(எம்.எம்.எம். நூறுல்ஹக்)
நமது நாட்டில் இறுதியாக
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவினை முஸ்லிம்கள் பெரியளவில் ஆதரிக்கவில்லை
என்பது மிகவும் பகிரங்கமானது. இந்நிலைப்பாட்டுக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் வந்ததற்கு
காரணம் வெளிநாட்டு சக்திகளின் சதிவலையில் முஸ்லிம்கள் சிக்கிக்கொண்டதல்ல என்பதும் வெட்டவெளிச்சமானது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த
ராஜபக்ச தோற்றதின் பின்னர் முஸ்லிம் மக்களை சந்திப்பதில் அதிக கரிசனையையோ, ஆர்வத்தையோ
காட்டியிருக்கவில்லை. அவரது சில முஸ்லிம் நண்பர்களை சந்தித்த சந்தர்ப்பங்கள் மாத்திரம்
நடைபெற்றதும் நாம் அறிந்ததே.
இவ்வாறான சூழ்நிலைக்கு
மத்தியில் கடந்த 19.02.2016இல் மல்வாணையில் மஹிந்த ராஜபக்சவுக்கும் முஸ்லிம் மக்களுக்கும்
இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் அவர் உரையாற்றும் போது தெரிவித்த
கருத்துக்களில் பின்வரும் மூன்று அம்சங்கள் குறித்து நமது கவனக்குவிப்பை செலுத்த வேண்டியுள்ளது.
"என் மீது இனவாத முத்திரை
குத்தி எனக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்
நிலவிய நல்லுறவை சீர்குழைக்கும் சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு சர்வதேசமும்
உதவியுள்ளது. முஸ்லிம்களுடன் நாம் ஆரம்பக்காலம் முதல் நல்லுறவை பேணி வந்துள்ளேன்."
"என்னுடைய ஆட்சியில்
முஸ்லிம்களுக்கு இடம்பெற்றதாக கூறும் அநீதிகள் என்னை மீறி நடைபெற்றவையாகும். அதற்கு
நான் எந்தவகையிலும் பொறுப்பில்லை".
"நல்லாட்சி அரசாங்கம்
முஸ்லிம்களது அரசியல் அதிகாரத்தை இல்லாமற்செய்வதற்கான திட்டங்களை திரைமறைவில் முன்னெடுத்து
வருகிறது."
இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின்
வெளியுறவு கொள்கையில் அதிகமாக கைகோர்த்துள்ள ஐரோப்பிய நாடுகள் என்பன பொதுவாக முஸ்லிம்
விரோத செயற்பாட்டை கொண்டவர்கள் என்பது சிறு பிள்ளைகளுக்கு கூட தெரிந்த ஒன்றாகும்.
அவ்வாறானவர்களுடன் இலங்கை
முஸ்லிம்கள் இணைந்து காரியமாற்றும் இயங்கியல் அவ்வளவு எளிதாக நடைபெறக்கூடிய ஒரு விடயம்
அல்ல. அப்படியான சூழலில் சர்வதேசத்தின் சதிவலையில் இலங்கை முஸ்லிம்கள் சிக்கி செயற்படும்
சாத்தியம் அரிதான பக்கமாகும்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி
மாற்றத்தை குறியாக கொண்டு செயற்பட்ட சர்வதேச சக்திகள் என அவர் நம்பும் அதே சக்திகள்
முஸ்லிம் விரோத செயற்பாட்டாளர்கள் என்பது திட்டவட்டமானது. இதனால் இவர்களுடனான கூட்டுறவு
ஏற்பட்டிருக்கிறது என்று சாடையாக குற்றம் சாட்டுவது ஏற்கக்கூடிய சமச்சாரமாகவும் பார்க்க
முடியவில்லை. இது அவரது தேர்தல் தோல்விக்கு முன்னரும் சரி, பின்னர் என்றாலும் சரி.
எமது நாட்டில் நடைபெற்ற
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ச மீது பெரும்பாலான முஸ்லிம்கள்
சினேகபூர்வமாக நோக்கவும் அவர் மீதான நம்பிக்கையை விரிவுபடுத்துவதற்குமான சூழ்நிலை நிலவவில்லை.
இது அவருக்குப் புரியாத ஒன்றல்ல.
இப்போது வேறுகதையாடலை தொடக்கிவைக்கும்
உட்கிடையான எண்ணத்தில் திசையை மாற்ற அதாவது தனது கடந்த கால முஸ்லிம் விரோத போக்குகளை
கண்டுகொள்ளாமல் விட்ட தவறை மறைப்பதற்கெடுக்கும் ஒரு எடுப்பாகவே இதனைப்பார்த்து முஸ்லிம்கள்
தயங்க வேண்டிய இக்கட்டையும் இது கொண்டுள்ளது.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தல்
நடைபெறும் காலத்துக்கு முந்திய இரண்டு வருடங்கள் மஹிந்த ராஜபக்சவின் வரலாற்றை பின்னோக்கி
பார்த்தால் மஹிந்த ராஜபக்ச மீதான வெறுப்புணர்வு அல்லது அவரை விரும்பான்மை என்பது திடீரென
புகுந்துகொண்ட ஒரு நிகழ்வாகவும் இதனை பார்க்க முடியவில்லை. அது படிப்படியாக முஸ்லிம்
மக்களிடம் இயல்பாக ஒட்டிக்கொண்டதென்பது புரிந்து கொள்ள முடியாத பக்கமும் அல்ல.
நமது நாட்டில் பௌத்த -
சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளாக தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்திச் செயற்படும்
பல அமைப்புக்கள், புத்திஜீவிகள் என பலவிருந்தாலும் அவற்றுள் மேற்குறித்த காலப்பகுதியில்
பொதுபலசேனாவின் நேரடியான முஸ்லிம் விரோத ஈடுபாடுகள் அதிகரித்த காலப்பகுதியாக அவை காணப்படுகின்றன.
ஹலால் பிரச்சினை, பள்ளிவாசல்
பிணக்கு மற்றும் மத்ரஸா இடைநிறுத்தம் போன்ற முஸ்லிம்களின் மதக்கடமையோடும் அவர்களின்
மார்க்கரீதியான செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலுமான பல்வேறு நெருக்கடிகளை
தொடர்தேர்ச்சியாக நமது முஸ்லிம் மக்கள் மீது பிரயோகித்துக்கொண்டனர்
இத்தோடு நிறுத்திக்கொள்ளாது
நமது முஸ்லிம் மக்களின் பொருளாதார தளங்களை சிதைப்பதிலும் இருப்பியலை அச்சுறுத்தும்
வகையிலும் இனக்கலவரத்தை தொடங்கி வைக்கும் முன்முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்
இதன் உச்சமாக பேருவளை, அழுத்கம, தர்ஹா நகர் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த நமது மக்கள்
மீது அத்துமீறி அட்டகாசம் புரிந்து உயிரிழப்பு தொட்டு உடமை சேதங்கள் வரை நடத்தி முடித்தும்
இருந்தனர்.
முஸ்லிம்கள் மீதான பொதுபலசேனாவின்
இவ்வாறான அத்துமீறல்களையும் ஆக்கிரமிப்புக்களையும் அன்று பதவியில் இருந்த நிறைவேற்று
ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவிடம் முஸ்லிம் மக்கள் சார்பில் அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள்,
குடியல் சமூக அமைப்புக்கள், மார்க்க உயர் சபை போன்ற பலர் எடுத்துக்காட்டியும் ஊமையாகிப்
போயிருந்தவர்தான் இந்த மஹிந்த ராஜபக்சவாகும்.
அதுமாத்திரமன்றி இவ்வாறான
முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் பௌத்த - சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகள் அவ்வப்போது
மேற்கொண்ட துவம்சங்களை மக்கள் பிரதிநிதிகள் அமைச்சரவை கூட்டங்களில் தெரிவித்திருந்தும்
அதனை கண்டுகொள்ளாத நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்துவிட்டு இன்று என்னைமீறி நடைபெற்ற
சம்பவங்கள் அதுவென நீலிக்கண்ணீர் வடிப்பது ஒரு மாயத்தோற்றமே.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல்
வந்ததினால் முதலில் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் அதிகாரத்துவத்தை மாற்றுவதுதான் நமது
முஸ்லிம் மக்களின் எதிர்கால நலன்களுக்கு உடனடி நிவாரணம் என்கின்ற தற்காலிக விடுதலை
சிந்தனையின் பக்கம் தமது மக்களின் எண்ணங்கள் சாயத்தொடங்கி விட்டன.
இதுவொரு நிரந்தர தீர்வாகவோ
எதிர்காலத்தை கொண்ட செயற்பாடாக இல்லாவிட்டாலும் சூழ்நிலை நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கும்
சற்று ஆறுதலுக்குமான திசையில் பயணிக்க தொடங்கினர். இதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாத
ஒன்றாகவும் அமைந்திருந்தன.
இதனால் மஹிந்த ராஜபக்சவின்
ஆட்சி மாற்றம் குறித்து நமது மக்களின் கவனம் திரட்சிகொண்டதே தவிர வேறில்லை. உண்மையில்
அன்றும் சரி, இன்றும் சரி மஹிந்த ராஜபக்சவின் மீதான தனிப்பட்ட விரோத சிந்தனைகளின் அடிப்படையிலோ,
சர்வதேச சதிப்பின்னணியிலோ இவ்வாறான ஆட்சியை மாற்றும் நடவடிக்கையில் முஸ்லிம் மக்கள்
ஈடுபடவில்லை என்பதும் உறுதியானது.
மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம்
சந்திப்பில் அண்மையில் அவர் கூறிய கருத்தில் தனது ஆட்சி காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு
நடந்த அநியாயங்கள் தனது சக்திக்கு அப்பால் நடந்தேறியதென ஒப்புதல் வாக்குமூலம் தருகின்றார்.
இதனால் அவர் மீதான பற்றுதல் ஏற்படுவதற்கு பதிலாக எதிர்த்தாடல்களை முன்னிறுத்த வேண்டிய
நிர்பந்தத்தைத்தான் முஸ்லிம் மக்கள் மீது அவர் இன்று சுமத்தியிருக்கின்றார்.
பௌத்த - சிங்கள பேரினவாத
ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தல்கள் நமது முஸ்லிம் மக்கள் மீது பகிரங்கமாக பதிவாக்கப்பட்ட
போது மஹிந்த ராஜபக்ச சாதாரண ஒருவராக இருக்கவில்லை. நமது நாட்டில் காணப்பட்ட யுத்த சூழலை
வெற்றிகொண்ட மகா புருசராக வீற்றிருந்தார். போதாக்குறைக்கு அவரிடம் நிறைவேற்று அதிகாரமும்
குவிக்கப்பட்டுமிருந்தார்.
அன்றைய முஸ்லிம்கள் மீதான
பொதுபலசேனா போன்றோர்களின் முஸ்லிம் விரோதப்போக்குகள் திடீரென ஒரே நாளில் மேற்கிளம்பி
நம்மீதான துவம்சமாக நடந்து முடிந்த ஒன்றல்ல. மாறாக படிப்படியாக முனைப்புக்கொண்ட கட்டமைப்பில்
திட்டமிட்டு பொறிமுறையாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இதனால் நமது நாட்டின் புலனாய்வுத்துறையினர்
இதுபற்றி மஹிந்த ராஜபக்சவிடம் எடுத்துக்கூறாமல் இருந்திருக்க முடியாது. ஏனெனில் முப்படைகளின்
தளபதியாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அன்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்று நடந்த எந்த அநீதியான
தீவிர செயற்பாட்டுக்கும் நாம் பொறுப்பில்லையென இன்று பகர்வது தமது கடமையை செய்ய தவறிய
அல்லது இயலாமையை குறித்துக்காட்டுமே தவிர அவர்மீதான நம்பிக்கையை விதைப்பதற்கு வழியாகிவிடாது.
இதன் அர்த்தம் மஹிந்த ராஜபக்சவின் பக்கம் இருந்து நமது மக்கள் விலகிச்செல்லும் நிலையைத்தான்
உறுதிப்படுத்தும். மாறாக அவர்மீதான ஈடுபாட்டை ஒருபோதும் நெருக்கமாக்கி வைக்காது.
இன்றைய மஹிந்த ராஜபக்சவின்
வெளிநாட்டு ஆதிக்க சக்திகளுக்கு முஸ்லிம் மக்கள் விலையாகிப்போய் தன்மீதான அக்கறையை
குறைத்து தன்னையொரு முஸ்லிம் விரோதியாக பார்க்கும் மனோநிலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்
என்கின்ற கதையாடல்கள் கூட முஸ்லிம் மக்களுக்கு வேறுவிதமான பாதகங்களை உள்நாட்டில் காணப்படும்
பேரினவாத சக்திகளின் ஊடாக விளைவிக்கப்பட்டுவிடுமோ என்கின்ற அச்சத்தையும் தயக்கத்தையும்
சொந்தம் கொள்ளவே வழிசமைக்கக் கூடியது.
அதிகாரத்தில் இருக்கும்
போதே முஸ்லிம்களின் துயர் துடைக்க தயார் இல்லாத நிலையில் இருந்த மஹிந்த ராஜபக்ச இன்று
எவ்வித அதிகாரமும் பலமும் இல்லாத நிலையில் துயரகற்றுவார் என்ற நம்பிக்கையை எதனடிப்படியில்
அவர் மீது முஸ்லிம் மக்கள் வைப்பார்களென்று நம்புகின்றார். அதற்கான நியாயங்களை நாம்
காணக்கூடியதாகவும் இல்லை. இதனாலும் இவரது வெளிநாட்டு சதி பரப்புரை முஸ்லிம்களுக்கு
சாதகமான பக்கமாக தெரியவில்லை.
அண்மையில் கூட சிறையில்
இருக்கின்ற பொதுபலசேனாவின் அடிவருடிகளை சென்று பார்வையிட்டு திரும்பியிருக்கும் மஹிந்த
ராஜபக்சவினால் பௌத்த - சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளின் உறவை முறித்துக்கொள்ள முடியாத
ஒரு தேவையுடையவராகவே அவர் தென்படுகின்றார். இந்நிலையில் அவர் மீதான நம்பிக்கை முஸ்லிம்
சமூகத்திற்கு வருவதென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு கோணத்தையே பெறுகின்றது.
எந்தவொரு வெளிநாட்டு சக்திகளின்
சதியினாலும் முஸ்லிம் மக்கள் மஹிந்த மீதான பற்றுதலை கைவிடவில்லை. மாறாக அவரது பௌத்த
- சிங்கள பேரினவாத ஆதிக்க குணாம்சத்தினாலும் அதன் மீதான அவரது நேசநடவடிக்கைகளில் வெளிப்படுகின்ற
முஸ்லிம் விரோத போக்குகளை கண்டுகொள்ளாத அல்லது தட்டி கேட்காத பண்புதான் அவரை முஸ்லிம்களிடமிருந்து
படிப்படியாக கீழிறங்க செய்வதன் பிண்னணியாகுமென்பதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை.
பொதுவாக ஆட்சியிலிருக்கின்ற
எந்த அணியினரானாலும் அவர்களது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக முஸ்லிம் விரோதப்போக்கில்
ஈடுபடுகின்ற பேரினவாத சக்திகளை அனுசரித்து செல்கின்ற ஓர் வழக்கத்தை இலங்கை அரசியலில்
வரலாற்றில் மிக சதாரணமாக காணக்கூடிய ஒன்றாக இருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. இத்தகைய
நிலைகள் இல்லாதொழிக்கப் படவேண்டிய ஒரு கூறாகும்.
இதனை முஸ்லிம் சமூகம் செய்யவோ
செய்விக்கவோ முடியாத ஒன்றாகும். ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற எந்த அணியானாலும் அந்த
அணியினர் மனம் வைத்து நீதியாக நடக்க எண்ணுகின்ற போதுதான் நீதியானதொரு அரசாங்கத்தின்
கீழ் நாம் வாழ்கின்றோம் என்கின்ற உணர்வு, நம்பிக்கை முஸ்லிம் மக்களிடம் உறுதியாக உருவாக
முடியும்.
அதுவரை நாம் கொத்தடிமைகள்
போன்றும் இரண்டாம் தரபிரஜைகள் போன்றும் பார்க்கப்படுவதும், நடாத்தப்படுவதும் நமது நாட்டில்
இருந்து மறைய போவதுமில்லை, மாற்றம் நிகழ்ந்து விடப்போவதுமில்லை.
ஆடு நனைகின்றது என ஓனாய்
அழுத கதை போன்றுதான் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் அரசியல் பலத்தை திட்டமிட்டு
அழிக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுகின்றதென குற்றம்சாட்டி நல்லாட்சி மீது கொண்டிருக்கும்
முஸ்லிம்களின் நம்பிக்கையை அசைத்து விடுவதற்கு ஒரு பொறிமுறையை வகுத்துக்கொண்டு மஹிந்த
ராஜபக்ச இப்படி கூறுகின்றாறோ என்கின்ற ஐயம் சிலருக்கு ஏற்பட்டாலும் அவரது கூற்றில் உண்மை புதைந்து
கிடக்கின்றதுதான்.
இதை சொன்னதால் மட்டும்
நமது அரசியல் பலத்தை கட்டிக்காப்பதில் பாரிய பங்களிப்பை அவர் நல்கியது போன்ற ஒரு தோற்றத்தினை
உருவாக்க முனைந்தாலும் அவரது கடந்த கால செயற்பாடுகளில் இத்தகைய உபத்திரங்களை முஸ்லிம்
மக்கள் மீது செய்திருக்கின்றார்.
இதற்கு முஸ்லிம் தனியான
கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தெடுத்த பாதகத்தையும் தொகுதியெல்லை நிர்ணயங்களில்
முஸ்லிம்களின் உள்ளுராட்சி பலங்களை குறைக்கும் வகையிலான வட்டாரங்களை வகுத்ததிலும் இவரது
ஆட்சி காலமும் உதாரணங்களாகவே இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச காட்டிவைத்த
இந்த பொறிமுறையை இந்த நல்லாட்சி அரசாங்கமும் தொடர்வதாக இதனை பார்க்க வேண்டும். மாறாக
நல்லாட்சி அரசாங்கம்தான் இதன் முதல் தோற்றுவாயென நாம் நம்பத்தேவையில்லை. இவ்வாறான கெடுபுடிகள்
எந்த அரசாங்கமானாலும் நம்மீது ஒரு தொடர் நெருக்குவாரமாகவே அமைகின்றது என்பதுதான் யதார்த்தமாகும்.
மஹிந்தவின் இந்த கூற்றின்
பின்னணியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் உண்மை இல்லையென்று தட்டிக்கழித்துவிட முடியாது.
முஸ்லிம்களை பொறுத்தவரை நமது நாட்டில் எந்த ஆட்சி அல்லது யாருடைய ஆட்சி நிகழ்ந்தாலும்
அங்கே காணப்படும் பௌத்த - சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளின் கோட்பாடுகளும் நசுக்குதல்களும்
முஸ்லிம் மக்கள் மீது நோக்கி பாய்வது மட்டும் நடந்து கொண்டுதான் இருக்கும்.
அந்த வகையில் நமது முஸ்லிம்
அரசியல் பலத்தை நலிவடைய செய்யும் வகையிலான காய் நகர்த்தல்கள் தேர்தல் சீர்திருத்தம்,
யாப்பு திருத்தம், இனப்பிரச்சினை தீர்வு என்ற முக்கோனங்களுக்குள் அடக்கி வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற
உண்மை நமது மக்களுக்கு புரிந்து கொள்ள முடியாத ஒரு பகுதியல்ல.
இன்றும் கூட பொதுபலசேனா
என்ற பெயர்தான் இல்லை. ஆனால் அவர்கள் முஸ்லிம்களாகிய எம்மீது எவ்வாறான அடந்தேறுதல்களை
மேற்கொண்டார்களோ அதனையொத்த மத்ரஸா மூடுதல், பள்ளிவாசல் அகற்றுதல், அல்லது வேறிடம் மாற்றுதல்
போன்ற சமய நெருக்கடிகள் நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இவைகளை இன்றைய நல்லாட்சி அரசாங்கமும் கண்டுகொள்ளாத ஒரு நிலைதான் எஞ்சி இருக்கின்றது.
சிங்கள இரத்தம் என்ற கோஷ
முன்னெடுப்போடு முஸ்லிம் விரோத போக்குகள் கட்டியம் கொள்ளப்படுவதுடன்ச் ஐ.எஸ்.ஐ.எஸ்
என்கின்ற குழுமத்துடன் இலங்கை முஸ்லிம்களை இணைத்து பேசுவதும் விமர்சிப்பதுமான ஆராவாரங்களும்
தலைக்காட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. இவைகள் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்து முஸ்லிம்
விரோத போக்குகளுக்கு சளைத்தவைகள் அல்ல என்பதை நிரூபிக்கும்வண்ணம்தான் உள்ளது.
நல்லாட்சியும் முஸ்லிம்களை
நட்டாற்றில் விட்டுவிடும் நிலையை தோற்றுவிக்காது என்றுமட்டும் உறுதியாக நம்பி மஹிந்த
ராஜபக்சவின் இன்றைய எச்சரிக்கை அறிவுறுத்தலை தூக்கி வீசிவிட முடியாத நிலையும்தான் இன்று
எம்மை கவ்விச் சூழ்ந்திருக்கின்றது.
இத்தகைய தேசஅரங்க்கில்
முஸ்லிம் விரோத நகர்வுகளை அடியோடு இனம்கண்டு முளையிலேயே கிள்ளிஎறிந்து விடுமளவில் இன்றைய
நிலையை நாம் தொடர்ந்தும் வைத்திருக்கும் ஆளுமையை கூர்மைப்படுத்திக் கொள்வதினால்தான்
எதிராகல சுபீட்சத்தை கட்டமைத்துக்கொள்ள முடியுமென்பதை நமது கவனத்தில் நிறுத்துவோம்,
அதற்கான மாற்று வழியையும் திருப்தியாகவும் சரியாகவும் அமைப்போம்.
(சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம்.எம்.நூருல் ஹக் சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமாவார். அரசியல்,வரலாறு, இலக்கியம் சார்ந்த பல்வேறு ஆக்கங்களை தொடராக எழுதி வருகிறார்)
(சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.எம்.எம்.நூருல் ஹக் சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமாவார். அரசியல்,வரலாறு, இலக்கியம் சார்ந்த பல்வேறு ஆக்கங்களை தொடராக எழுதி வருகிறார்)

