நிந்தவூரில் அமைச்சர் ரவூப் ஹக்கீமை வழி மறித்து மக்கள் ஆர்ப்பட்டம்

Written By avathani Media Network on Monday, January 9, 2017

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அம்பாறை, நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வழி மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த வழி மறுப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அட்டப்பள்ளம் உள்ளூர் பிரதான வீதியினால் பயணித்துக் கொண்டிருந்தபோது தமது குழந்தைகளுடன்  பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வீதியின் நடுவே குழுமியிருந்து, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அமைச்சர் சென்று கொண்டிருந்த வாகன அணித்தொடர் பயணத்தை தொடர முடியாத நிலையில், அவர் வாகனத்தில் இருந்து இறங்கி, பொது மக்களுடன் உரையாடினார். இதன்போது அமைச்சரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதுடன் குறித்த அனல் மின் நிலையத்தினால் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக விபரித்துக் கூறப்பட்டது.

இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறுகின்ற புகை மற்றும் நச்சு வாயுக்களினால் சுவாச நோய், தோல் நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு தாம் முகம் கொடுப்பதாகவும் கருவில் தரிக்கின்ற குழந்தை கூட கரைந்து செல்கின்ற துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருப்பதாகவும் சில பெண்கள் அழுது, புலம்பி அமைச்சரிடம் முறையிட்டனர்.

இவற்றை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், இது குறித்து சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.







Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.