(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)
நமது நாட்டு அரசியல் களத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டமொன்று நடைமுறைக்கு வரப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு மிகவும் நம்பிக்கையோடு மேற்கிளம்பி காணப்படுகின்றது. அதேநேரம் அவ்வாறான ஒரு சூழல் வரவே வராது என்கின்ற சிறிய சந்தேகமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.
எது எப்படி இருந்தாலும் தீர்வைப் பெறவேண்டியவர்கள் இதுகுறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதுதான் சிறந்த முன்னேற்பாடாக அமையும். ஏனெனில் தீர்வுத்திட்டம் கைகூடாது கிடப்பில் போடப்படாத சூழல் மேலெழுந்துவிட்டால் நம்மிடம் அது பற்றிய தீர்வு இல்லையேல் கைசேதப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.
இந்த கையறு நிலையிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டுமாயின் நமக்கான தீர்வுகுறித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கவேண்டிய கட்டாயத்தை இன்று அவசியப்படுத்திவைக்கின்றது. உண்மையில் தீர்வைப் பெற வேண்டிய சமூகங்களாகத் தமிழர்களும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். குறிப்பாக வடக்கு,கிழக்கில் வாழ்பவர்களாவர்.
அப்படியிருந்தும் நமக்கான ஒரு தீர்வுத்திட்டத்தை கூட்டுமொத்தமான ஒரே தீர்வாக முன்வைக்க முடியாத ஒரு சமூகமாகவும் நாம் இன்று இருந்துகொண்டிருக்கின்றோம். இது முஸ்லிம்களாகிய எமது பலமா அல்லது பலவீனமா என்பதைக் கூட சரிவர புரிந்துகொள்ள முடியாதவர்களாக நாம் இருப்பதுதான் வேதனையானதாகும்.
ஒரு சமூகத்தின் நலன் குறித்து ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய கடப்பாடுகளை அச்சமூகம் சார்ந்த அரசியல் கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், குடியியல் சமூகம், அச்சமூகம் சார்ந்த உயர்சபைகள், புத்திஜீவிகள் போன்ற குழுமத்தினர் அதிக ஈடுபாட்டை முன்னிறுத்த வேண்டும். இந்த ஆரம்ப செயற்பாடுகள் நமது முஸ்லிம் சமூகத்தில் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்விக்குறியுடையவர்களாக நாம் இருப்பது நமது பலவீனத்தின் முகமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.
நமது மக்களுக்கான தீர்வை நமது மக்கள் தீர்மானித்துக்கொள்ளாது அசமந்தமாக செயற்பட்டுக்கொண்டிருப்பதை பார்க்கும்போது தீர்வின் மீதான அக்கறையின்மையினால் ஏற்படும் பாதகங்களை நோக்கிய பயணத்தின் அறிகுறியாகவே அது பெரும்பாலும் அமைந்துவிடும் என்கின்ற அம்சத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
இதில் ஒரு விசித்திரம் என்ன தெரியுமா? நாம் தீர்வைப் பெற வேண்டிய ஒரு சமூகமா? இல்லையா? என்பதில் கூட ஏகமான ஒரு கருத்தியலில் திடம் கொள்ளாதவர்களாக நமது நிலைப்பாடு அமைந்திருப்பதுதான் நமக்கான தீர்வுகுறித்து சிந்திப்பதற்கு பதிலாக அதில் அக்கறையின்றி இருப்பதன் பின்னணியாகும்.
வெளிப்படையாக நமக்கான ஒரு தீர்வைத் தேடாது தீர்வை வழங்கவேண்டிய சமூகமாக இருக்கின்ற சிங்கள மக்களின் கருத்துக்குச் சார்பான நிலைப்பாட்டில் இருந்து தீர்வுகள் குறித்து நமது மக்களில் சிலர் சிந்திக்க தொடங்கியிருப்பதும் அதனை பரப்புரை செய்து வலியுறுத்த முனைப்புக்கொண்டிருப்பதும் நம்மை இயலாதவர்களாகவே நிலைநிறுத்திவிடும்.
“இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு விடயத்திலோ,அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலோ கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களுடன் கலந்துரையாடாமல் எந்தவொரு தீர்வையும் முஸ்லிம்கள் முன்வைக்கக் கூடாது’ என கிழக்கு மாகான முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
காத்தான்குடி பள்ளிவாசல்கள்,முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்த 22.2.2016 காத்தான்குடியில் நடைபெற்ற அரசியல் யாப்புத்திருத்தம் தொடர்பான கிழக்கு மாகாணம் தழுவிய மாநாட்டின் போதே இந்த தீர்மாணம் உள்ளடங்களாக பதினைந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்வு விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் தனித்தியங்கக் கூடாது என்ற கருத்து வரவேற்புக்குரியது மட்டுமன்றி, உண்மையாக கடைப்பிடிக்கவேண்டிய ஒரு விடயம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இம்மாநாட்டில் கலந்துகொண்ட குடியியல் சமூக அமைப்புக்கள் மட்டும்தான் கிழக்கு மாகாணத்தில் இயங்கக்கூடியவைகள் அல்ல.
குறித்த சில முஸ்லிம் குடியியல் சமூக அமைப்புக்கள் மட்டும் ஒன்றுகூடி நிறைவேற்றும் தீர்மானம்தான் நமது இன்றைய இனப்பிரச்சனைக்கான தீர்வாகிவிடுமா என்ற ஒரு கேள்வியும் இவ்விடத்திலுள்ளது. அதுமட்டுமன்றி இவ்வமைப்புக்கள் அடையாளம் கண்ட அல்லது சிபாரிசு செய்வது மட்டும்தான் நமக்கு போதுமானது என திருப்தியடைவதும் ஒரு சரியான முடிவாக தெரியவில்லை.
மேற்படிய மாநாட்டு தீர்மானத்தின் பதினைந்து அம்சங்களில் சிலவற்றில் கேள்விகள் கூட நமக்கு ஏற்படுவது தவிர்க்கமுடியாதிருக்கின்றது. ஏனெனில் இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை என்பது இன்றிருக்கும் கிழக்கு மாகாணம் அப்படியே இருக்க வேண்டும். அம்மாகாணம் வேறு மாகாணத்துடன் குறிப்பாக வடக்குடன் இணைக்கப்படக் கூடாது என்பதை இது உட்கிடையாக வலியுறுத்துகின்றது.
இதன் இன்னொரு தெளிவான முகம் எதுவென்றால் மாகாண சபையூடாகத் தீர்வு உறுதிப்படுத்தப்படும்போது ஏலவே அமைந்துள்ள ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்கள் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்டதாகவும் அம்மக்களை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகும் வகையில் தம்மை நிலைநிறுத்துவதை இலகுபடுத்திவைக்கும். அதேநேரம் தமிழ் மக்களை பெரும்பான்மையாகவும் அம்மக்களில் ஒருவர் முதலமைச்சராகவும் மிக எளிதாக தெரிவுசெய்துகொள்ளப்பட கூடிய வாய்ப்பும் வடக்கு மாகாணத்தில் அமையும்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் மட்டும் எந்தவொரு சமூகமும் தனித்து ஆட்சியை கைப்பற்றிக் கொள்ளும் சந்தர்ப்பம் இல்லை என்பதை இன்றமைந்துள்ள எல்லைகளைக் கொண்ட கிழக்கு மாகாண சனத்தொகை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இதன்படி ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துடன் கைகோர்க்கும் போதுதான் ஆட்சி அதிகாரத்தை பெற முடியும். இவ்வாறான சூழ்நிலை என்பது தெளிவாக ஒரு முஸ்லிம் முதலமைச்சரை தேர்ந்து கொள்வதில் சிரமங்களை முன்னிறுத்துவதாகவே பார்க்கவேண்டியுமுள்ளது.
அதேநேரம் முஸ்லிம்களுக்கான தீர்வு என்று இதனை பார்க்காது பொதுவாக ஏனைய எட்டு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் எந்த பாதுகாப்பையும் பயன்களையும் அனுபவிப்பார்களோ அதனையே கிழக்கு மாகாண முஸ்லிம்களும் எட்டிக்கொள்வர் என்பதனையே இது நிரூபிக்கின்றது. இது இனப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கான தீர்வு என்ற அந்தஸ்த்தை இல்லாதொழித்துவிடுகின்ற அபாயத்தையும் தெளிவாக சுட்டிக்காட்டத் தவறவில்லை.
இப்படி முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணம், முஸ்லிம் முதலமைச்சரை அம்மக்களின் பலத்தினால் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு நிலை தோன்றக்கூடாதென்பதை கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றிணைந்த தீர்மாணம் வெளிப்படுத்துகின்றது. இப்படியான ஒரு நிலையில்தான் பின்வரும் இரண்டு தீர்மானங்களும் உள்வாங்கப்பட்டுள்ளது.
01)மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் மாகாண முதலமைச்சருக்கும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படல் வேண்டும்.
02)மாகாணங்களுக்குரிய பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறான அதிகாரங்களில் யாரும் தலையிடக் கூடாது.
நாம் நமது மாகாணம் என்று அடையாளப்படுத்தும் மாதிரி நமக்குத் தேவையில்லை. மாகாணங்களுக்கு மட்டும் அதிகாரம் வேண்டும் எனக் கேட்டிருப்பது முரண் நகைக்குரிய விடயமாக நோக்கத்தக்கது. இதற்கப்பால் இம்மாநாடு முஸ்லிம் கட்சிகளுக்கும் முஸ்லிம் குடியியல் சமூக அமைப்புக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்தும் வகையிலும் இந்த தீர்மானங்களின் பின்னால் மறைந்திருப்பது மறைவன்று. நமது மக்களுக்கான ஒரு தீர்வை நாம் அடைந்து கொள்வதென்றால் அதற்கு அரசியல் தயவு மிகவும் அவசியமான ஒன்றென்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
நமது குடியியல் சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகளின் புலமை சார்ந்த கருத்துக்கள் என்பவற்றை உள்வாங்கி பொதுவாக முஸ்லிம்களுக்கு ஏற்ற தீர்வு இதுதான் என ஒற்றைத் தீர்வாகவும் ஒருமித்ததாகவும் முன்வைக்கப்படல் வேண்டும். அதுதான் வலிமையான முடிவாக அமைவதற்கு ஒரு விவேகமான வழியாகவும் இருக்கும்.
தீர்வு எது என்பதில் நமக்குள் பலமாக விவாதிக்கப்படலாம். சாதக பாதகங்கள் குறித்து அலசி ஆராயவேண்டும். அது குடியியல் சமூகம் என்றும் அரசியல் சமூகம் என்றும் பிரிந்துநிற்காது ஒன்றுபட்டு செயற்படவேண்டும். நமது அரசியல் கட்சிகளின் தயவு மட்டுமன்றி நாம் எடுக்கும் தீர்வை எய்திக்கொள்வதற்கு பெரிய கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற நமது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளின் அனுசரனையும் தேவப்படும்.
இப்படி நமக்கான ஒரு தீர்வை அடைந்துகொள்வதற்கு தேவைப்படும் அனைத்து சக்திகளையும் ஓரணிக்கும் ஒருமித்த கருத்துக்கும் கொண்டுவரவேண்டிய அவசியப்பணி நமது மக்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கின்றது. இதனால் யாரும் யாரையும் குறைத்து மதிப்பிடாமால், யாரையும் ஓரம்கட்டாமல் நமக்கான ஒரு தீர்வை அடையாளப்படுத்த முன்வரவேண்டும்.
இவ்வாறின்றி ஒவ்வொருவர்களும் அவரவர்களுக்கு சரிகாணும் தளத்தில் நின்றுகொண்டு நமக்கான தீர்வைத் தேடும்போது சிக்கல்களும் குழப்பங்களும் தோன்றி நமது இலக்கை அடைந்து கொள்வதிலிருந்து நம்மை பிற்படுத்திவிடும் ஆபத்தையும் பயனற்ற ஒரு நிலையையும் மிக எளிதாக நமக்குள் கொண்டுவந்து சேர்த்துவிடும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டதுகூட அன்றைய நமது நாட்டு ஆட்சியாளர்களின் விருப்போடு நிகழ்ந்த ஒன்றல்ல. இனியும் அவ்வாறான பலாத்கார நிர்ப்பந்தமொன்று இன்றைய ஆட்சியாளர்களை கவ்விக்கொள்ளமாட்டாது என்று திடமாக நம்புவதற்குமில்லை. எதுவும் நடக்கலாம். அவ்வாறான சூழல் தோன்றினால் அப்போது பார்த்துக்கொள்வோம் நாம் இப்போது சும்மா இருப்பது முறையல்ல.
தீர்வாக எதுவந்தாலும் அதற்குள் நமது தீர்வும் இருக்க வேண்டும் என்றவகையில், கடந்தகால அனுபவங்களை பாடமாகக் கொண்டு எதிர்காலத்தை நேர்த்தியுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் கட்டமைத்துக்கொள்ளும் இயங்கியலும் பொறிமுறைகளும் நமது மக்களுக்கும் நமது மக்களை வழிநடத்தும் பொறுப்புள்ளவர்களுக்கும் வேண்டும்.
நமது நாட்டின் தீர்வினை அரசாங்கம் முன்வைக்கும் ஒற்றையாட்சி, சமஷ்டி போன்ற எந்த வழிமுறையானாலும் அது மாகாண சபை முறைமையினூடாகவே நடைமுறைப்படுத்தப்படும். அந்தநிலையில் நமக்கான ஓர் அரசியல் அதிகாரம் வருவதற்கு ஓர் மாகாண தளம் முக்கியம். நமது நாட்டில் உருவாகும் மாகாணம் என்பது ஒரு தனிநாடல்ல. அது நிர்வாக அதிகார பரவலாக்கம் என்பதை நாம் தெளிவாக கவனத்திற்கொள்ளவேண்டும்.
முஸ்லிம் மாகாணம் என்பதோ முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணம் என்ற சொல்லாடலோ நாட்டில் இனவாதமாக பார்க்கப்படும் ஒன்று என நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. சிங்கள மக்கள் விரும்பாத வடகிழக்கு மாகாண சபை கூட நமது நாட்டில் உருவாக்கப்பட்டதுதான். அது சிங்கள-தமிழ் கலவரங்களை உருவாக்கி வைக்கவில்லை.
நாட்டில் வரும் பொதுவான ஒரு நடைமுறைக்குள்தான் நாம் கேட்கின்ற அல்லது காணவேண்டும் என நம்பும் தீர்வும் உளடங்கும்.ஆகையால் அத்தீர்வு பொதுவான கொதி அலைக்குள் சிக்கலாமே தவிர குறிப்பாக நமது சமூகத்துக்கு மட்டுமான எதிர்த்தாடலாக குடிகொள்ளப்படாது.
தென்கிழக்கு அலகு எனும் சொல்லாடல் அகன்ற முஸ்லிம் மாகாணத்துக்குப் புறம்பானது. அது அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்டதென எம்மிற் சிலர் நம்பும் அதேவேளை இவ்வாறுதான் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தனது அரசியல் வாழ்வின் பின்னாட்களில் முஸ்லிம் மாகாணத்தில் எல்லையை சுருக்கிக்கொண்டார் என்ற ஒரு சந்தேகமும் இருக்கின்றது.
உண்மையில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவ்வாறு எல்லையை சுருக்கி அம்பாறை மாவட்டத்தை மட்டும் மையப்படுத்தி தென்கிழக்கு அலகு அவரால் பேசப்படவில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் ஏராளம் உண்டு.அதனை பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.
அம்பாறை, திருமலை, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களை கைவிட்டுவிட்டு தென்கிழக்கலகு பற்றி மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் சிந்தித்தவரென குறுகிய சித்தரிப்புக்குள் அவரை வைத்து நோக்க எடுக்கும் எத்தனங்களும் இல்லாமலில்லை.
அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கவேண்டும் போலிருக்கின்றது. மேற்குறித்த மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் எங்களையும் முஸ்லிம் மாகாணத்தில் சேர்க்கப்படவேண்டுமென பகிரங்கமான வேண்டுகோளோ அதற்கான அடையாள ஹர்த்தால்களோ மேற்கொண்டதாக வரலாறு உண்டோ? ஆயினும் அஷ்ரஃப் அவர்கள் யாரையும் கைவிடவில்லை.
கருப்புக்கொடியைக் கட்டி மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபிற்கு எதிர்ப்புத்தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட குறிப்பாக காத்தான்குடி ஹர்த்தாலின் பின்புலமும் அதன் நோக்கமும் வேறானது. அது தனிப்பட்ட அரசியலின் வெளிப்பாடு என்பது மறைந்த ஒன்றல்ல. ஆனால் அதனை வசதிக்காக வேறு காரணம் கொண்டதாகச் சிலர் அன்று காட்டிவைத்தனர் என்பதே வரலாறு.
பொதுவாக நமக்கான தீர்வு என்று ஒன்றை அடையாளம் காணும்போது அதில்கூட சில பலவீனங்கள் இருக்கவே செய்யும். இது மனித அறிவினால் காணப்படும் தீர்வுகளுக்குரிய பண்புமாகும். இதற்கு நாம் மட்டும் விதிவிலக்காகிவிட முடியாது.
இவ்வாறான யதார்த்த நிலைகளை உள்வாங்கிக்கொண்டு நமக்கான ஒரு தீர்வை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும். மாறாக இன்றிருக்கும் நிலையை மாத்திரம் வெளிப்படையாகப் பார்த்து அதனை நம்பி நமது தீர்வுகளை நகர்த்திக்கொள்ளாது எதிர்காலத்தினையும் கருத்தில் கொண்டும் நிகழ்காலத்து நிலைப்பாட்டையும் சீர்தூக்கிப்பார்த்து நமக்கான தீர்வை நோக்கி முன்னகராத நமது திசைமாறும் கருத்துக்கள் நமக்கு தீமையானதே.
(சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம்.எம்.நூருல் ஹக் சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமாவார். அரசியல்,வரலாறு, இலக்கியம் சார்ந்த பல்வேறு ஆக்கங்களை தொடராக எழுதி வருகிறார்)

