(எம்.எல்.எம்.அன்ஸார்)
திடீரென
மழைக்கு நிகழ்ந்த
மரணத்தைத் தொடர்ந்து
வெயிலின் பராமரிப்பில்
அவதிப்பட வேண்டியதாயிற்று
அழகிய பூ!
*
வளர
பூ நுழைந்த புதிய தோட்டத்தில்
தென்றலை வரவிடாமல்
கம்பி வேலி போட்டு
காவல் புரிந்தது வெயில்!
*
காற்றோடு விளையாட விடாமல்
பூவை
கட்டிப்போட்டு வைக்க
சூரியன் கட்டளை இட்டிருந்தது!
*
மழையிடம் பால் குடித்து
மகிழ்ச்சியாக வளர்ந்து கொண்டிருந்த
பூவை
சூரியன் திட்டமிட்டு
அனாதையாக்கியதாக
சந்தேகம் இருக்கிறது மேகங்களுக்கு!
*
பூவை
பாரம் எடுத்திருந்த
படுபாதக வெயில்
மணக்கக் கூடாதென்ற
மரண எச்சரிக்கையோடு
பூவுக்கு
சூடு வைத்து சுகம் கண்டதை
சூரியன் பார்த்து ரசித்த போது
வானம் கண்டு கொள்ளாமல்
கஞ்சா மயக்கத்தில் இருந்திருக்க வேண்டும்!
*
நல்ல வேளையாக
இன்று பகல் எதிர்பாராமல் வந்த
கருமேகக் கூட்டங்கள்
விசாரணை ஏதும் செய்யாமல்
சூரியனையும் வெயிலையும்
கைது செய்து கொண்டு போக
நிழல்
வாடிய பூவுக்கு
மருத்துவ சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறது!
*
மழையின் மடி கிடைக்காதவரை
பூவுக்கு
நிழலின் தாலாட்டு
நிலையானது அல்ல!
14-03-2016

