(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)
முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு முதலில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குவதாகவும் பின்னர் நடைபெற இருக்கும் பேராளர் மாநாட்டின் போது அவரிடமிருந்து கடந்த பேராளர் மாநாட்டின் போது பறிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை மீள கையளிப்பது என்கின்ற தலைவரின் வாக்குறுதியின் அடிப்படையில் தேர்தல்; ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் முன்னிலையில் வாய்மொழி மூலமான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்ததனை அடுத்து எதிர்வரும் பேராளர் மாநாடு கூடும் வரை ஏற்கெனவே தேர்தல் செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மன்சூர் ஏ காதர் அப்பதவியில் இருப்பதாகவும் சமரசம் காணப்பட்டதென்பது நாமறிந்ததே.
கடந்த 02.01.2017 இல் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தின் போது தலைவர் ரவூப் ஹக்கீம், “கடந்த பொதுத் தேர்தலின் போது தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்குவதாக நான் வாக்குறுதியளித்திருந்தேன்.அதன் பிரகாரம் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.இங்கு அவர் எப்போது இந்த எம்.பி பதவியை வழங்குவதென்பதை குறிப்பிட்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.ஆனால் இக்கூட்டத்தில் எதிர்வரும் பேராளர் மாநாட்டை அடுத்து பழைய அதிகாரங்களைக் கொண்ட செயலாளராக ஹஸனலியை நியமிப்பதென்றோ அல்லது வேறு விதமாகவோ தலைவர் தெரிவிக்கவில்லை.
இவைகள் ஒருபுறமிருக்க முஸ்லிம் காங்கிரஸின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர்பீட உறுப்பினரொருவர் ”ஹஸனலிக்கு தேசியப் பட்டியல் எம்.பி பதவி வழங்குவதாக இக்கூட்டத்தில் எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.” என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.இவ்வாறான கூற்றுக்களினூடாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலி ஏமாற்றப்பட்டுவிடுவாரா என்கின்ற ஒரு சந்தேகத்தை நமது முஸ்லிம் அரசியல் களம் இன்று எழுப்பிநிற்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலி தலைவரின் வாக்குறுதியை முழுமையாக நம்பிய நிலையில்தான் தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்வைத்திருந்த தனது முறைப்பாட்டை புரிந்துணர்வின் அடிப்படையில் வாபஸ் பெறுவதாக வாய்மொழி மூலம் ஆணைக்குழுவின் முன் குறிப்பிட்டிருந்தார்.தலைவரும், நாங்கள் ஒரு இணக்கத்துக்கு வருவோம் என்ற அடிப்படையில் தற்போது செயலாளராக அறிவிக்கப்பட்ட மன்சூர் ஏ காதர் எமது அடுத்த பேராளர் மாநாடு கூடும் வரை அவர் இருக்க வேண்டும். ஏனெனில் எமது பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மாணம் இன்னொரு பேராளர் மாநாட்டின் மூலமே மாற்றத்துக்குள்ளாக்கலாம் என்கின்ற தமது கட்சியின் யாப்பு நிலையை முன்னிறுத்தியிருந்தார்.ஆகவே இங்கு இணக்கம் என்பது ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் ஏற்பட்டதென்பதை இது உணர்த்திநிற்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தமது உயர்பீட கூட்டங்களில் எந்த விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டாலும் அல்லது விவாதிக்கப்பட்டாலும் அதன் இறுதி தீர்மானத்தை தலைவர் எடுப்பதே வழமையாகும்.அந்த அடிப்படையில் கடந்த 14.12.2016இல் கூட்டப்பட்ட உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலியோடு ஏற்பட்டிருந்த பிணக்கு தொடர்பில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று அவருடனான தீர்மானத்துக்கு வருவதற்கு தலைவருக்கு அதிகாரமளிக்கப்பட்ட அடிப்படையில்தான் 15.12.2016இல் இருவரும் சில கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு அதனடிப்படையில் 16.12.2016இல் தேர்தல் ஆணைக்குழு முன் சென்று நாம் மேற்சுட்டிக்காட்டிய இணக்கத்திற்கு வந்திருந்தனர்.அப்படியென்றால் 02.01.2017இல் தலைவர் ஹஸனலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்குவது என்று கூறியது உயர்பீடத்தின் அனுமதியோடு சொன்னதாகவே அர்த்தப்படும்.இதற்கு வேறு வியாக்கியானங்கள் செய்யக்கூடாது என்பதற்கு மு.காவின் முன்னைய பல உயர்பீடக் கூட்ட முடிவுகள் இவ்வாறு முடிந்திருப்பதை தக்க சான்றாகக் கொள்ளலாம்.
கடந்த 18.12.2016 வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது கட்சியின் தலைமைத்துவ அதிகாரம் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கின்ற போது எங்களது கட்சியின் யாப்பின் பிரகாரம் மஷூறா அடிப்படையிலேயே தீர்வுகள் காணப்படும்.அது கலந்துரையாடலின் பின்னர் தலைவர் எடுக்கின்ற முடிவே இறுதியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இவைகள் யாவும் தலைவர் அறிவிப்பதென்பது உயர்பீடத்தின் கூட்டுமொத்தமான தீர்மானம் என்பதை வலிமைப்படுத்தும்.அந்தவகையில் கடந்த 02.01.2016 உயர்பீடக்கூட்டத்தின் போது தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது உயர்பீட தீர்மானத்துக்கு புறம்பானதாகவோ மாற்றமானதாகவோ இருப்பதாக யாரும் கருத்துக் கூறுவது யதார்த்த நிலைக்கு மாறானதாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் அது எப்போதென்று தெளிவாக அவர் தெரிவிக்கவில்லை.ஆயினும் தலைவருக்கும் செயலாளர் நாயகத்துக்குமிடையில் இணக்கம் காணப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்த தினமான 16.12.2016 ஆம் திகதியிடப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பியான எம்.எச்.எம் சல்மானின் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமாச் செய்யும் கடிதத்தின் பிரதியொன்று செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு கையளிக்கப்பட்டிருப்பதாக அவர் தரப்பிலிருந்து கூறப்பட்டதை தலைவரும் இதுவரை எந்த இடத்திலும் பகிரங்கமாக மறுத்துரைக்கவில்லை.இதன் காரணமாக கடந்த 09.01.2017இல் இந்த வருடத்துக்கான பாராளுமன்ற முதல் அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.அன்றைய தினம் செயலாளர் நாயகம் ஹஸனலி தேசியப்பட்டியல் எம்பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வாரென்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தினால் பின்வரும் அனுமானங்களுக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு எதிர்வரும், 10.02.2017இல் நடைபெற இருப்பதாக தீர்மானிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மாநாட்டில் பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரமான தேர்தல் செயலகத்தோடு தொடர்புபடுகின்ற அதிகாரமும் பாராளுமன்ற செயலாளரோடு தொடர்புபடுகின்ற அதிகாரமும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடச் செயலாளருக்கு வழங்கப்பட்டிருப்பது இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் பொதுச் செயலாளர் நாயகம் என்ற பதவியுடையோருக்கே இருக்கும் என்று மாற்றம் செய்யப்பட இருப்பது உறுதியாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் மேற்படி அதிகாரத்துடன் கூடிய பொதுச் செயலாளராக வருபவர் நேரடி அரசியலில் அதாவது தேசியப்பட்டியல் ரீதியாகவோ, தேர்தல் மூலமாகவோ போட்டியிடுகின்ற பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை மிக வலிமைப்படுத்துகின்ற ஒரு தீர்மானத்தை எதிர்வரும் பேராளர் மாநாட்டில் தலைவர் அமுல்படுத்த விருப்புக் கொண்டிருப்பதாக பரவலாக நம்பப்படுகின்ற ஒரு கதையாடலாக இருந்துவருகின்றது.இதனால்தான் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குவதாக தலைவர் கூறினாலும் அங்கு ஒரு காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார் என்பதை எம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.
ஏன் இவ்வாறு நாம் அனுமானிக்கின்றோமென்றால் முன்னைய அதிகாரங்களுடன் கூடிய பொதுச் செயலாளர் நாயகப் பதவியில் ஹஸனலி நியமிக்கப்படுவாரேயானால் அவருக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டிய கடப்பாட்டிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இலகுவாக விலகிக் கொள்ள முடியும். அல்லது இந்த அதிகாரங்களுடன் கூடிய செயலாளர் பதவி எனக்குத் தேவையில்லை.தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையே எனக்கு வேண்டும் என்கின்ற ஒரு நிலைப்பாட்டுக்கு பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலி வரவேண்டிய நிர்ப்பந்தத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தும்.இதனால் ஏதோ ஒரு பதவிதான் எதிர்காலத்தில் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு முஸ்லிம் காங்கிரஸினால் வழங்கப்படும்.
ஏற்கனவே சமரசப்படுகின்ற போது கூறப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற தேசியப்பட்டியல் எம்.பி பதவி மற்றும் பழைய அதிகாரங்களுடன் கூடிய செயலாளர் பதவி ஆகிய இரண்டு பதவி நிலைகளும் இணைந்ததாக செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு வழங்கப்படப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதியாகின்றது.அவ்வாறு அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்துக் கொண்டால், தற்போது இருக்கின்ற பெயரளவு கௌரவ செயலாளர் நாயகமாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டியிருக்கும்.
இதற்கு அப்பால் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலி அதிகாரங்களோடு கூடிய செயலாளர் நாயகப் பதவியைத் தவிர்த்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைப் பதவியை எடுப்பாரேயானால் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு வழங்குவதாக பேசப்படுகின்ற தேசியப்பட்டியல் உறுப்புரிமையை வழங்கமுடியாத ஒரு இக்கட்டான நிலைமையை ஹஸனலி ஏற்படுத்தினார் என்கின்ற பழியை அவர் மீது இலகுவாக சுமத்தி தலைவர் தப்பித்துக் கொள்வதற்கு இதனை ஓர் ஏதுவாக பாவிக்கவும் முடியும்.
நமது மக்களும், தலைவர் தேர்தல் காலத்தில் தலைவர் ஹஸனலிக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை தருவதாக வாக்களித்திருந்தார் என்பதை அவர் ஒப்புக்கொண்டிருந்தாலும் கூட இந்த இடத்தில் கட்சியின் நலன் கருதி பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலி விட்டுக்கொடுத்திருக்க வேண்டும் என்ற நியாயத்தையே முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் கூறத்தொடங்குவர்..இதன் மூலம் அட்டாளைச்சேனைக்கும் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கும் மத்தியில் இருந்து வந்த சினேகபூர்வ உறவுகள் சிதைக்கப்படவும் வாய்ப்புண்டு.
இன்றைய அரசியலமைப்பின் அடிப்படையில் தேர்தல் காலத்தில் மாவட்ட வேட்புமனு பட்டியலிலோ அல்லது தேசியப்பட்டியலிலோ போட்டியிட்டிராத எவரும் தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட முடியாது என்கின்ற திட்டவட்டமான அறிவிப்பை கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அன்றைய தேர்தல் ஆணையாளராக இருந்தவரும் இன்றைய ஆனைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இந்த கூற்று சரியாயின் எக்காரணம் கொண்டு இந்தப் பாராளுமன்ற காலத்தினுள் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த எவருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட முடியாது.ஏனெனில் கடந்த பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மேற்குறித்த இரண்டுவகை வேட்புமனுவிலும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எவரும் குறிப்பிடப்படவில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு சிலவேளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மாகாண சபையில் ஏற்பட்ட வெற்றிடமான மாகாண அமைச்சு அதிகாரத்தை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம் நசீருக்கு வழங்கியிருக்கக் கூடும்.இவருக்கு முந்திய சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்தும் இப்பதவி இவரை வந்தடைவதற்கு இது காரணம் என யூகிப்பது தவறுமல்ல.
மாகாண அமைச்சு என்பது அந்தஸ்த்து அதிகார அடிப்படையில் இது ஒரு பாராளுமன்ற உறுப்புரிமைக்குச் சமமானது. அந்த அடிப்படையில்தான் அட்டாளைச்சேனைக்கு எம்.பிப் பதவிக்கு நிகரான ஒரு அரசியல் அதிகாரத்தை வழங்கி அதனைச் சரிக்கட்டியிருக்கின்றார் தலைவர்.இதனை ஒரு சந்தர்ப்பம் வரும்போது தலைவர் வெளிப்படுத்துவார். அப்போதுதான் அட்டாளைச்சேனைக்கு அநீதி இழைக்கவில்லை என்பதை இலகுவாக வெளிப்பட்டுவிடும்.இதனை இப்போது சொன்னால் அது ஹஸனலிக்கு சாதகமாகிவிடும் என்பதற்காக அடக்கிவாசிக்கிறார்.
இதிலிருந்து அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவியை வழங்குவதனால்தான் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போகின்றது என்கின்ற கருத்து பிழையான எடுகோள்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகும்.
இதனை இன்னொரு வகையில்கூட நாம் உறுதியாக விளங்கிக்கொள்ள முடியும்.கடந்த 02.01.2017இல் நடைபெற்ற மு.காவின் உயர்பீடக் கூட்டத்தின் போது அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தருவதாக இருந்தால் எப்போது தருவது அல்லது தருவதில்லை என்றாலும் அதனையாவது இங்கு தெரிவியுங்கள் என்று தலைவரை நோக்கி அட்டாளைச்சேனை உயர்பீட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தும் அதற்கு தலைவர் எந்தவிதமான பதில்களையும் கூறாது மௌனம் சாதித்திருக்கின்றார்.ஆயின் எந்தத் தருணத்தில் நாம் மேற்சுட்டிக்காட்டிய வெளிப்படுத்தலை பகிரங்கப்படுத்தவேண்டுமென்று அவர் கருதுகிறாரோ அந்தச் சந்தர்ப்பம் வரை தலைவரின் மௌனம் கலையப்போவதில்லை.
இவை எவற்றினை வைத்துப் பார்த்தாலும் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலி ஒரு பொறிக்குள் அகப்பட்டிருப்பது மட்டும் பிரத்தியட்சமானது.இப்போதைக்கு அதிகாரங்களோடு கூடிய செயலாளர் பதவியை இழந்து தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டால் பலத்த விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியேற்படும்.அதனுடைய பாதிப்பாக அவர் பதவி வகிக்கும் காலத்துக்குள்ளே குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அவரொரு அட்டாளைச்சேனையின் துரோகியாகவும் கட்சியின் நலனை உடைக்க முயற்சி செய்தவராகவும் பார்க்கும் சூழலை பெருகச் செய்யும்.இந்நிலை ஏற்படுவது உண்மையில் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலி தேசியப்பட்டியல் பதவியை எடுப்பதினால் என்பதை விட, நமது அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் இருக்கின்ற சிந்திக்கின்ற பாங்கில் இருக்கின்ற இடறல்களாகும்.
இந்நிலைக்கு இம்மக்கள் வருவதற்கு அடிப்படைக் காரணமாக அமைவது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிழை விடுவதற்கு அப்பாலானவர் என்ற நம்பிக்கையே ஆகும்.இந்நம்பிக்கையில் அவரை நாம் வைத்து நோக்க முடியுமா என்பதற்கும் அப்பால் மனிதன் தவறு விடக்கூடியவன் என்ற கோட்பாட்டிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை நாம் நோக்குவதன் மூலம் தெளிவடைய முடியும்.
எது எவ்வாறிருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு தலைவர் ரவூப் ஹக்கீம் அளித்த வாக்குறுதியின்படி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை எதிர்வரும் பேராளர் மாநாட்டை அடுத்துவரும் பாராளுமன்ற அமர்வில் கைகூடும் என்று நம்பலாம்.ஆயினும் அவரிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் கையளித்து அவரை ஒரு பொதுச் செயலாளராக தொடர்ந்தும் இருப்பதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது.மாறாக அதிகாரத்தோடு கூடிய செயலாளர் பதவிதான் வேண்டுமென்றால் சில வேளை பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விடுபட வேண்டிய நிலையைத் தோற்றுவிக்கும்.
எனது நோக்கில் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸனலி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெறுவதோடு கௌரவ செயலாளர் நாயகமாக தொடர்ந்தும் நீடிக்கும் சாத்தியமே தென்படுகின்றது. ஏனெனில் செயலாளர் நாயகப் பதவியில் முன்பு காணப்பட்ட அதிகாரங்கள் இன்று ஆறு பிரிவுகளாக வகுக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு செயலாலர் பதவி வகிப்பவர்களை தலைவர் விரும்புகின்ற போது இடைநிறுத்தம் செய்கின்ற அதிகாரமும் தலைவரிடமே உள்ளது.இவையெல்லாம் ஒரேயடியாக ஒழிக்கப்படுவதில் சாத்தியப்பாடு குறைவாக இருப்பது மறுப்பதற்கில்லை.இன்ஷா அல்லாஹ் காலம் பதில் சொல்லும்.
M.M.M.NoorulHagu 129B,Osman Road,Sainthamaruthu – 05 0772612094

