பலப்பிட்டிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் உள்ள காலி வீதியில் கூரிய ஆயுதமொன்றால் குத்தியும், வெட்டியும் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அம்பலாங்கொட பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
நேற்றுப் பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பெண்ணைக் கத்தியால் குத்திய நபரைப் பிடிக்க நீதிமன்ற வளவிலிருந்த பொலிஸார் முயற்சி செய்தபோது அவர் தப்பியோடியிருக்கிறார்.
அவரை விரட்டிச்சென்ற கான்ஸ்டபிள் ஒருவர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டபோதும் அவரைப் பிடிக்க முடியவில்லை.
இந்தப் பெண்ணின் மீது கத்திக்குத்தை மேற்கொண்டவர் அவரது கணவரே எனவும், அவர் வங்கிக் கொள்ளையொன்று உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், போதைவஸ்துக்கு அடிமையானவர் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
தனது கணவருக்கு எதிராக பலப்பிட்டிய நீதிமன்றத்தில் இந்தப் பெண் வழக்கொன்றைத் தொடர்ந்திருப்பதாகவும், சம்பவ தினம் அந்த வழக்கு விசாரணைக்காக தனது இரு பிள்ளைகளுடனும் வந்தவரை அவரது கணவன் கத்தியால் குத்தியிருப்பதாகவும் தெரியவருகின்றது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு இதே நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றுக்கு மீகட்டுவத்தே சுமித்த தேரருடன் வந்திருந்த பாதாளக் கோஷ்டியைச் சேர்ந்த இருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

