்றி சில பிரதேசங்களில் பிரதான வீதிகளிலும் இதுபோன்ற குடியிருப்புகள் அமைந்துள்ளமையினால், மேற்பார்வை செய்யப்பட்ட ஒரு வடிகட்டிய திருத்திய பதிப்பை கொண்டுவரவோ, அவற்றுக்கு மாற்றீடாக சில நாடுகளின் பாதுகாப்பு வலயங்கள் 3D கட்டடங்களாக மறைக்கப்பட்டுள்ளது போன்றோ மறுவெளியீடு செய்ய ஆவணை செய்யப்பட வேண்டும்.
5. தங்களது தர்மசங்கடமான புகைப்படங்கள் வெளியாகி இருப்பதை இன்னமும் கூட அறியாமலும், அறிந்துகொண்டு புலம்பிக் கொண்டும் மயக்கத்தில் இருக்கும் மக்களுக்கு சரியான தெளிவினை வழங்கி – இவ்விடயத்தில் தேவையான அழுத்தங்களை உரிய அதிகாரிகளுக்கும் தலைமைத்துவங்களுக்கும் கொடுக்க கையெழுத்துவேட்டை, சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
6. இந்த தொழில்நுட்பத்தின் வரவினால், நாம் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து ஒரு விழிப்புணர்வுடன் எமது எதிர்கால கட்டட வடிவமைப்புகளை பாதுகாப்பான முறையில் திட்டமிடவும், எமது அந்தரங்கங்கள் பகிரங்கமாக உள்ள வாய்ப்புகளை முடிந்தளவு தடுக்கவும் முன்ஜாக்கிரதையான உபாயங்களைத் தேட வேண்டும்.
7. மொபைல்களை சிறுவர்களின் கைகளில் விளையாட கொடுப்பவர்களும், பழுதுகளை திருத்துவதற்காக கடைகளில் கொடுப்பவர்களும், தங்களது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் பிறரது கைகளில் அகப்பட்டால் கூகுள் Street View போன்றே - எவ்வாறான பின் விளைவுகளை அது கொண்டுவரும் என அறிந்து இதன் பிறகாவது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
8. உயிரிலும் மேலான மானத்தை மறைக்க அமைக்கப்படும் மதில் சுவர்கள், கூகுள் மட்டுமல்ல ஏனைய உயர்ந்த வாகனங்களில் செல்பவர்களின் கபட கண்களில் இருந்தும் எம்மை பாதுகாக்கும் என அறிந்து வீட்டுக் கொடுக்கும் முக்கியத்துவத்தை போலவே உயரமான சுவர்களை அமைக்கவும் முக்கியமளிக்கப்பட வேண்டும்.
இதுபோன்று நிறைய விடயங்களை நாம் கருத்தில் கொண்டு, வெறும் வாதப் பிரதிவாதங்களிலேயே நமது நேரகாலத்தை செலவழிக்காமல் – மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிரச்சனைகளை உரிய முறையில் தீர்க்கவும் நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்வோம்.
ஆடைகளில், உயர்ந்த ஆடை இறையச்சமாகும். எம்மீது திணிக்கப்படும் சில சமூக அவலங்களை உரிய முறையில் சுட்டிக் காட்டும் சகோதரர்களின் நல்ல எண்ணங்களுக்கு கூலி வழங்கவும், நாம் அறிந்தும் அறியாமலும் தொழில்நுட்ப மாயையில் செய்யும் தவறுகளை மன்னிக்கவும் - இறைவன் போதுமானவன்..

