( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்,
நிந்தவூர் தினகரன் விசேட நிருபர் )
கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுவதால், இப்பிரதேசங்களில் டெங்கு நுளம்புகளை அழிக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் நேற்று(10) நிந்தவூர் பிரதேச சபையினரால் முன்னேடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், கோட்டக் கல்வி அதிகாரி காரியாலயம் போன்றவற்றில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும், பொதுத் தொண்டு நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நிந்தவூர் பிரதேச சபைச் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீனும் பங்கேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிந்தவூப் பிரதேசம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 500 தொண்டர்களாலும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாலும் சுற்றி வளைக்கப்பட்டு, டெங்கு நுளம்புகளை உருவாக்கக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டன. வீட்டுரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
பிரதேசம் முழுவதும் புகை விசுறுதலுடன், பாழடைந்த பாவனையில்லாத கிணறுகளுக்கு டெங்;குக் குடம்பிகளை அழிக்கக் கூடிய மீன் குஞ்சுகளும் போடப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் ' தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான உயிர்கொல்லி நோய் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும். மக்களின் ஒத்துழைப்புக்கள் இல்லாத எந்தத் திட்டமும் ஒரு போதும் வெற்றியடைந்ததில்லை. எனவே, இவ்வாறான திட்டங்களுக்கு பொது மக்கள் பங்களிப்புச் செய்வது அவசியமாகும்' எனத் தெரிவித்தார்.




