விமர்சனம் பாகம் 03.
(அவதானி..)
(தொடர் கட்டுரையின் மூன்றாம் பாகமிது. இதிலுள்ள கருத்துக்கள் ஆக்கியோரைச் சாருமே தவிர அவதானியைச் சார்ந்தல்ல. இது தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் எவரும் எழுதலாம். பொருத்தமாக இருப்பின் பிரசுரிக்கப்படும்
-ஆசிரியர்
கடந்த பாகத்தில் இவ்விழாவில் தேசிய பத்திரிகை உதவி ஆசிரியர் ஒருவரின் 'கருத்து' தொடர்பாக விரிவாக எழதியிருந்தேன். இத்தொடரில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பேசிய ஒரு சில விடயங்கள் தொடர்பாக சற்று விரிவாக பார்க்கலாம்.
அதற்கு முன்பாக சகோ. பொறியிலாளர் அப்துல் றகுமான் அவர்கள் பேசும்போது 'ஊடக நடுநிலை என்பது பலராலும் தவறாக புரியப்பட்டுள்ளதாக' கூறினார். 'நீதிபதியின் நடுநிலை என்பது நியாயத்தின் பக்கம் தீர்ப்பு சொல்லுவதே அன்றி வாதிக்கும் பிரதி வாதிக்கும் தண்டனையை பகிர்ந்தளிப்பதல்ல. அதே போன்றுதான் 'ஊடகத்தின் நடுநிலை' என்பதும் நீதியின் பக்கம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்' என்று தனது பேச்சின் சாராம்சமாக தெரிவித்திருந்தார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனதுரையின்போது 'சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களாகிய நாங்கள் மிகவும் நிதானத்துடன் நமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அடிப்படையில் தூர நோக்கு சிந்தனையுடன் தான் சொல்லும் ஒரு சில விடயங்களை கடந்த காலங்களில் ஊடகங்கள் பூதாகரமாக ஆக்கியதாகவும் ஆதங்கப்பட்டு (மறைமுகமாக தம்புள்ளை பள்ளிவாயல் தாக்குதல் தொடர்பாக தான் சொன்ன எதிர்மறையான கருத்தினை நியாயப்படுத்தும் முகமாக) பேசினார்.
இந்த இடத்தில் சிறுபான்மை சமுதாயமான நாங்கள் மிக நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுரை சொல்லும் நீங்கள், உங்கள் அபிவிருத்திப் பணிகளில் அந்த நிதானத்தை காட்டாமல் விட்டது ஏன்?
இந்த இடத்தில் சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்களிடம் சில கேள்விகள்....
1. ஈச்சை மரங்களை நாட்டி அரபு நாடு போன்ற மாயையை ஏற்படுத்தி காத்தான்குடியை தனிமைப்படுத்தி பெரும்பான்மை சமுக ஊடகங்கள் இனவாத கருத்துக்களை (ஊடகவியலாளர் தௌபீக் அவர்களின் கருத்துப்படி) பரப்புவதற்கு ஏன் காரணமாக இருந்தீர்கள்?
2. அந்நிய மதத்தினருக்கு வாயினுள் நுழைவதற்கு கஸ்டமான அறபுப் பெயர்களை காத்தான்குடி உள் வீதிகளுக்கு பெயர் மாற்றியதோடு பெயர்ப் பலகைகளை அறபு மொழியிலும் எழுதி வித்தியாசப்படுத்தியது ஏன்? (குறிப்பு :- எங்கிருந்து வந்த அழுத்தமோ தெரியாது அறபு மொழியில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை அவசர அவசரமாக அகற்றி அறபு எழுத்துக்களற்ற புதிய பெயர்ப்பலகைகளை நகரசபை குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே மாற்றியிருந்தது)
3. குர்ஆன் சதுக்கம், பஸ்மலா சதுக்கம் என்று பெயர்களை மர்க்கத்துடன் தொடர்பு படுத்தியும் அந்தந்த வளைவுகளில் ஈரானிய எழுத்தணி கலை சார்ந்த அறபு எழத்தணிகளை ஏற்படுத்தியும் தனித்துவத்தைக் காட்டியது ஏன்?
4. வரவேற்பு நுழைவாயிலில் (Welcome Board) 'ஆயதுல் குர்சி' போன்ற இறை வசனங்களை வடிவமைத்து இனவாதிகளின் எரியும் நெருப்பில் எண்ணை தெளிக்கும் அபிவிருத்தியினை ஏன் செய்தீர்கள்?
இது இவ்வாறிருக்க சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கூறிய மற்றுமொரு விடயம்தான் அனைவருடைய புருவங்களையும் உயரச் செய்திருந்தது.
அதாவது 'டொக்டர் றிஸ்வி சரீப்' அவர்கள் ஒருமுறை காத்தான்குடி நூதனசாலையினை பார்வையிட வந்திருந்தபோது அங்கு சொல்லப்பட்டிருக்கும் சில விடயங்களை ஆய்வுக்குட்படுத்துவதற்கு தன்னிடம் அனுமதி கேட்டதாகவும் அதற்கு தான் பூரண அனுமதி அளித்தபிறகு இரண்டு சிங்கள ஆய்வாளர்களை (முஸ்லிம்களைப்பற்றி மிக மோசமாக சித்தரிக்க கூடிய) கூட்டிவந்து அதனை ஆய்வு செய்ததாகவும் ஆய்வின் இறுதியில் அவர்களால் ஒரு குறையினையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அத்தனையும் நுஒஉநடடநவெ (மிக சிறந்தது) என்று சொன்னதாகவும் ஒரு வரலாற்று நிகழ்iவான்றைக் கூறினார்.
உண்மையில் இந்த நிகழ்வு ஒரு சாதாரணமான நிகழ்வல்ல. இது இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகத்தினை நமது நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கும் ஒரு ஆவணமாக மாற்றப்பட வேண்டும்.
எனவே, கிழக்கிலங்கையின் பல்வேறு ஊடகவியலாளர்கள் குழுமியிருந்த ஒரு சபையில் சொல்லப்பட்ட இந்த விடயம் தொடர்பாக 'காத்தான்குடி மீடியா போரத்திற்கு' எனது அன்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் இது விடயமாக 'டொக்டர் றிஸ்வி சரீப்' மற்றும் 'சகோ. ஹிஸ்புல்லாஹ்' ஆகியோருடன் இணைந்து அந்த இரண்டு சிங்கள ஆய்வாளர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் ஆய்வு சம்பந்தமான ஆவணங்களைத்திரட்டி ஒரு ஊடக கள ஆய்வினை மேற்கொண்டு உறுதிப்படுத்தி ஊடகங்களின் வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்.
அப்படி கொண்டு வரும்போது இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகத்தை பறைசாற்றுவதோடு சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மீது நூதனசாலை தொடர்பாக பலர் சொல்லும் குற்றச் சாட்டுக்களுக்கான பதிலாகவும் அது அமையலாம்.
இந்த கள ஆய்வினை 'காத்தான்குடி மீடியா போரம்' செய்யும் என எதிர்பார்த்து மக்கள் சார்பாக காத்துக் கொண்டிருக்கின்றேன்.
நன்றி
(முற்றும்)
