சாதிக்க முடியாமல் சாட்டுக் கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Written By avathani Media Network on Saturday, February 20, 2016

(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)
கல்முனை மாநகரத்தில் இயங்கிவருகின்ற அம்பாறை மாவட்டத்துக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவ்விடத்தை விட்டு அம்பாறை நகரத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அதுகுறித்த ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பலைகளும் கடந்த வாரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தமை நாம் அறிந்ததே.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இடமாற்றம் குறித்தான முயற்சிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டு,கல்முனை மாநகரில் தொடர்ந்தும் இயங்குவது என்ற முடிவுக்கு அமைச்சர் தலதா அத்துக்கோரள வந்திருப்பதாகவும் தமது அதிகாரிகளுக்கு இது பற்றி பணிப்புரைகளை விடுத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதி அமைச்சர்களுமான எச்.எம்.எம் ஹரீஸ்,பைஸல் காசிம் ஆகியோர் இந்த விடயம் குறித்து பலதரப்பட்ட நடவடிக்கைகளில் கடுமையாக ஈடுபட்டு இப்பிரச்சனையை ஓரளவு அமைதிக்கு கொண்டுவந்திருக்கின்றனர் என சில செய்திகள் தெரிவிக்கும் அதேவேளை கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலையிட்டு இதனை முடிவுக்கு கொண்டுவந்ததாகவும் இன்னொரு பரப்புரையும் இதிலுள்ளது.

இதற்கு முன்னரும் அம்பாறை மாவட்டத்திற்கான பிராந்திய காரியாலயங்களாக செயற்படும் நகர அபிவிருத்தி சபை,வீடமைப்பு அதிகார சபை,இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் நிந்தவூரில் இயங்கிவரும் தொழிற்பயிற்சி நிலையம் போன்றவற்றிலும் இடமாற்றம் நிகழ்வதற்கு பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களும் நமக்கு மறைவானதல்ல.

இப்படி காலத்துக்கு காலம் ஏதாவது அலுவலகங்களை இடமாற்றி அம்பாறை நகருக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் முடுக்கிவிடப்படும் கோணம் தொடர்ந்தேச்சியான ஒன்றாகவும் ஒரு நெருக்கடியாகவும் இடம்பெற்றுவருகின்றன.அப்போதெல்லாம் நமது மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்துவதற்கு கோரிக்கை விடுவது மட்டும் நடந்துகொண்டிருக்கும்.ஆனால் இதனை முற்றாக தடுக்கும் வழியில் பயணிப்பதை மட்டும் விட்டுவிடுவார்கள்.

இதனால் சில விடயங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும்.பின்னர் சிலகாலம் கழித்து மீண்டும் அதே பிரச்சனை மேற்கிளம்புவது போன்ற நிகழ்வுகளும் ஒரு சர்வசாதாரணமாக தோன்றிவிடும் கதையாடல் நீண்ட செயற்பாடாக இருந்துவருகின்றது.அப்போது மனப்பாடம் பண்ணியது போன்று இவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்வருமாறு தமது அறிக்கைகளை விடுவதற்கு மட்டும் தவறுவதில்லை.

அமைச்சர் அதாவுல்லாஹ்வின் சதியினால்தான் இந்த இடமாற்றம் நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது,அமைச்சர் தயாரத்தினவினால்தான் இவ்வலுவலகம் இடமாற்றப்படுகின்றது போன்ற கூப்பாடுகளை பெரிதாக மொழிவதிலிருந்து மாறுபடுவதில்லை.இதுபோன்ற ஒன்றாகவே அண்மைய கல்முனை மாநகரில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக இடமாற்ரத்தின் போதும் அமைச்சர் தயா கமகேதான் இதற்கு காரணம் என சுட்டவும் தயங்கவில்லை.

இவற்றிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு விடயத்தை நமக்கு தெளிவுபடுத்துகின்றனர்.அதாவது நாம் அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சரி,இல்லாவிட்டாலும் சரி எம்மால் எதனையும் நிலையாக செய்துமுடிக்கும் ஆற்றல் இல்லை என்பதையும் அதனை மறைத்துக் கொள்வதற்கு அவர்களின் அரசியல் எதிரிகளாக செயற்படுபவர்கள் மீது பழியைப் போடுவதும் கட்டமைக்கப்பட்ட  முயற்சியாக மேற்கொள்ளப்படுகின்றது.

இதனூடாக தமது இயலாமையை பறைசாற்றிவைக்கின்றனர் என்கின்ற சொரணை கூட அவர்களை உசுப்பேற்றிவிட்டவர்களாக நடந்துகொள்கின்றனர்.ஏன் இப்படி அவர்கள் நடந்துகொள்கின்ரனர் என்றால் மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கான பலமாக இருக்கின்றது.

அவர்களின் நம்பிக்கை ஒருபோதும் பொய்த்துவிடாத வகையில் நமது மக்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சொல்வதை ஒரு வேத வாக்குக்கு நிகரானது என்றெண்ணி செயற்படும் மனோபாவத்திலிருந்தும் விடுபடாத நமது பிற்போக்குத்தனம்தான் அவர்களின் பிரதிநிதித்துவத்தின் உறுதிப்பாடாக அமைகின்றது என்பதை நாம் உணராத மக்களாக இருக்கும் வரை அவர்கள் வெற்றியாளர்களே.
நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளின் இப்படியான நகர்வுகள் இரண்டு நிலைகளில் நடந்தேறுகின்றன.ஒன்று அரசின் பங்காளிகளாக இருக்கும்போதும் மற்றொன்று அரசின் பங்காளிகளாக இல்லாத போதும் அதாவது எதிர்க்கட்சி அரசியலில் இருக்கும்போதும் நிகழ்கின்றது. இந்நிலையானது அவர்களை நோக்கி நாம் ஒரு கேள்வி கேட்க தூண்டுகின்றது.
உங்களின் அரசியல் அதிகாரத்துவ பலம் என்பது எதிர்க்கட்சி அரசியலில் இருக்கும்போது இல்லாதிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் அரசின் பங்களார்களாக வீற்றிருக்கும்போதும் இச்செயற்பாடு ஏற்கத்தக்கதல்ல. ஆயின் உங்களிடம் அரசியல் பலம் என்பது எப்போதும் வராத ஒன்றாகவே இருந்துவிடுவதை மிகவும் இது உறுதிப்படுத்துகின்றது.
அப்படியாயின் மக்களாகிய எமது உரிமைகளை காக்கும் வகையில் செயலாற்றும் அதிகாரம்,ஆளுமை,திறமை என்பன உங்களிடம் இல்லாதபோது உங்களை நாம் எமது பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்துக்கொள்வதினால் என்ன நன்மைகளை நோக்கி முன்னேறப்போகின்றோம் என்ற உண்மை நமக்கு உரைக்காதும் பொறிதட்டாதும் இருப்பதுதான் வேதனைக்குரிய பக்கமாகும்.

அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களுடைய மாவட்டம் என்பதை நிரூபிப்பதற்கு மூன்று பிரதிநிதித்துவம் நாம் பெறவேண்டும் என்று கடந்த பொதுத்தேர்தலின் போது மக்களை உசுப்பேற்றிய பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்,தேர்தல் வெற்றியின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக் குழு தலைமையிலும் தமது கட்சி உறுப்பினர் கௌரவ மன்ஸூர் உரித்துப் பெற்றதும் முழுமையாக இம்மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் இப்போது இன்னும் உறுதியாகிவிட்டது எனவும் சொல்லத்தவறவில்லை.
மக்களும் பிரதிநிதிகளின் கூற்றுக்கு இசைந்து செயற்பட்டு அவர்களின் அபிலாஷைகளான பதவி நிலையை அடைந்துகொள்வதற்காக தம்மிடமுள்ள வாக்குப்பலத்தை பெருவாரியாக இறைத்து அவர்களை உச்ச நிலைக்கு அமர்த்தியும் விட்டனர்.இதனால் அவர்களின் அரசியலதிகார பதவி எதிர்பார்ப்பு நிறைவை எய்திக்கொள்கின்றது.அதேநேரம் மக்களையும் சமூகத்தையும் கைகழுவி விடவும் துணிந்துவிடுகின்றனர்.

இதனூடாக நமது மக்களுக்கு வந்துசேரவேண்டிய பலன்கள் மட்டும் வந்தடைந்துகொள்ளாது பின்னடைவை பெறுகின்றது.இதனால் நமக்கு என்ன பயனென்று உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் நாம் இருக்கின்றோம்.இத்தகைய போக்கு நமக்கு எப்போதும் ஏற்றங்களையோ தேவையான மாற்றங்களையோ ஏற்படுத்திவிடப்போவதில்லை.

அரசியல் அதிகாரத்தின் பலம் ஆளும் பக்கம் இருக்கும் போது இல்லை என்றால் அது எப்போதும் எம்மிடம் கைகட்டி நிற்காது என்பதைத்தான் எடுத்துக்காட்டும்.இதனை மாற்றியமைக்கும் தேவையை நமது பிரதிநிதிகளும் இதன செயல்படுத்தும் பொறுப்பு நம்மிடமும் உள்ளது என்பதையும் நாம் புரிந்து காரியமாற்றத் தவறிவிடுகின்றோம்.
பொதுவாக இவ்வாறான அலுவலக இடமாற்றத்தின் மையம் இரண்டு காரணங்களினால் நடைபெறுகின்றது.01) அம்பாறை மாவட்டத்தின் தலைமைமையான நகரம் அல்லது இடம் அம்பாறை என்ற அடிப்படையிலும் 02)மாவட்டத்துக்கு ஒரு காரியாலயம் என்ற அடிப்படையில் அமைந்த எதுவானாலும் அது அம்பாறைப்பகுதியில் அமையவேண்டும் என்கின்ற எண்ண மேலீடான அரசியல் நிகழ்ச்சி நிரல் திட்டத்தினாலும் இது ஏற்படுகின்றது.

இவ்வாறு சிங்கள மக்களின் பிரதிநிதிகளும் அம்மக்களும் எண்ணுவதும் எதிர்பார்ப்பதும் முற்றிலும் தவறென்று கூறிவிட முடியாது.அம்மக்களுக்கும் முஸ்லிம் மக்களாகிய எமக்கும் மிகக் குறைவான சனத்தொகை வித்தியாசமே உள்ளன.
ஆகவே அவர்களிடம் இது எமது மாவட்டம்,எமது தலைநகரம் என்ற அடிப்படை இருப்பது இயல்பானது.ஆதலால் அனைத்து தலைமை அலுவலகங்களும் மாவட்டத்துக்கு ஒரு காரியாலயம் என்பனவும் அம்பாறை எனும் நகரை மையப்படுத்தி அமைய வேண்டும் என நினைப்பதும் தவிர்க்க முடியாத ஒரு கூறாகவே பார்க்கவேண்டியும் உள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் மொத்த சனத்தொகையின் படி தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைத்துப்பார்க்கும்போதுதான் இம்மாவட்டம் சிங்கள மொழித்தேவையுடைய மக்களைப் பார்க்கிலும் தமிழ் மொழி உபயோக்கிக்கும் தேவையுடைய மக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.

இதனால் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயங்கள் மற்றும் பிராந்தியங்கள் மட்டத்திற்கு ஒன்று என்ற மட்டுப்பாடுகளைக் கொண்ட அலுவலகங்கள் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பகுதிகளில் அமைய வேண்டுமென்ற எண்ணப்பாட்டினை கூர்மைப்படுத்துகின்றது.இதனடிப்படையில்தான் அலுவலக இடமாற்றங்களின் போது முஸ்லிம்கள் தமது எத்ரிப்பினை முதன்மைப்படுத்துவதன் அடிப்படையாகும்.

இப்படி அவர்கள் பக்கமும் நமது பக்கமும் நியாயங்கள் இருக்கின்றது  என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.இந்த எதார்த்த நிலைக்கேற்ப நமது தீர்வுகளைக் காண வேண்டிய கட்டாயத்தையும் நம் மீது சுமத்துகின்றது.இதனைப் புறக்கணிப்பது ஆரோக்கியமான விளைவுகளைத் தராது.
தமிழ் மொழியை பெரும்பான்மையாக பேசும் மக்களாக கொண்டமைந்துள்ள கல்முனை,சம்மாந்துறை,பொத்துவில் ஆகிய தொகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மாவட்டத்தின் உருவாக்கம்தான் இவ்வாறான பிணக்குகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து ஒரு இணக்கமான முடிவுகளை தரக்கூடியதாக அமைய முடியும்.

இது தொடர்பில் நமது அரசியல் பிரதிநிதிகள் தமது முழு பலத்தையும் பிரயோகித்தும்,அரசியல் அதிகாரத்தை உபயோகித்தும் புதிய மாவட்ட உருவாக்கத்துக்கான முன்னகர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.மாவட்ட உருவாக்கத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு நாடாளுமன்ற பலம் இப்போது தேசிய அரசாங்கத்தின் பக்கம் இருக்கின்றது.நமது கட்சியும் இதிலொரு பங்காளர்களாகவும் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இன்றைய தேசிய அரசினால் இம்மாவட்ட உருவாக்கம் மேற்கொள்ளப்பட முடியாமல் போனால் புதிய மாவட்டம் ஒன்றின் உருவாக்கம் சாத்தியமற்றுப்போய்விடும்.ஏனெனில் எல்லாக்காலத்திலும் இவ்வாறான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பல கொண்ட அரசாங்கம் ஒன்று அமையுமா என்பது ஒரு விடயம்.
அவ்வாறு அமைந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் இன்னுமொரு புதிய மாவட்டத்தை உருவாக்கும் நியாயத்தைப் புரிந்த தலைவர்களைக் கொண்ட ஆட்சி அதிகாரம் வருமா என்பது இன்னொரு விடயம்.இவற்றில் ஒரு கட்சியின் தனிப்பெரும்பான்மையாக மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பலம் அமைந்துவிடும்போது பாரிய பேரினவாத சிந்தனையில் ஆதிக்கம் மேலோங்குவதற்கே அதிக சந்தர்ப்பமுள்ளது.

இப்போதிருக்கும் தேசிய அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதன் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் தலைமைத்துவங்கள் ஓரளவு நமது நாட்டு இனப்பிரச்சனைகளையும் பொதுவான சமூகங்களுக்கிடையே காணப்படும் பிணக்குகளையும் தீர்க்க வேண்டும் என்கின்ற மனநிலையை கொண்டவர்களாக தோற்றம் காட்டப்படுவதும் மற்றும் அரசின் பங்களார்களாக இருப்புக் கொண்டவர்களை இவர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழழ் ஒன்று காணப்படுவதும் நமக்கு சாதகமான நிலையாகும்.

இவ்வாறான தருணங்களை கோட்டைவிட்டுவிடாது மிகவும் கடினமாக பற்றிக்கொண்டு சாட்டுக் கூறாது காரியமாற்றும் பக்கம் நமது பிரதிநிதிகளும் தலைமைத்துவங்களும் கவனம் செலுத்த வேண்டும்.அப்போதுதான் இதில் நாம் வெற்றியை நோக்கிய பொறிமுறைகளை சரியாக திட்டமிட முடியும்.
கிடைத்திருக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தாது விட்டுவிட்டு பின்னர் அதனை நினைத்து வருந்துவதனாலும் இப்போது கேட்டால் நமது பதவி நிலைகளுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று அஞ்சுவதனாலும் நமக்குள் தயக்கம் பெருக்கெடுத்துவிடுமானால் நாம் அரசியலரங்கில் இருப்பவர்களுக்கு தகுதியானவர்கள் அல்ல என்ற சுயவிசாரணை நமது பிரதிநிதிகளுக்கு இன்று அவசியப்படுகின்றது.நமது தலைமைத்துவங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

நமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதுடன் நமது கடமை முடிந்துவிட்டதென்று நமது மக்கள் அமைதியடைந்துவிடுவது,நமது பிரதிநிதிகளின் அசமந்த போக்கை உரமூட்டி வளர்க்கும் என்பதை நமது மக்கள் உள்வாங்கிக் கொள்ளவும் உணரவும் தலைப்படவும் வேண்டும்.

நமது பொறுப்பில் பிரதானமாக நமது பிரதிநிதிகளை நமக்காக செயல்படுபவர்களாக மாற்றும் பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்பதை உறுதியாகப் புரிந்து அவர்களை கேள்வி கேட்டும்,தேவையான உந்துதல்களையும் அழுத்தங்களையும் பிரயோகிப்பதற்கு எப்போதும் தயாரான மக்களாகவும் நாம் மாறவேண்டியும் இருக்கின்றது.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பதற்கேற்ப நாம் அழும் பிள்ளைகளாக மாற வேண்டும்..அப்போதுதான் நமது பிரதிநிதிகளும் தலைமைத்துவங்களும் பால் புகட்டுபவர்களாக தம்மை அடையாளப்படுத்தி முன்னிறுத்துவார்கள்.இந்த யதார்த்தத்தையும் நாம் புரிந்து செயற்பட துணிய வேண்டும்.
இவ்வாறு அம்பாறை மாவட்டத்திலுள்ள அலுவலக இடமாற்ற சர்ச்சை கடந்த வாரத்துடனும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடனும் முடிவுக்கு வரும் சமாச்சாரம் அல்ல.அது வெவ்வேறு கோணங்களில் காலத்துக்கு காலம் அரங்கேற்றப்பட்டு நம்மை நலிவடையச் செய்யும் அபாயத்தை கொண்டுவரக்கூடியது.

ஆகவே இவ்வாறான பிணக்குகள் தோன்றாதிருப்பதற்கு ஒரே தீர்வு நமது இன்றைய அம்பாறை மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்டமையக் கூடியதும்,தமிழ் மொழி பேசும் மக்களினை அதிகம் கொண்டதுமான ஒரு புதிய மாவட்ட உருவாக்கம்தான் செவ்வையானதும் நீதியானதுமான வழிமுறையாகும்.

இது பற்றி நமது தலைமைத்துவங்களும் பிரதிநிதிகளும் நன்கு சிந்தித்து இதனை அடைந்துகொள்வதற்கு மும்முரமான முயற்சிகளில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை.இறங்குவார்களா? சிறப்பு சித்தியை இதில் அடைவார்களா என்பதை காலம்தான் நமக்கு பதில் சொல்ல வேண்டும் என்றாலும் காலம் நமக்காக காத்திருப்பதும் இல்லை.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.