மு.காவின் பிளவுகளும் பிரசாரங்களும்

Written By avathani Media Network on Friday, March 25, 2016



(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)

“நேற்று நள்ளிரவு இரண்டு பேர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளேன்.இன்று நள்ளிரவுக்குள் இன்னும் ஓரிருவரை கட்சியிலிருந்து இடைநிறுத்த உள்ளேன்” என்கின்ற ஒரு சூளுரைப் பிரகடனத்தை பிரஸ்தாபித்து முடிப்பதற்கு இவ்வளவு கோடிகளைக் கொட்டி ஒரு தேசிய மாநாடு தேவையா என்று பரவலாக முகநூல் உட்பட பேசுமளவுக்கு மாறியிருப்பது நமது தனிக்கட்சியின் பெருமைதான்.


தேசிய மாநாட்டுக்கு வராதவர்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்திருக்கும் தலைவர் ரவூப் ஹக்கீம், வந்தவரை அவமதிக்கும் வகையில் அணிந்துவந்த ஆடையைக் கூட விமர்சனத்துக்குள்ளாக்கி,அவமதித்திருப்பதும் நமது தலைவரின் ஆளுமைதான்.ஆனால் இம்மாநாட்டில் கலந்துகொண்ட இரா.சம்பந்தன்,முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா போன்றோர்கள் தமது கலாசார ஆடைகளோடு வீற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்சியின் நிறத்தில் ஆடை அணிந்துவருவது ஒரு நாகரிகமான செயற்பாட்டுக்கு அப்பாலானதல்ல.அது கட்சித் தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக பார்க்கப்பட வேண்டும்.பெரும் பெரும் கட்சிகளின் மாநாடுகளில் கூட அதன் தலைவர்களாக இருப்பவர்கள் கட்சியின் நிறத்துக்கேற்ப ஆடை அணிந்துவருவது ஒரு சம்பிரதாயபூர்வமான செயலேயாகும்.

இந்தத் தேசிய மாநாட்டில் நமது தலைவர் மேற்கத்தேய கலாசாரத்தை பிரதிபலிப்பதும் மேட்டுக்குடி மக்களின் மேலாண்மையை காண்பிக்கும் வகையிலான ஆடையை இந்த மேடையில் அணிந்திருந்தாலும் கட்சி தேர்தல் பிரசார மேடையில் கட்சியின் நிறத்தில் சாரம் அணிந்து அதனையொத்த சால்வையும் போட்டுக்கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டதை தலைவர் மறந்திருக்கக் கூடும்.

ஏனெனில் மக்களின் திரட்சி வெள்ளமும் அவர்களின் ஆரவாரங்களும் தலைவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு அழைத்துச் சென்று உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கவைத்துள்ளது.இதனால் நிதானம்,சாணக்கியம்,விவேகம் என்ற பண்புகளை நமது தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று நேரம் இழக்கவேண்டியதாயிற்று.ஆக்ரோஷமான பேச்சுக்களும் மக்களின் கைதட்டுதல்களை எதிர்நோக்கிய உரைகளும் உயிரோட்டமுள்ள கருத்துக்களை விதைப்பதற்கு சிலவேளை தடையாகிவிடுவதும் உண்டு.

வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணைந்தால் முஸ்லிம்களுக்கென ஒரு தனியான மாகாணம் தரப்படல் வேண்டுமென தேசிய மாநாட்டை முன்னிறுத்தி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் திடமாக தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியிருந்தார்.உண்மையில் இதுதான் நமக்கு இன்று தேவைப்படுகின்ற முக்கியமான ஓர் அம்சமுமாகும்.இதனை நாங்கள் அடக்கிவாசிக்க வேண்டுமென்கின்ற ஒரு செயற்பாட்டைத்தான் எங்கள் தலைவர் கடைப்பிடித்துவருகின்றார் என்று சிலர் நம்பினர்.

இதன் வெளிப்பாடுதான் முஸ்லிம் மாகாணம் குறித்து அக்கட்சியின் பதவி நிரலுக்குரிய செயலாளர்,தவிசாளர் போன்றோர்களால் அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்ட போதும், இதனை இந்த தேசிய மாநாட்டில் கொள்கைப் பிரகடன உரையாக ஆக்கப்பட வேண்டுமென முன்மொழிந்ததை தலைவருக்கெதிரான சதியாகவும் தலைவரை இக்கட்டில் மாட்டிவிடும் ஆப்பு எனவும் நினைத்து கொதித்தெழுந்தவர்களும் உளர்.

இவ்வாறான எண்ணப்பாடு முற்றிலும் பிழையானது என்பதனால்தான் நமது தலைவர் ரவூப் ஹக்கீம் இதனையொரு கொள்கைப்பிரகடன உரையாக முன்வைக்க தவறியிருந்தாலும் மாநாட்டை முன்னிறுத்தி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படையாகவே கூறியிருப்பது நிரூபிக்கப் போதுமானது.

ஆகவேதான் நமது முஸ்லிம் மாகாணக் கோரிக்கை அன்றும் சரி இன்றும் சரி உரத்துப் பேசப்பட வேண்டிய கட்டாயத்தை நம் மீது சுமத்தியிருக்கின்றது.இதனை மாநாட்டு மேடையில் வலியுறுத்தியிருந்தால் இதனை அடைந்துகொள்வதை இலகுவாக்கி வைத்திருக்கும் என்று நாம் நம்புவது பிழையான எடுகோளல்ல.

ஏனெனில் பிரச்சனைகளுக்குத் தீர்வை வழங்கும் சக்திகளான ஜனாதிபதி,பிரதமர் இம்மாநாட்டில் பிரசன்னமாகியிருந்தனர்.அதே நேரம் நாம் இது குறித்து பேச வேண்டும் என எதிர்பார்க்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா,சம்பந்தன் ஐயாவும் இங்கு சமூகமளித்திருந்தார்.ஆகவே இங்கு முஸ்லிம் மாகாணத்தை வலியுறுத்துவது முஸ்லிம் மக்களின் பிரகடனமாக அவர்களால் பார்க்கக் கூடிய ஒரு நிலையை தோற்றுவித்திருக்கும்.

நாம் எந்த விடயத்தையும் சொல்பவரை வைத்து நோக்கக் கூடாது.மாறாக சொல்லப்படுகின்ற கூற்றில் காணப்படும் நியாயங்கள்,தேவைகளை முன்னிறுத்தியே ஆராய்தல் வேண்டும்.அப்போதுதான் சொல்லப்பட்ட கருத்தின் உண்மை நிலை சரியான புரிதலுக்குள்ளாவதோடு அதனை அடையவேண்டும் என்கின்ற எத்தணிப்புக்களும் ஒரு உத்வேகத்தோடு மேற்கிளம்பும் வாய்ப்பையும் நமக்கு இசைவாக்கித் தரும்.

எது எவ்வாறிருந்தாலும் மு.காவுக்குள் பனிப்போராக காணப்பட்ட சர்ச்சைகள் அதன் பத்தொன்பதாவது தேசிய மாநாட்டில் பாரிய வெடிப்பாக வெளிப்பட்டிருக்கின்றது.பொதுவாக ஓர் அரசியல் கட்சிக்குள் பிணக்குகள் தோன்றுவதும் தொடர்வதும் மறைவதும் என்பன இயல்பான ஒரு சமாச்சாரமாக இருக்கின்றது.இந்த பண்புக்குள் நமது தனி முஸ்லிம் கட்சிகளில் முதன்மைக் கட்சி உட்பட்டுக் காணப்படுகின்றது.

பொதுவான இயல்புக்குள் நமது கட்சியும் இன்று தன்னை நுழைத்துக் கொண்டது.அது காலப்போக்கில் சீராகிவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதுகுறித்த நமது கவனங்களை செலுத்துவதை தவிர்ப்பது ஓர் ஆரோக்கியமான நிகழ்வாக இராது.

ஏனெனில் இன்றைய காலகட்டம் நமது தேசத்தின் அரசியல் அரங்கில் முக்கியமானதும் அவசிய தேவையான இனப்பிரச்சனை தீர்வை நோக்கிய நகர்வை முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.இந்த சூழலில் முஸ்லிம் மக்களாகிய நாமும் தீர்வுகள் எட்டப்படவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தீர்வுத்திட்டத்தில் நமக்கான பங்கினை சரியாக அடைந்துகொள்வதை பல ஆதிக்கசக்திகள் தடுத்துவிட வேண்டுமென்கின்ற மும்முர இயங்கியலுக்குள் செயற்பட்டுக்கொண்டிருப்பது நமக்கு மறைவானதல்ல.ஆயினும் நமக்குள்ளும்,நம் மத்தியிலும் நமக்கென்றிருக்கின்ற தனி அரசியல் கட்சிகளும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டிய தருணத்தையும் இன்று கட்டாயப்படுத்தியிருக்கின்றது.

இந்நிலை நமது முதல் தனிக் கட்சியினதும் நமது மக்களின் அதிகரித்த ஆதரவைப் பெற்றதுமானதும் மற்றும் சர்வதேச அரங்கில் முஸ்லிம்களின் குரல் என நம்பப்பட்டிருப்பதுமான மு.காவுக்குள் பிளவுகள் ஏற்படுவதை நாம் இன்று அனுமதிக்க முடியாததும் ஆதரிக்கக் கூடாததுமான நிலையில் உள்ளோம்.இதனைப் புரிந்துகொள்ளாதுவிடுகின்ற போது நமது சமூகம் பாரிய பின்னடைவுகளை சந்திக்கக் கூடும்.

மு.காவுக்குள் இன்று எழுந்திருக்கும் சர்ச்சை உடனடியாக தீர்க்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகவும் நமக்கு இருந்துகொண்டிருக்கின்றது.மு,காவுக்குள் பிளவு என்பது நமது சமூகத்தின் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தக் கூடியதாகும்.இதனால் இப்பிளவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிகளில் நாம் துரிதமாக கவனம் செலுத்தி செயற்பட வேண்டும்.

மு.காவுக்குள் இதற்கு முன்னரும் சில பிளவுகள்,பிணக்குகள்,சர்ச்சைகள் என தோன்றியிருந்தாலும் அவைகள் கட்சியின் பதவி நிரலுக்குரிய முக்கியஸ்தர்கள் என்ற அனைத்துக் கோணங்களுக்குள்ளும் ஒரே நேரத்தில் உருவாகவில்லை.மாறாக ஒரு பகுதியினரால் இது ஏற்பட்டதாயினும் கட்சியானது திடம் கொண்டதாக இருக்கும் பலத்துடன் இருந்துவந்திருக்கின்றது.

குறிப்பாக மு.காவின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவ காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அனைத்துப் பிளவுகளின் போது செயலாளர் நாயகம் எம்.ரி ஹஸனலி மற்றும் தவிசாளராவதற்கு முன்னரும் பின்னரும் பஷீர் ஷேகுதாவூத் ஆகிய இரண்டு ஆளுமைகளும் ரவூக் ஹக்கீமின் பக்கம் நின்று தீர்வுகளை எட்டிக்கொடுப்பதில் கட்சியை கட்டிக்காப்பதில் மிகவும் கெட்டித்தனமாக செயற்பட்ட வரலாற்றை நமது தலைவரின் காலம் கொண்டிருக்கின்றது.

இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது.மு.காவின் சர்ச்சை என்பது செயலாளர் நாயகம் எம்.ரீ.எம்.ஹஸனலி,தவிசாளர் பஷீர் ஷேகுதாவூத் என்ற இருபெரும் அரசியல் ஆளுமைகளின் பின்னாள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் சிலரும் சேர்ந்த நிலையில் இந்தப் பிளவும் பிணக்கும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பிளவின் இறுக்கம் மிகவும் வலிமையுடையதாக மாறுமா அல்லது தலைவர் ரவூப் ஹக்கீமின் அரசியல் சாணக்கியத்தினூடாக அடக்கப்பட்டுவிடுமா என்கின்ற பலப்பரீட்சையை வைத்து தீர்மானித்துக் கொள்வதற்கான ஒரு காலகட்டம் நமக்கு இன்றில்லை என்பது ஒரு விடயம்,கட்சி பலப்பட்ட நிலையில் இருப்பதற்கு அதற்குள் ஒற்றுமை காணப்படவேண்டுமென்பது இன்னொரு தளமாகும்.

இந்த அடிப்படையில் நாம் நோக்கும்போது மு.காவுக்குள் இன்று வெடித்திருக்கும் பிளவானது உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டிய ஒன்றென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.இதனை மு.காவுக்குள் இருக்கும் பதவி நிரல் குழுமத்தினர்களும் முக்கியஸ்தர்களும் பிரமுகர்களும் உள்வாங்கி இணக்கத்திற்கு வருவதை வலியுறுத்த வேண்டும்.

அதேவேளை நமது சமூக தளத்தில் நின்று இயங்கும் அரசியல் கட்சிகளும் மற்றும் குடியியல் சமூக ஆளுமைகளும் அமைப்புக்களும் இதில் அழுத்தங்களைக் கொடுத்து துரிதமான ஒரு ஐக்கிய முடிவுக்கு கொண்டுவருவதுதான் நமது சமூக நலன் என்ற அடிப்படையில் வைத்து நோக்கும்போது புலப்படக் கூடியதாகும்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்ட வேண்டுமானால் முதலில் பிரச்சனையின் மையம் புரியப்படல் வேண்டும்.அப்போதுதான் அதற்கான அரண்களைச் சரியாக-இணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.இந்த அடிப்படையோடும் இதய சுத்தியோடும் பிரச்சனைகள் அணுகப்படல் வேண்டும்.அப்போதுதான் அங்கு சுமுகமான நிலை தோற்றுவிக்கப்பட்டு,நிதானமாக சிந்தித்து நலன் தரக்கூடிய தீர்வை வசமாக்குவதற்கு வசதியாக இருக்கும்.

இவற்றுக்கு அப்பால் சர்ச்சைகள் தோன்றும்போது இரு தரப்புக்குள்ளும் சில மனக்கசப்புக்கள் ஆழமாக வேரூன்றும் வகையிலும் நாகரிகமற்ற கோணங்களிலும் சில நிகழ்வுகள்,பிரசாரங்கள் நடப்பதென்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதும் இயல்பானது.இதனையும் இரு தரப்பினர்களும் உள்வாங்கிக்கொள்ளுதல் இன்றியமையாத ஒரு பக்கமாகும்.

மு.காவுக்குள் இன்று எழுந்திருக்கும் பகைப்புலம் என்பது தேசியப்பட்டியலை முன்னிறுத்தியதென்ற ஒரு பாங்கை கட்சியின் தலைமைத்துவம் அதன் சார்பு நிலையுடையோர் கட்டமைத்துவிட்டிருக்கின்றனர்.இதற்குள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் சில நடுநிலையானவர்களும் இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.இது தமது பக்கபலம் என தலைவர் ரவூப் ஹக்கீம் நம்புவது அவருக்கு சக்தியானதுதான்.

என்றாலும் ஆழமாக சிந்திப்போர்களிடம் தலைவர் ரவூப் ஹக்கீமினால் தேசியப் பட்டியல் விவகாரமாக இப்பிளவை சித்தரிப்பதற்கு அப்பாலும் அக்கட்சிக்குள் பிணக்குகள் வருவதற்கு காரணங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை இலகுவாக அடையாளப்படுத்திக் கொள்வர்.ஏனெனில் இப்போது மு.காவுக்குள் இருப்பது ஒரு தேசியப் பட்டியல்தான்.அதாவது சட்டத்தரணி சல்மான் அவர்களின் உறுப்புரிமையாகும்.

இவரது இரஜினாமாவின் மூலம் ஒருவர்தான் நியமிக்கப்பட முடியும்.ஆனால் தேசியப்பட்டியல் விவகாரம் என சுட்டிக்காட்டப்படுபவர்கள் செயலாளர்,தவிசாளர் ஆகிய இருவர்களுமாவர்.ஆயின் ஒருவருக்கு கிடைக்க,மற்றவருக்கு கிடைக்காமல் போகவே வழியிருக்கின்றது.அப்படியான சந்தர்ப்பத்தில் இவ்விருவரின் இணைவு என்பது தேசியப்பட்டியல் விவகாரத்துக்கு அப்பாலும் வேறு சில காரணங்கள் இருக்கும் என்பதை இது எடுத்துக்காட்டும்.

“ கட்சியையும் கட்சித் தலைமைத்துவத்தையும் கேள்விக்குட்படுத்தக் கூடாது” என்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த 21.3.2016 இல் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.அதில் இன்னொரு விடயத்தையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.”அதிருப்தியாளர்கள் விமர்சனங்களை விட்டுவிட்டு பேசித் தீர்த்துக் கொள்வோம்” எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுகுறித்து அதிருப்தியாளர்களின் குழு முக்கியஸ்தர்களான செயலாளர் நாயகம் எம்.ரி ஹஸனலி,தவிசாளர் பஷீர் ஷேகுதாவூத் ஆகியோர்கள் இதயசுத்தியுடன் நாம் பேசுவதற்கு தயார் என்ற அறிவிப்பையும் விடுத்துள்ளனர்.இருந்தாலும் இவ்விரு அணிகளும் ஒரே இடத்தில் சந்திக்க வேண்டும்.அதற்கான ஏற்பாடுகள் அவசியமாகும்.

கட்சியையும் கட்சித் தலைமைத்துவத்தையும் கேள்விக்குட்படுத்தக் கூடாதென்றால் பிரச்சனைகளின் கால்வாய் அதிலிருந்தாலும் அதனைப் பேசக்கூடாதென்கின்ற ஒரு முன் நிபந்தனையை இதற்குள் உட்கிடையாக இருப்பதைக் காணலாம்.இது பேச்சுவார்த்தையை சரியான முறையில் முன்னெடுப்பதற்கு சிலவேளை முட்டுக்கடையாகவும் ஆகிவிடலாம்.

இன்று தோன்றியிருக்கும் மு.காவின் பிரச்சனைக்கு தலைமைத்துவத்தின் தனிவழிப் போக்கும் அதிகரித்த அதிகாரங்களும், காரணங்களுக்குள் அமைந்திருக்கின்றது.அது கூட்டுப்பொறுப்புடையதாக மாறறப்படல் வேண்டும் என்கின்ற ஆதங்கத்தை அதிருப்தியாளர் குழுக்களிடம் நாம் அவதானிக்கக் கூடியதாகவும் உள்ளன.அந்த வகையில் தலைவரின் இந்தக் கூற்று ஐக்கியத்தைத் தூரப்படுத்திவிடுமா என்கின்ற அச்சம் இதிலிருக்கின்றது.

கேள்விக்குட்படுத்தக் கூடாதென்பது சர்வதிகார தொணிக்குரியது மட்டுமன்றி தன்னைச் சுற்றி எல்லோரும் இருக்க வேண்டும் என்கின்ற போக்கினை மேலாடச் செய்யும்.அதில் ஜனநாயகம்,கருத்துரிமை என்பன போன்ற சீரிய பண்புகளுக்கு இடமில்லாது போய்விடும்.அதன் மறுதலை சுமூகமாக கட்சியை வழிநடத்துதல் என்பது விலகிச் செல்லும் வழியை எய்திக்கொண்டுவிடும் அபாயமும் இதிலிருக்கின்றது.

விட்டுக்கொடுப்புக்கள் என்பது இரு பக்கங்களில் இருந்தும் நடைபெறவேண்டிய ஒன்றாகும்.இதில் சமூக நலன்களை முன்னிறுத்தியும் நியாயங்கள் மதிக்கப்பட வேண்டும் அது சபைப்படுத்தப்படுவதற்கு எந்தத் தரப்பு அதிக விட்டுக்கொடுப்புக்களை முன்னகர்த்த வேண்டுமோ அந்தத் தரப்பு அதிலிருந்து விலகாத கூறுகளின் கூர்மைப்படுதல்தான் மு.காவுக்குள் இன்றெழுந்துள்ள பிளவுகளுக்கு தீர்வைத்தரும்.இங்கு பதவி நிரலின் போட்டித்தன்மைக்கு அப்பால் சிந்திப்போமேயானால் தீர்வு இல்லாமலாகிவிடாது.





M.M.M.NoorulHagu 129B,Osman Road,Sainthamaruthu-05 0\772612094
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.