(அஸ்லம் எஸ்.மௌலானா)
முன்னாள் கல்முனைப் பிரதேச சபைத் தவிசாளர் மர்ஹூம் ஐ.ஏ.ஹமீதின் மறைவுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று முன்தினம் மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோது மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலியினால் இந்த அனுதாபப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தது.
இப்பிரேரணையை சமர்ப்பித்து உறுப்பினர் உமர் அலி உரையாற்றுகையில் கூறியதாவது;
“மருதமுனையைச் சேர்ந்த பொறியியலாளர் ஐ.ஏ.ஹமீட் மிகவும் மனிதாபிமானமிக்க ஒரு மனிதராக எம்மத்தியில் வாழ்ந்து மறைந்துள்ளார். கல்வியில் மிகவும் சிறந்து விளங்கிய அவர் புலமைப்பரிஸில் பெற்று வெளிநாடு சென்று உயர் பதவி வகித்து வந்த நிலையில் 1994ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபைக்கான முதலாவது தேர்தலில் மறைந்த தலைவர் அஷ்ரப்பினால் களமிறக்கப்பட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று, தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் தனது பதவிக் காலத்தில் இன, மத, பிரதேச வேறுபாடுகள் எதுவுமின்றி சிறந்த முறையில் மக்களுக்காக சேவையாற்றினார். சில வருடங்களின் பின்னர் அவர் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக தான் வகித்து வந்த தவிசாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார். ஹஜ் கடமை முடித்து ஊர் திரும்பிய போதிலும் அவர் மீண்டும் தவிசாளர் பதவியை ஏற்காமல் விட்டதன் மூலம் தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை நிரூபித்திருந்தார்.
2003ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி அதாஉல்லாவுடன் இணைந்து கொண்ட அவர், அதாஉல்லாவின் அமைச்சின் மூலம் மருதமுனைக்கு நிறைய சேவைகளை ஆற்றியிருந்தார். தான் ஒரு அரசியல்வாதியாக இருந்த போதிலும் தனது நான்கு ஆண் பிள்ளைகளையும் நல்ல முறையில் படிப்பித்து வைத்தியர்களாக்கி சமூகத்திற்கு முன்னுதாரண புருஷராக வாழ்ந்து காட்டியுள்ளார்’ என்று குறிப்பிட்டார்.
முதல்வர் நிஸாம் காரியப்பர் உரையாற்றுகையில்;
“மறைந்த தலைவர் அஷ்ரப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறந்த கல்விமானே ஐ.ஏ.ஹமீதாவார். தனது கட்சிக்கு இப்படியொருவர் கிடைத்தமையையிட்டு அஷ்ரப் பெரும் மகிழ்ச்சியடைந்திருந்தார்.
நான்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் 1994ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபைக்கு நடைபெற்ற முதலாவது தேர்தலை வெற்றி கொள்வதற்கு அனைத்து பிரதேசங்களையும் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு பொருத்தமான தலைமையை அஷ்ரப் தேடிக் கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போன்றே மருதமுனையில் இருந்து ஹமீட் கிடைக்கப்பெற்றார்.
எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகி, அனைவரினதும் நன்மதிப்பை அவர் பெற்றிருந்தார். எமது சமூகத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் முன்மாதிரியாக ஒரு நேர்மையான அரசியல்வாதியாக அவர் பணியாற்றியிருந்தார்” என்று குறிப்பிட்டார்.
பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஆர்.அமீர் ஆகியோரும் பிரேரணை மீது உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து அனுதாபப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் அதனை ஐ.ஏ.ஹமீதின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளருக்கு முதல்வர் பணிப்புரை விடுத்தார்.



