(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)
நமது நாட்டில் இன்று ஒன்பது மாகாணசபைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றில் வடக்கு,கிழக்கு ஆகிய இரு மாகாணசபைகளின் ஆளுனர்களுக்கும் முதலமைச்சர்களுக்குமிடையில் ஏற்படும்பி ணக்குகள் அல்லது முரண்பாடுகள் போன்று பெரும்பாலும் இவை தவிர்ந்த ஏனைய ஏழுமாகாண சபைகளிலும் இடம்பெறுவதில்லை.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு மாகாணசபையின் முதல்வருக்கும் ஆளுனருக்குமிடையில் பாரிய சர்ச்சைகளும் பிளவுகளும் தோன்றி ,அதுவொரு முடிவில்லாமல் தொடர்ந்தன. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தினூடாக புதிய ஆளுனராக அண்மையில் ரெஜினோல்ட்குரே நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் காலத்தில் வடக்குமா காணசபையில் ஆளுனர்-முதலமைச்சர் போர்சற்று தணிந்திருக்கின்றது.
கிழக்கு மாகாணசபையின் ஆளுனராக இருந்த மோகன்லால் பீரிஸ் இருந்தகாலத்தில் முதலமைச்சர்-ஆளுனர் சர்ச்சை பெரிதாக வெளியில் கிளம்பிய தடயங்கள் இல்லை. அதே நேரம் தற்போதைய நல்லாட்சி அரசின் காலத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ஒஸ்ட்ரின் பெர்னாண்டோவின் காலத்தில்தான் முதலமைச்சர்-ஆளுனர் பிரச்சனைகள் பெரிதாக தலையெடுக்கத்தொடங்கி பகிரங்கமாகவும் அது பேசப்படுமளவில் நிலைமை மாறியிருக்கின்றது.
குறிப்பாக வடக்கு,கிழக்கு மாகாணசபைகளில் மட்டும் இப்படி ஆளுனர்-முதலமைச்சர்கள் மோதல்கள் நடைபெறும் அதே நேரம் இவை தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணசபைகளில் இப்படியான முறுகல் நிலை காணப்படாமை ஏன் என்ற வினா இது விடயத்தில் முக்கியம் பெறுகின்றது.
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய சமூகங்கள் எதிர் கொண்ட இனப்பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் இவ்வாறு இவை இவ்விரு மாகானங்களுக்கு மட்டுமானது என்ற பிரித்து உணர்த்தப்படக்கூடாது என்பதற்காகவும் முழுநாட்டினதும் பொதுவான ஒரு முறைமைதான் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் அமுலில் இருக்கின்றது என்பதையும் நிரூபிக்கும் தோற்றத்தை அன்றைய அரசாங்கம் இதன் மூலம் வெளிப்படுத்திக்காட்டிய அக்கறையின் பிரதிபலிப்பே இதுவாகும்.
இதனால் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்குப்புறம்பான மாகாணசபைகள், மாகாணசபை முறைமை கொண்டிருக்கும் அனைத்து சட்டதிட்டங்களையும் சரிவர நிறை வேற்றுகின்றதா என்கின்ற அக்கறைக்கு அப்பால் மாகாணசபைகளின் இயக்கம் நடைபெறுகின்றது என்கின்ற பதிவை பதியவைப்பது மட்டிலுமே அவர்களின் ஆர்வமும் கவனமும் குவிக்கப்பட்டிருக்கின்றது.
உண்மையில் இனப்பிரச்சனையை எதிர் கொண்ட மக்களான வடக்கு,கிழக்கு மாகாணத்தினுடையோர் இதன் அமுலாக்கம் நடைபெறுகின்றதா என்பதற்கு அப்பால்,மாகாணசபை முறைமையில் முன்வைக்கப்பட்டிருக்கும் முழு அதிகாரங்களும் அனுகூலங்களும் பூரணமாக இயங்குதலை கொண்டிருக்கின்றதா என்ற கூறின்மீதான கவனமும் எதிர்பார்ப்பும் மேலோங்கியிருக்கின்றது.
இவ்வாறான அக்கறையின் பேரிலும் இனப்பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பிலான மக்கள் பிரதிநிதிகளும் தமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைத்திருக்கின்றதா என்கின்ற ஆதங்கத்தின் அடிப்படையிலும் செயற்பட வேண்டிய தமது பொறுப்பிலிருந்து இயங்க தொடங்கும் போதுதான் இவ்வாறான ஆளுனர்-முதலமைச்சர் மோதல்கள் வெடிக்க தொடங்குகின்றது.
இந் நிலையை நாம் சரியாக எடை போட்டுப்பார்ப்போமானால் இன்னொரு உண்மையை மிக தெளிவாக இவ்விடத்தில் உணர முடியும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்குத்தான் மாகாணசபை தேவை இருக்கின்றது. ஏனைய மாகாணங்களுக்கு அதன் அவசியமில்லை என்பதையும் புலப்படுத்தி நிற்கின்றது.
இந் நிலையை நாம் சரியாக எடை போட்டுப்பார்ப்போமானால் இன்னொரு உண்மையை மிக தெளிவாக இவ்விடத்தில் உணர முடியும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்குத்தான் மாகாணசபை தேவை இருக்கின்றது. ஏனைய மாகாணங்களுக்கு அதன் அவசியமில்லை என்பதையும் புலப்படுத்தி நிற்கின்றது.
மக்களின் சார்பில் நின்று, மாகாணசபைகளுக்கான சட்டத்தின் ஏற்பாட்டின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கும் அதிகார எல்லைக்குள் நடைமுறைக்கு வரவேண்டிய விடயப்பரப்பில் காணப்படும் இடையூறுகள், தாமதங்கள் என்பனவைதான் சர்ச்சையை மேலும் விரிவுபடுத்தும் கோணத்தை அடையாளப்படுத்துகின்றது.
இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான தீர்வாகவோ பரிகாரமாகவோ மாகாணசபை முறைமை இருக்கின்ற தென்று பாதிக்கப்பட்ட மக்களான தமிழர்களும், முஸ்லிம்களும் சுயதிருப்தியில் இல்லை. இருந்தாலும் கிடைத்தவற்றைக்கூட அனுபவிக்க முடியாத குறுக்கீடுகள் வதை செய்கின்றது என்கின்ற நியாயமான கோபங்கள் எழுவது தவிர்க்கமுடியாத ஒரு கூறாகவும் மாறி வருகின்றது.
மாகாணசபை முறைமையில் சொல்லப்பட்டுள்ள அதிகாரங்களில் பொலிஸ்,காணி அதிகாரங்கள் என்பன இது வரை நடைமுறைக்கு வராது உள்ளவைகளாகும். இது குறித்து வடக்கு,கிழக்கு மாகாணசபைகளும் இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்களும் அமுலாக்கப்பட வேண்டுமென பெரிதாக குரல் கொடுக்கின்றனர்.
இவ்விரு அதிகார அமுலாக்கம் இல்லாமை என்பது நாட்டிலுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும் உரிய ஒன்றாக இருந்தாலும் வடக்கு,கிழக்குமகாண சபைகளுக்கு புறம்பான ஏனைய ஏழு மாகாணசபைகளிலும் இதற்கான போராட்டங்களோ கோரிக்கைகளோ எழுப்பப்படுவதில்லை.
ஆனால் வடக்கு,கிழக்கு மாகாண சபைகளிலும் இவ்விரு மாகாணங்களிலும் பெரும்பான்மையாக வாழும் தமிழ் பேசும் மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தொடர்ந்தேர்ச்சியான முறையில் பொலிஸ்,காணி அதிகாரம் அமுலாக்கம் குறித்து குரல் கொடுத்து வருகின்றனர், இந்த செயற்பாடானது இங்குள்ள மக்களின் தேவை என்பது ஏனைய மாகாணமக்களிலிருந்து வேறுபட்டதென்பதை இனம் காட்டப்போதுமானது.
இதனால்தான் இவ்விரு மாகாணங்களுக்கு வெளியே உள்ள ஆளுனர்கள், முதலமைச்சர்கள் மோதுகை என்பது பாரிய அளவில் வெளிப்படாது காணப்படுவதன் தாற்பரியமாகும். இதற்கு மாறான நிலை வடக்கு,கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலிருந்து வருவதென்பது இம் மாகாணங்களில்தான் பெருவாரியான இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்கள் இருப்புக்கொண்டுள்ளனர் என்பதை துல்லியமாகவும் எடுத்துக்காட்டுகின்றது.
ஆளுனர்-முதலமைச்சர் அதிகாரங்களின் பரப்பெல்லை பொதுவாக ஒன்பது மாகாண சபைகளுக்கும் ஒரே விதமாக இருந்தாலும் அதன் அடிப்படையில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்பது தேசத்தில் காணப்படும் அரசாங்கம் சார்ந்த கட்சிக்குப்புறம்பான அல்லது மாற்றுக் கொள்கையுடைய கட்சியின் ஆட்சி முறைமை வடக்கு,கிழக்கு மாகணசபைகளில் அமைந்திருப்பதும் ஒரு முக்கியமான அம்சமாகும். இங்குதான் உண்மைக்கு உண்மையாக இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமூக குழுமத்தினரின் இருப்பியல் உறுதியாக நிலைப்பட்டிருப்பதுமாகும்.
இதனால் மாகாணசபை முறைமையினூடாக நிறை வேற்றப்பட வேண்டுமென முன் மொழியப்பட்ட விடயங்களை செயல்படுத்துவதில் சில முட்டுக்கட்டைகளை வடக்கு,கிழக்கு மாகாணசபைகளுக்கான ஆளுனர்கள் திட்டமிட்டு செயற்படுத்தும் ஓர் மத்தனத்தை வீராப்புடன் காட்டுவதினாலும் இவ்வாறான முறுகல் நிலை ஒரு தொய்வில்லாத நிலைப்பேற்றை அடைந்து கொள்கின்றது.
வடக்கு,கிழக்கு மாகாணசபைகளின் ஆளுனர்களாக நியமிக்கப்படுபவர்கள் எப்போதும் நமது நாட்டின் பெரும்பான்மைச் சமூகமான சிங்களவர்களவர். அவர்கள் நமது தேச அரங்கில் ஆட்சிபுரியும் அரசாங்கம் சார்ந்தவர்கள் என்பதனால் தேசத்தில் காணப்படும் அரசாங்கத்தில் ஊடுருவியுள்ள சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்கசக்திகளின் அடிவருடிகளாகவும் இனவாதத்தின் மொத்த முகவர்களாக காரியமாற்றும் மனோபாவம் நிறைந்தவர்களே பெரும்பாலும் ஆளுனர் பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர்..
இதனாலும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பெருவாரியாக வாழும் தமிழ் பேசும் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்படுகின்றவகையில் அல்லது நன்மைகள் எதனையும் அடைந்து விடக்கூடாதென்கின்ற பாகுப்பாட்டுத்தன்மையும் ஆளுனர்களினூடாக பெருக்கெடுத்துக் கொள்கின்றது.
இப்படிசிங்கள-பௌத்த பேரின ஆதிக்க சக்திகளின் மேலோங்குகை வடக்கு,கிழக்குமா காணசபைகளில் பாரிய ஆதிக்கத்தை செலுத்துவதற்கு மாகாணசபை முறைமையில் காணப்படும் ஆளுனருக்கான அதிகாரத்தின் உச்சமும் முதலமைச்சருக்கு காணப்படும் அதிகாரக்குறைப்பும் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றது.
“154 ஊ(1) ஒரு மாகாணத்தின் ஆளுனருக்கு அவரது பணிகளை பிரயோகிப்பதில் உதவி செய்து ஆலோசனை அளிப்பதற்கென பிரதான அமைச்சரையும் நால்வருக்கு மேற்படாத வேறு அமைச்சர்களையும் கொண்ட அமைச்சர்கள் சபை ஒன்று இருத்தல் வேண்டும். பிரதான அமைச்சர் சபைக்கு தலைமைதாங்குவார். ஆளுனர் அவரது பணிகளை அல்லது அவற்றுள் எதனையும் அவரது தற்றுணிவில் பிரயோகிக்கும்படி இந்த அரசியலமைப்பினால் அல்லது அரசியலமைப்பின் கீழ் அவர் தேவைப்படுத்தப்படுகின்ற அளவுக்குத்தவிர அவரது பணிகளை பிரயோகிக்கையில் அத்தகைய ஆலோசனைகளுக்கிணங்க செயலாற்றுதல் வேண்டும்.”
மேற்படிய 13ஆம் திருத்தச்சட்டத்தின் இந்த ஏற்பாட்டை சற்று ஊன்றிப்பார்த்தால் ஆளுனரின் பதவியின் பணிகளைச்சரிவர நிறைவேற்றுவதற்கும் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும்தான் மாகாணசபையின் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களும் கடமையாற்றுகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் ஒரு கோணத்தையும் இதற்குள் பார்க்கலாம்.
மாகாண சபையொன்றினைப்பொறுத்தவரை எல்லையில்லா அதிகாரக்குவிப்பை கொண்டவராக ஆளுனர் என்பவர் காணப்படுகின்றார். அது மட்டுமன்றி அவர் நேரடியாக நிறைவேற்று ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் இருக்கின்றார்.
இதன் மறுதலை நமது தேசத்தின் ஆட்சியில் ஜனாதிபதியாக இருப்பவரின் ஆட்சியாகவே மாகாணசபை விளங்கமுடியும். தவிர மாகாணசபையின் ஆட்சிபீடத்திலிருக்கும் கட்சிசார்பான அதிகார ஆதிக்க செல்வாக்கு பிரயோகிக்க முடியாதென்பதை தெட்டத்தெளிவாக வரையறுக்கின்றது.
மாகாணசபையில் ஆளுனரின் அதிகாரம் என்பது ஒருவகையில் நிறைவேற்று அதிகாரத்தை ஒத்ததாக பார்க்கலாம். ஏனெனில் தேசத்தின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் செயலாற்றுகையை பிரதிபலிப்பவராகவும் குறித்துரைக்கப்படுகின்றார். இதனை அவரது பின்வரும் அதிகாரங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
01)காலத்துக்குக்காலம் மாகாணசபைகளை கூட்டுதல், ஒத்திவைத்தல், கலைத்தல்.
02)ஒரு கூட்டத்தொடர் முடிவடைந்து இரண்டு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடரை கூட்டுதல்.
03)மாகாண சபையைக்கலைக்கும்போது சபையொன்றின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செயலாற்றுதல்.
04)மாகாணசபையின் அமைச்சர்கள் சபையின் ஆலோசனைக்கு உடன் படாத விடத்து ஆளுனர் அதனை ஜனாதிபதிக்கு அறிவித்தல்.
05)மாகாணசபையில் தேவையான போது உரையாற்றுதல்
06)மாகாணசபையினால் இயற்றி நிறைவேற்றாது இருக்கும் ஒரு சட்டம் பற்றி அல்லது மற்றைய விடயங்கள் பற்றி சபைக்கு செய்திகள் அனுப்புதல்.
இத்தகைய அதிகாரங்களோடு “மாகாண நிதி விடயங்களை ஆளும் எல்லா ஒழுங்குகளையும் ஆளுனர் மேற்கொள்வதுடன் மாகாண நிதி, மாகாணத்தின் அவசரகால நிதி என்பன உட்பட அனைத்தையும் கையாள்கிறார். ஆளுனரின் சிபாரிசு இன்றி மாகணசபையின் எந்தவிதமான வருமானம், செலவீனத்துடன் சம்பந்தப்பட்ட வருமான நியாதிக்கங்களை அறிமுகம் செய்து கொள்ளப்படவோ, முன் மொழியப்படவோ, ஏற்றுக்கொள்ளப்படவோ முடியாது.”
இப்படியான ஆளுனரின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே மாகாணசபைகளின் இயங்கியல்கள் உட்படுகின்றன. இத்தகைய வட்டத்துக்குள் சிறைப்பட்டுள்ள மாகாணசபைகளில் முதலமைச்சர் பாத்திரம் என்பது ஆளுனரின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் மேலானதாக இராதென்பது மிக வலிமையான சமாச்சாரம்.
வடக்கு,கிழக்கு மாகாணசபைகளில் ஆளுனர்களின் தலையீடுகள் முதலமைச்சரின் வேகமான மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கு தடையாக அமைகின்றதென்றால் அது ஆளுனர்களின் அதிகாரத்துக்கு வெளியில் நின்று செயற்படுவதல்ல. மாறாக அவர்களுக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தின் வெளிப்பாடுகள் என்பதை வடக்கு,கிழக்கு முதலமைச்சர்கள் தமது கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு கடமையாக்கின்றது.
பொதுவாக நிதிக்கையாள் கையில்தான் வடக்கு,கிழக்கு முதலமைச்சர்களுக்கும் ஆளுனர்களுக்குமிடையில் பிரச்சனைகளை உருவாக்கிய சந்தர்ப்பங்களாக பெரும்பாலும் காணப்படுகின்றன. இதில் பூரணமான உரித்தும் அதிகாரமும் முதலமைச்சரைவிட ஆளுனரின் பக்கம் இருப்பதாகவே மாகாணசபைகளின் சட்ட ஏற்பாடுகள் மிகவும் தெளிவாக குறிப்பிட்டு வலியுறுத்துகின்றன.
ஆகவே இத்தகைய இடரல்களுக்கும் பிசகுகளுக்கும் மத்தியில்தான் வடக்கு,கிழக்கு மாகாணசபை முதலமைச்சர்களின் அதிகாரங்கள் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. இதில் மாற்றம் கொண்டு வருவதென்பது மாகாணசபை முறைமையின் சட்ட ஏற்பாடுகளில் கொண்டு வரப்படும் திருத்தத்தினூடாகவே சாத்தியப்படும் என்பதுதான் இதன் யதார்த்தமாகும்.
மாறாக முதலமைச்சர்கள் தமக்கு அதிகாரம் கூடுதலாக இருப்பது போன்ற தோரணையை மக்களிடையே முன்னிறுத்துவது அவர்களின் பதவி வழி அதிகார இயலாமையை மறைத்துக்கொண்ட ஒரு அபத்தமான முன்னகர்ச்சி என்பதை நாம் புரிந்து கொள்வதில் பாரிய சிரமம் இராது.
ஆகவே இதில் மக்கள் பிரதிநிதியான முதலமைச்சருக்கு அதிகாரத்தினை அதிகரித்துக்கொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை நமது நாட்டு மாகாணசபை முறைமையில் புகுத்தி, புதிய பாதையில் செல்லும் மாதிரியில் மாகாணசபைகளின் செல் நெறி உருவாக்கப்படும்போதுதான் மாகாணசபை முறைமையினூடாக இனப்பிரச்சனைத்தீர்வை நெருங்க முடியும். இப்பக்கவும் நமது கவனத் திரட்சி திரும்புதலை இன்றைய காலகட்டம் நமக்கு வலியுறுத்தத் தவறவில்லை.


