(NFGG ஊடகப் பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யினால் கடந்த இரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வுகள் 09.01.16 நேற்றுடன் இனிதே நிறைவடைந்தன. இந்நிகழ்ச்சித்திட்டத்திற்காக பல்வேறு வகைகளிலும் பாடுபட்ட செயற்பாட்டாளர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு ஒன்று NFGGயின் காத்தான்குடி காரியாலய வளாகத்தில் நேற்றைய தினம் பி.ப. 7மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தில் விண்ணப்பங்களை விநியோகித்தல்,தரவுகளைப்பதிவு செய்தல், விநியோக நிகழ்வுகளுக்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்கல், கொப்பிகளை பொதி செய்தல், பயனாளிகளுக்கான தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளல் என பல வழிகளிலும் தோளோடு தோள் நின்று உழைத்த பெருமளவிலான சகோதர சகோதரிகள், இளைஞர் யுவதிகள் நேற்றைய நிகழ்வில் நினைவுப்படிகம் வழங்கி கௌரவிக்கப்ட்டனர்.
NFGGயின் கிழக்குப்பிராந்திய ஆலோசனை சபை செயலாளர் MACM. ஜவாஹிர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர்ரஹ்மான் அதன் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் நளீமி, தேசிய தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் MM.பழுலுல் ஹக் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்ற செயற்பாட்டாளர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் நிகழ்வின் இறுதியில் பெறப்பட்டு கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் காத்தான்குடி, பாலமுனை, பூனொச்சிமுனை, காங்கயனோடை மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களை சேர்ந்த பல செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் NFGGயின் மகளிர் அணி உறுப்பினர்கள் கௌரவங்களை பெற்றுக்கொண்ட இளைஞர் யுவதிகளின் பெற்றோர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வு இராப்போசன விருந்துடன் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.













