கருத்தொருமைவாத தேசிய அரசாங்கம் பதவியேற்று குறுகிய காலத்துக்குள்ளேயே எதிர்க்கட்சியின் பாரிய விமர்சனத்துக்கு உள்ளாகிவருகின்றது. இங்கே எதிர்க்கட்சி என நாம் பாராளுமன்றத்தில் உள்ள உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியை குறிப்பிடவில்லை.
மாறாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த அணியினரின் அரச எதிர்ப்பு விமர்சனங்களையே சுட்டிக்காட்டுகின்றோம். இவ்வாறான நகர்வுகளுக்கு மத்தியிலேயே தற்போது புதிய அரசியல் கட்சி ஒன்று தேவை என்ற கருத்தை ஒருசாராரும் அவ்வாறு புதிய அரசியல் கட்சி ஒன்று அவசியம் இல்லை என்று மற்றொரு சாராரும் அடிக்கடி கூறிவருவதை காண முடிகின்றது.
புதிய அரசியல் கட்சி வருமா வராதா என்பதே தற்போ தைய நிலைமையில் அரசியல் சூடான விடயமாக மாறியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கருத்தொருமைவாத தேசிய அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
இநநிலையில் தினமும் மாறி மாறி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருவதை காண்கின்றோம். நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளக விசாரணை பொறிமுறை விவகாரம் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் மஹிந்த அணியினரின் விமர்சனங்களுக்கு உட்பட்டுவருகின்றது.
அடிக்கடி செய்தியாளர் மாநாடுகளை நடத்திவருகின்ற மஹிந்த அணியினர் அரசாங்கத்தின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான திட்டங்கள் இல்லை என்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர்.
அது மட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் மீதும் ஐக்கிய தேசிய கட்சியின் மீதும் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றார். குறிப்பாக தனது குடும்பம் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டுவருவதாக அவர் அடிக்கடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றார்.
மேலும் மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் எனவே புதிய அரசியல் கட்சி ஒன்றின் தேவையை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக் ஷ கூறிவருகின்றார்.
இந்நிலையிலேயே புதிய அரசியல் கட்சியை உருவாக்கவேண்டும் என்ற விடயம் தற்போது நாட்டில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூறியிருப்பதாவது “”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நான் வெளியேறப்போவதாகவும் புதிய கூட்டணியை உருவாக்கப்போவதாகவும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் நான் இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கூட்டணி அமைக்கப்போவதாக தெரிவிக்கவில்லை. நான் இப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரனாகவே செயற்பட்டு வருகின்றேன்.
ஆனால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் சிலரே என்னை கட்சியை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
யார் என்ன செய்தாலும் நான் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை”” இவ்வாறு மஹிந்த ராஜபக் ஷ திட்டவட்டமாக கூறியிருக்கின்றார்.
ஆனால் இவர் இவ்வாறு கூறுகின்றார் என்பதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை என்று கூறிவிட முடியாது.
மஹிந்த அணியினர் அடிக்கடி தாங்கள் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்து செயற்படப்போவதாக கூறிவருகின்றனர். அதாவது புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான தீவிர பேச்சக்களில் ஈடுபட்ட மஹிந்த தரப்பினர் தற்போது அந்த விடயத்தில் சற்று பின்னடைந்து இருப்பதாக கருதப்படுகின்றது.
கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தின் சில அதிரடி நடவடிக்கைகள் இவ்வாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் புதிய கட்சியை அமைப்பதற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க தளர்வு ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம்.
இந்நிலையில் சுதந்திரக் கட்சியில் தற்போதைய நிலைமையில் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டுள்ளன என்பதனை யாரும் மறுக்க முடியாது. மஹிந்த அணியினர் –மைத்திரி அணியினர் என இரண்டு தரப்பினர் இருக்கின்றனர் என்பதே உண்மையாகும். இந்நிலையில் மைத்திரி அணியில் இருக்கும் அமைச்சர் சரத் அமுனுகம இந்த புதிய கட்சி விவகாரம் தொடர்பில் இவ்வாறு கூறுகிறார்.
“” இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிரியும் என்ற கதைகளை கூறி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர். ஆனால் இன்று கட்சி இரண்டாகப் பிரிய வேண்டும் என கூறும் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல.
ஒரு சிலர் கட்சிக்குள் இன்று இனவாதக் கருத்துகளை பரப்பி தமது இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றனர். எனவே இவர்களை நம்பி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எவரும் இல்லை. எமது கட்சி எப்போதும் தலைமைத்துவத்தினை ஏற்று அதற்கு கட்டுப்பட்டு செயற்படும் கட்சியாகவே இருந்து வருகின்றது.
அவ்வாறு இருக்கையில் புதிய கூட்டணி உருவாக்கும் எவரையும் நம்பி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் எவரும் களமிறங்கப் போவதில்லை. இன்று தனிக்கட்சி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவதாக கூறும் எவரும் தைரியம் இல்லாத நபர்கள்.
கோழியைப்போல கொக்கரித்துக்கொண்டு காலத்தை கடத்தும் நபர்களே இவர்கள். தனித்து பயணிக்க விரும்புகின்றவர்கள் தமக்கு தைரியம் இருக்குமானால் இந்த நேரம் தனிக்கட்சி அமைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாது முட்டையிடும் கோழியைப்போல கொக்கரித்துகொண்டு இருப்பது வெறும் வேஷம் என்றே கூறவேண்டும். இந்த அச்சுறுத்தல்களை கண்டு நாம் அஞ்சப்போவதில்லை.
தனித்து போக விரும்பும் எவரும் கட்சியை விட்டு வெளியேற அனுமதி உண்டு”” இவ்வாறு மிகவும் காரசாரமான முறையில் இந்த தனிக்கட்சி விவகாரம் தொடர்பில் அமைச்சர் சரத் அமுனுகம கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
மேலும் தான் கடந்த காலங்களில் கடந்த அரசாங்கத்தில் இருந்ததையிட்டு வெட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போதைய நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிரியும் பட்சத்தில் அதாவது மஹிந்த அணியினர் தனிக்கட்சியை ஆரம்பிக்கும் பட்சத்தில் அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கே அதிக நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட மஹிந்த ராஜபக் ஷ தரப்பினரும் மைத்திரி தரப்பினரும் இணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே 95 ஆசனங்கள் என்ற அளவுக்கு சென்றனர்.
இதனால்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சாதாரண பெரும்பான்மையைக்கூட பெற முடியவில்லை. ஆட்சியமைக்க 113 ஆசனங்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களையே பெற்றுக்கொண்டது.
ஒருவேளை மஹிந்த தரப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து தனித்து வேறொரு கட்சியில் போட்டியிட்டிருந்தால் அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கே அதிக நன்மை கிடைத்திருக்கும்.
விசேடமாக கூறப்போனால் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்திருக்கும் என்பதே யதார்த்தமாகும். இந்நிலையில் தற்போது கூட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் என தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த அணியினர் தனிக்கட்சி அதாவது புதிய கட்சியை அமைத்து தனித்து செயற்பட்டால் அதன் நன்மைகள் ஐக்கிய தேசிய கட்சிக்கே வந்து சேரும்.
இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அறிந்து வைத்திருப்பார். எனினும் இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் அடுத்தகட்டத்தில் நடைபெறும் என்பதே கேள்விக்குறியாக உள்ளன.
குறிப்பாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவும் இந்த தனிக்கட்சி ஆரம்பிக்கும் செயற்பாட்டில் தீவிரமாக இருக்கின்றார்.
அடிக்கடி செய்தியாளர் சந்திப்புக்களிலும் உதய கம்பன்பில தமது அணி தனிக்கட்சியை ஆரம்பித்து தனித்து செயற்படும் என்ற விடயத்தை கூறி வருகிறார். இந் நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பினர் தொடர்ச்சியாக உதய கம்பன்பிலவை விமர்சித்து வருகின்றனர்.
அதாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிரித்து பிளவு படுத்துவதற்கு முயற்சிப்பதாக உதய கம்பன்பில எம்.பி. மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியிலேயே புதிய கட்சி உருவாகுமா அல்லது வெறும் வாய்ச்சவடால் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பொறுத்தவரை பெரும்பான்மை மக்கள் மத்தியில் அவருக்கு இன்னும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனினும் எதிர்வரும் நாட்களில் அரசியல் நகர்வுகளும் அரசியல் நிலைமைகளும் எவ்வாறு அமையும் என்பதை எதிர்வு கூற முடியாது. அவ்வாறு எதிர்வு கூறப்பட முடியாத அரசியல் நிலைமைகள் யாருக்கு சாதகமாக அமையும் என்றும் கூற முடியாது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து மஹிந்த ராஜபக் ஷ தனிக்கட்சி அமைப்பாரெனின் அரசியல் ரீதியில் அவர் எடுக்கும் மிகப் பெரிய மற்றும் தீர்க்கமான தீர்மானமாக அது அமையும். ஆனால் தற்போதைய நிலைமையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவ்வாறான தீர்மானத்தை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எவ்வாறான முறையில் தனிக் கட்சியை ஆரம்பித்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறான முடிவுகளை எடுத்து செயற்பட்டாலும் அனைத்து தரப்பினரும் ஒரு முக்கியமான விடயத்தை மனதில் கொள்ள வேண்டும்.
அதாவது நாட்டில் சமூகங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி புரையோடிப் போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைகாண்பதற்கு தற்போது சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்குவதற்கு முன்வர வேண்டும். தற்போது தனிக்கட்சியோ அல்லது புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாகவோ கூறுபவர்கள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கும் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
தனித்து செயற்படுகின்றோம் என்ற போர்வையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகளுக்கும், நிரந்தர தீர்வை காண்பதற்கான முயற்சிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டு விடக்கூடாது.
தற்போது இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. எனவே இதன்மூலம் புரையோடிப் போய் கிடக்கின்ற நீண்டகாலப் பிரச்சினை களுக்கு நிரந்தரமான மற்றும் நீடித்து நிக்க கூடியதுமான தீர்வுகளை காண்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஆரம்பித்து செயற்பட முற்படுவதானது நல்லிணக்கத்தையும் தீர்வு முயற்சிகளையும் பாதித்துவிடும் அபாயத்தை கொண்டுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தமது அணியினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதற்காக தனி அரசியல் கட்சி என்ற எண்ணக்கருவிற்கு செல்வதற்கான சாத்தியமே காணப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அண்மைக் காலங்களில் தெரிவித்து வரும் காரணங்களைப் பொறுத்து அவர் புதிய கட்சியை நோக்கி பயணிப்பார் என்ற விடயம் அரசியல் உலகில் தெ ளிவானதாகவே உள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக் ஷ புதிய கட்சியை தொடங்குவது குறித்து தாம் இன்னும் சிந்திக்கவில்லை என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு நான் ஒருபோதும் விலக மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
எவ்வாறிருப்பினும் புதிய கட்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்திருந்தாலும் கூட தான் அவ்வாறு செய்வேன் என மஹிந்த ராஜபக் ஷ ஊடகங்களிடம் கூறுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது.
விசேடமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பின்தள்ளிப் போகும் பட்சத்தில் மஹிந்த தரப்பினரின் புதிய கட்சிகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் தாமதமடையும் நிலைமை காணப்படுகின்றது.
கருத்தொருமைவாத அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருடம் வரை தள்ளிப் போடுவதற்கு நாட்டம் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. எனவே எதிர்வரும் காலங்களில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்ததாகவே அமையும் என எதிர்பார்க்கலாம். கட்சிகள் எடுக்கப் போகும் தீர்மானங்கள் மற்றும் அதிரடி அரசியல் நகர்வுகள் என்பவற்றினூடாக அரசியல் களம் சூடு பிடிக்கும் என்பதே யதார்த்தம் ஆகும்.
–ரொபட் அன்டனி–

