கடந்த 29.11.2016ம் திகதி ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு பொது பல சேனா அமைப்பு அனுப்பிய கடிதத்தில் புனித குர்ஆன் மற்றும் நபி மொழிகள் பற்றி விளக்கம் கோரி முன்வைக்கப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகளுக்கான அறிவுப்பூர்வமான பதில்கள் அடங்கிய தொகுப்பு.
நுழைவாயில்..
இலங்கையில் மீண்டும் ஏற்பட்டுள்ள இனவாத சூழலில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பாரிய விமர்சனங்களை இனவாதம் பேசும் அமைப்புகள் முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் இஸ்லாத்தின் புனித வேத நூலான திருமறைக் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நபி மொழிகள் பற்றிய விமர்சனங்களையும் பொது பல சேனா உள்ளிட்ட இனவாத அமைப்புகள் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக பொது பல சேனா அமைப்பு சார்பில் கடந்த 29.11.2016 அன்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு, புனித குர்ஆனின் சில வசனங்களுக்கும், நபி மொழிகள் சிலவற்றுக்கும் விளக்கமளிக்குமாறு கோரி ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ள திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி மொழிகளை பொறுத்த வரையில் உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் சார்ந்த கேள்விகளே தவிர பதிலளிக்க முடியாத கேள்விகள் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
புனித இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் இஸ்லாம் என்பது தெளிவான, வெளிப்படையான மார்க்கமாகும். இந்த மார்க்கத்தை பற்றி எவர் எந்தக் கேள்வியை, எந்த விதத்தில் கேட்டாலும் அதற்குறிய அறிவுப்பூர்வமான பதில்களை புனித குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் ஒளியில் தெளிவாக வழங்குவதற்கு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தயாராகவே இருக்கிறது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 08.11.2015 அன்று கொழும்பு, சுகததாச உள்ளரங்கத்தில் வெளியிடப்பட்ட புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பில், குறித்த கடிதத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களுக்கான விளக்கங்கள் தெளிவாகவே வழங்கப்பட்டுள்ளன.
தென்னிந்திய மார்க்க அறிஞர் சகோதர் பி.ஜெய்னுலாப்தீன் (PJ) அவர்கள் மொழி பெயர்த்த திருமறைக் குர்ஆன் மொழியாக்கத்தில் இஸ்லாம் மற்றிய கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் அடங்கிய சுமார் 509 விளக்கக் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து வரும் மார்கக் அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான தெளிவான பதில்களை “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற நிகழ்ச்சியினூடாக வழங்கி வருகிறார். தமிழகத்தில் மாற்று மத மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி மிக பிரபலமானதாகும்.
இன்று இனவாதிகள் கேட்க்கும் கேள்விகள் அனைத்துமே ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் தான்.
அந்த வகையில் திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் குறித்த சந்தேகங்களுக்குறிய பதில்களை மிகத் தெளிவாக அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தொகுத்துள்ளார்கள்.
அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் மொழி பெயர்த்த புனித திருக்குர்ஆனின் சிங்கள மொழியாக்கத்தை கடந்த 08.11.2015ல் இலங்கையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்டுள்ள புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்பே இனவாதிகளின் கேள்விகளுக்கான பூரண பதிலாக இருக்கிறது. இதே நேரம் குறித்த குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு நடைபெற இருந்த நேரம் அதற்கு எதிராக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினரே எதிர்த்து அறிக்கை விட்டமையும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
பொது பல சேனாவினால் விளக்கம் கோரி முன்வைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் வசனங்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட திருமறைக் குர்ஆனில் கொடுக்கப்பட்டுள் விளக்கங்களை தனித் தனியான ஒரு தொகுப்பாக இங்கு வெளியிடுகிறோம்.
இந்தத் தொகுப்புக்கு தேவையான மேலதிக சில விளக்கங்கள் அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் நூல்களில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன.
பொது பல சேனா சார்பில் விளக்கம் கோரப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள்.
03:28, 48:29, 03:85, 08:39, 09:05, 02:190, 09:123, 48:19, 48:20, 09:14, 03:28
பொது பல சேனாவினால் விளக்கம் கோரப்பட்டுள்ள மேற்குறித்த வசனங்கள் அனைத்தும் போர்கள் தொடர்பாகவும் பிற மதத்தவர்களுடனான தொடர்புகள் பற்றியும் பேசும் வசனங்களாகும்.
தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட புனித திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தில் குறித்த வசனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தெளிவாக விளக்கங்களை இப்போது பார்ப்போம்.
ஜிஹாத் – புனிதப் போர், மாற்று மத நண்பர்களுடனான தொடர்பு, இஸ்லாமிய ஆட்சி போன்ற கேள்விகளுக்கான பதில்கள்
இஸ்லாத்தின் சட்ட திட்டங்களில் ஜிஹாத் – புனிதப் போர் மற்றும் சிறைப்பிடித்தல், மாற்று மத நண்பர்களுடனான தொடர்புகள், இஸ்லாமிய ஆட்சி போன்றவற்றுடன் தொடர்பு பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இந்தப் பகுதியில் இடம் பெறுகின்றன.
முதலில் பொது பல சோன சார்பில் மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக விளக்கம் கோரியுள்ள குர்ஆன் வசனங்களை பார்ப்போம்.
நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.
அல்குர்ஆன் 03:28
கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.
அல்குர்ஆன் 08:39
எனவே புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரை, கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 09:05
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 02:190
நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் (இறை)மறுப்போருடன் போரிடுங்கள்! உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும். (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 09:123
போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற ஏராளமானவற்றையும் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 48:19
"போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற ஏராளமான பொருட்களை எடுப்பீர்கள்'' என அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்தான். அதை உங்களுக்கு விரைவாகவே நிறைவேற்றினான். நம்பிக்கை கொண்டோருக்கு சான்றாக ஆகவும், உங்களுக்கு நேரான வழியைக் காட்டவும் மனிதர்களின் கைகளை உங்களை விட்டும் தடுத்தான்.
அல்குர்ஆன் 48:20
அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான்.53அவர்களை இழிவுபடுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான். நம்பிக்கை கொண்ட சமுதாயத்தின் உள்ளங்களுக்கு அவன் ஆறுதல் அளிப்பான்.
அல்குர்ஆன் 09:14
இவைகள் தான் பொது பல சேனாவினால் ஆரம்பமாக விளக்கம் கோரப்பட்டுள்ள வசனங்களாகும். இப்போது அதற்குறிய பதில்களை தனித் தனித் தலைப்புகளாக பார்ப்போம்.
யார் மீது போர் கடமை?
இஸ்லாத்திற்கு எதிராகச் செய்யப்படும் விமர்சனங்களில் தீவிரவாதம் குறித்த விமர்சனம் முக்கிய இடத்தை வகிக்கிறது. எதிரிகளுடன் போர் செய்யுங்கள் என்று கட்டளையிடும் வசனங்களை எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களைக் கொன்று குவிக்க இஸ்லாம் கட்டளை இடுகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் சில முஸ்லிம்கள் கூட போர் குறித்து அருளப்பட்ட வசனங்களை தங்கள் செயலுக்கு ஆதாரமாகக் காட்டி இந்த விமர்சனத்துக்கு வலுவூட்டுகிறார்கள்.
போர் குறித்து சரியான விளக்கம் இல்லாததே இதற்குக் காரணமாகும்.
திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள், அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன.
அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.
திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போர் குறித்த வசனங்களும் இதுபோல் அரசின் மீது சுமத்தப்பட்ட கடமையே தவிர தனி நபர்கள் மீதும், குழுக்கள் மீதும் சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்கு திருக்குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.
4:75 வசனத்தில் "பலவீனர்களுக்காக நீங்கள் ஏன் போரிடக் கூடாது?'' என்று கூறப்படுகிறது.
பலவீனர்கள் என்பது மக்காவில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் சொல்லொணாத துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டு ஓடி உயிர் பிழைத்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன.
ஆயினும் அவர்களை அழைத்துப் போர் செய்யுமாறு திருக்குர்ஆன் கட்டளையிடவில்லை. அவர்களுக்காக நீங்கள் ஏன் போர் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்குத் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
பலவீனர்களும், பாதிக்கப்பட்டவர்களும் போர் நடவடிக்கையில் இறங்கலாம் என்றிருந்தால் அந்தப் பலவீனர்களுக்குத்தான் போரிடுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அரசாங்கத்தின் மீதுதான் போர் கடமையாகும். தனி நபர்கள் மீது அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
8:60 வசனத்தில் பலவிதமான போர்த் தளவாடங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
இஸ்லாமிய அரசு அமைந்து, போர் செய்ய வேண்டிய காரணங்கள் அனைத்தும் இருந்து, போர் செய்வதற்கான படைபலம் இல்லாவிட்டால் அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது.
போர் செய்யும் அவசியம் ஏற்பட்டு எதிரிகளின் படைபலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் செய்ய வேண்டும் என முதலில் சட்டம் இருந்ததாக 8:65 வசனம் சொல்கிறது.
பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படைபலத்தில் பாதி படைபலம் இருந்தால் மட்டுமே இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிச் செல்ல வேண்டும் என்று 8:66 வசனம் மூலம் அறிவிக்கப்பட்டது.
எதிரிகளின் படைபலத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூட போரிடக் கூடாது என்றால் நாட்டில் சிறுபான்மையாக வாழும் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்?
இதனால் மிகப் பெரிய இழப்புகள் சமுதாயத்துக்கு ஏற்படும் என்பதால் தான் இந்த மக்களுக்கு போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருக்க முடியாது. அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை திரட்டவில்லை. பொறுமையைத்தான் கடைப்பிடித்தனர். மதீனாவுக்குச் சென்று ஆட்சியும் அமைத்து போர் செய்வதற்கான காரணங்கள் ஏற்பட்டபோது தான் போர் செய்தனர்.
இதை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து நடந்து கொண்டால் மக்கள் இஸ்லாத்தை நோக்கித் தம் பார்வையைத் திருப்புவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா?”
இவ்வசனங்களில் (3:118, 3:128, 4:89, 4:139, 4:144, 5:51, 5:57, 5:80, 5:81, 9:16, 9:23, 58:14, 60:1, 60:8, 60:9, 60:13) முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
பிறமத மக்களுக்கு எதிரான வெறுப்பை இஸ்லாம் விதைப்பதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணலாம். இவ்வாறு எண்ணுவது தவறாகும்.
இது யாரைக் குறிக்கிறது? எதற்காக இவ்வசனம் அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பலதெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படைதிரட்டிக் கொண்டிருந்தார்கள்.
எப்படியாவது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்குத் தகவல்கள் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கீழ்க்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனித்தால் இத்தடை பொதுவானது அல்ல என்பதையும், முஸ்லிமல்லாத அனைத்து மக்களைப் பற்றியது அல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
இஸ்லாத்தைக் கேலிப் பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள் என்று 5:57 வசனம் சொல்கிறது. இஸ்லாத்தைக் கேலிப்பொருளாக ஆக்காமல் முஸ்லிம்களுடன் இணக்கமாக நட்பு பாராட்டுவோரை இது குறிக்காது.
உங்களுக்குப் பகைவர்களாக இருப்போரையும், கைகளாலும், நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள் என்று 60:2 வசனம் கூறுகிறது. முஸ்லிம்களின் பகைவர்களாக இல்லாமல், நாவுகளாலும், கைகளாலும் முஸ்லிம்களுக்குத் தீங்கு இழைக்காத மக்களுடன் நட்பு பாராட்டுவதை இது தடுக்காது.
உங்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்த உங்கள் பகைவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள் என்று 60:1 வசனம் கூறுகிறது. தமக்கு எதிராக இதுபோல் செயல்படுவோருடன் எந்த மதத்தினரும் நட்பு பாராட்ட மாட்டார்கள்.
உங்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், விரட்டியடித்தவர்களையும் மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! அவ்வாறு நடக்காத முஸ்லிமல்லாதவர்களுடன் நட்புப் பாராட்டுவதுடன் அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள் என்று 60:8,9 வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிமல்லாதவர்களில் நட்பு கொள்ளத்தக்கவர்களும் உள்ளனர். நட்புகொள்ளத் தகாதவர்களும் உள்ளனர் என்று இவ்வசனங்கள் வேறுபடுத்திக் காட்டுகின்றன.
வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டி, உள்ளுக்குள் உங்களை ஒழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள் என்று 3:118 வசனம் சொல்கிறது. தம்மை ஒழிக்கத் திட்டமிடுவோருடன் யார்தான் நட்பு பாராட்டுவார்கள்?
அன்றைய கிறித்தவ சமுதாயத்தினர் முஸ்லிம்களிடம் நெருக்கமான அன்பு கொண்டவர்கள் என்று 5:82 வசனம் சொல்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத மக்களில் கிறித்தவர்கள் முஸ்லிம்களுடன் இணக்கமாகவும், நெருக்கமாகவும் இருந்ததை இவ்வசனம் வரவேற்கிறது.
ஒரு சமுதாயம் உங்களுக்குச் செய்த தீமை காரணமாக அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள் என்று 5:2, 5:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிம்களுக்குத் தீமை செய்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான நீதியை மறுக்கக் கூடாது என்பதற்கு நிகரான மதநல்லிணக்கம் இருக்க முடியுமா?
உடன்படிக்கை செய்து முறையாக நடப்போரிடம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள் என்று 9:4 வசனம் கூறுகிறது. படை திரட்டி வந்த எதிரிகளாக இருந்தாலும் அவர்கள் முஸ்லிம்களுடன் சமாதான உடன்படிக்கை செய்திருந்தால் பழைய பகையை மறந்து அவர்களிடம் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுமாறு கட்டளையிடுவது மதவெறியாகுமா?
முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6 வசனம் கூறுகிறது. முஸ்லிமல்லாத ஒருவர் பிறரால் பாதிக்கப்பட்டு முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடினால் அவர் முஸ்லிமல்ல என்ற காரணத்துக்காக அடைக்கலம் அளிக்க மறுக்கக்கூடாது என்ற அளவுக்கு பிற மதத்தினரை இஸ்லாம் அரவணைக்கிறது.
பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு திருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இவ்வசனங்களையும் மேற்கண்ட வசனங்களுடன் சேர்த்துக் கவனித்தால் போர்ப் பிரகடனம் செய்யாத முஸ்லிமல்லாத மக்களுடன் நன்றாகப் பழகவே இஸ்லாம் கட்டளையிடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்ந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெரும் எதிரிகளாக இருந்த யூத சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளர்களில் ஒருவராக வைத்திருந்தார்கள். (பார்க்க : புகாரீ 1356)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் வாழ்ந்த யூதர்கள் பலவகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இடையூறு செய்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். எதிரி நாட்டவருக்குத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டவர்களும் அவர்களில் இருந்தனர். இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களாக நடித்து ஏமாற்றியவர்களும் இருந்தனர்.
இத்தகைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளராகச் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சமுதாயத்தினர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில் உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு அவர்களிடம் மனிதநேயம் மிகைத்திருந்தது. இதனால்தான் எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தமது ஊழியர்களில் ஒருவராக அவர்களால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர்.
(பார்க்க : புகாரீ 2096, 2252, 2509, 2513, 2068, 2200, 2251, 2386, 2916)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தார்கள். மேலும் அவர்களில் பலர் தமது நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரி நாட்டவர்களுக்குத் தகவல்கள் தந்து ஒத்துழைப்புச் செய்பவர்களாக இருந்தனர்.
நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் இரட்டை வேடம் போட்டு வந்த சமுதாயத்தவர்களை எந்த நாடும் மரியாதையுடன் நடத்துவதில்லை. ஆனால் யூதர்கள் பலவிதமான இடையூறுகள் அளித்த நிலையிலும் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் எந்த அளவு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டனர் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
நாட்டின் அதிபதி அடைமானம் வைக்கக் கூடியவராகவும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெற்றுக் கொள்பவராகவும் இருந்தனர் என்பதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விசாலமான உள்ளத்தை அறிந்து கொள்ள முடியும்.
யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரீ 2617
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிரிகளாகவும், சிறுபான்மையினராகவும் இருந்த யூத இனத்துப் பெண் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொண்டு வந்து தந்தபோது அதைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை இருந்தது. அவள் விஷம் கலந்த செய்தி தெரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டாள். அவளைக் கொன்று விடலாமா? என்று நபித் தோழர்கள் கேட்டபோது, வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் நிலை என்னவென்றால் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்பது தான்.
சட்டத்தை அமுல்படுத்துவதில் கடும் போக்கை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய சொந்த விவகாரம் என்றவுடன் மன்னித்து விடுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். 'இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.
நூல் : புகாரீ 1313, 1311
இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும்போது இருபதாம் நூற்றாண்டில் கூட கலவரங்கள் நடப்பதைக் காண்கிறோம். எதிரி சமுதாயத்தவரின் உடல்களை எங்கள் தெரு வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என்று ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே வெட்டு குத்துக்களில் இறங்குவதையும் காண்கிறோம்.
உயிருடன் இருக்கும்போது நடமாடுவதற்கு அனுமதியளித்தவர்கள் கூட இறந்த உடலுக்கு அந்த உரிமையை வழங்க மறுத்து வருவதைக் காண்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கிறார்கள். அவர்களின் எதிரி சமுதாயமாக யூதர்கள் இருந்தனர். எதிரி சமுதாயத்தைச் சேர்ந்த - சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த - ஒருவரின் உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் தயக்கமோ, அச்சமோ இன்றி கொண்டு செல்லப்படுகிறது.
முஸ்லிம்களின் ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதி வழியாக, முஸ்லிம் அரசின் அதிபர் வசிக்கும் தெரு வழியாக பிரேதத்தை எடுத்துச் செல்ல சிறுபான்மை மக்களுக்கு எந்த அச்சமும் இருக்கவில்லை. சர்வசாதாரணமாகப் பிரேதத்தை எடுத்துச் செல்கிறார்கள்.
பிரேதம் கடந்து செல்லும்போது உள்ளத்தில் வெறுப்பைச் சுமந்து கொண்டு வேண்டாவெறுப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் அமைதி காத்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த உடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியதன் மூலம் உளப்பூர்வமாகவே அனுமதித்தார்கள் என்பதை அறியலாம்.
யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்துள்ளனர்.
(பார்க்க : புகாரீ 2412, 2417)
நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூட, வெளிப்படையாகப் போர்ப்பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர். அதனால் தான் இஸ்லாம் அந்த மக்களை வென்றெடுத்தது.
எனவே முஸ்லிமல்லாதவர்களை நண்பர்களாக்கக் கூடாது என்பது பொதுவானது அல்ல என்பதையும், முஸ்லிமல்லாதவர்களுடனும் நல்லிணக்கம் பேண வேண்டும் என்பதையும் இந்த ஆதாரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
மதம் மாற்ற போர் செய்யக்கூடாது.
இவ்வசனங்களில் (2:193, 8:39) "கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள்'' என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் இடம் பெற்றுள்ள 'தீன்' என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்த விளக்கத்தின்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து ஏற்படுகிறது. ஆனால் மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்பதை 2:256, 10:99, 9:6, 109:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
அவ்வாறிருக்க "மதமாற்றம் செய்யும் வரை போரிடுங்கள்'' என்று பொருள் கொள்ளவே முடியாது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள், குறிப்பாக யூத கிறித்தவர்கள், யூத கிறித்தவர்களாகவே வாழ்ந்து வந்தனர். கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை. இதன் காரணமாகவும் அவ்வாறு பொருள் கொள்ள முடியாது.
மேலும் மேற்கண்ட இரு வசனங்களின் பிற்பகுதியைக் கவனித்தால் கூட அவ்வாறு பொருள் கொள்வது தவறு என்பதை விளங்க முடியும்.
"அவர்கள் விலகிக் கொண்டால் அவர்கள் மீது வரம்பு மீறக் கூடாது'' என்று அவ்வசனங்கள் முடிகின்றன. போரில் இருந்து விலகிக் கொண்டால் என்பதுதான் இவ்வாறு கூறப்படுகிறது.
இவ்வசனத்தில் கூறப்படும் தீன் என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பொருள் கொள்வது தவறு என்பது இதிலிருந்தும் உறுதியாகின்றது.
'தீன்' எனும் சொல் பல அர்த்தங்கள் கொண்ட சொல்லாகும். மார்க்கம், கூலி, பரிசு, தீர்ப்பு, அதிகாரம் என்று பல அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன.
இவ்விரு வசனங்களிலும் அதிகாரம் என்று மொழிபெயர்ப்பது தான் சரியானது. போர் வந்து விட்டால் அதிகாரம் கைக்கு வரும் வரை போரிட வேண்டும் என்பதுதான் இதன் கருத்தாகும். இது உலக நாடுகள் அனைத்துமே கடைப்பிடிக்கின்ற சாதாரண நடவடிக்கை தான்.
பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா?
இவ்வசனங்கள் (2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9) போர் செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகின்றன.
ஆன்மிக வழிகாட்டும் நூலில் போர் செய்யுமாறு ஏன் கட்டளையிட வேண்டும்? அப்படியானால் வாள்முனையில் தான் இஸ்லாம் பரப்பப்பட்டதா? என்று இஸ்லாத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகின்றது.
ஏன் இவ்வாறு கட்டளையிடப்பட்டது? எந்தச் சூழ்நிலையில் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்த விமர்சனம் முற்றிலும் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது சொந்த ஊர் மக்களால் அவர்கள் சொல்லொணாத இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பலர் கொல்லப்பட்டார்கள்.
இறுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் கொன்று விட அவ்வூர் மக்கள் திட்டமிட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தம்முடைய வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் எதிரிகளிடம் பறிகொடுத்து மக்காவை விட்டு வெளியேறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்ததால் அங்கே தனி அரசையும் உருவாக்கினார்கள்.
இதன் பிறகு மக்காவாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இருந்த முஸ்லிம்களைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்வதை இறைவன் கடமையாக்கினான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத் தலைவராக மட்டுமின்றி அந்த நாட்டின் அதிபராகவும் இருந்தார்கள். நாட்டின் அதிபராக இருப்பவர் தமது குடிமக்களைக் காக்கும் பொறுப்பில் இருப்பதால் எதிரிகள் போருக்கு வரும்போது அவர்களை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். சொந்த ஊரை விட்டு முஸ்லிம்களை விரட்டி அடித்தது மட்டுமின்றி வேறு இடத்தில் நிம்மதியாக வாழும்போது எதிரிகள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்க்கும் கடமையும், உரிமையும் உண்டு. இதனடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிட்டார்கள்.
கொல்லுங்கள், வெட்டுங்கள் என்று திருக்குர்ஆனில் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும்.
போர்க்களத்தில் நிற்கும் போர் வீரர்களுக்கு இடப்பட்ட மேற்கண்ட கட்டளைகளை இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாம் கொன்று குவிக்கச் சொல்கிறது என்று பிரச்சாரம் செய்வது உள் நோக்கம் கொண்டதாகும்.
இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்பதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
* வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
* சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:191, 22:40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
* போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் செய்யக் கூடாது என்று 2:192 வசனம் கூறுகிறது.
* அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் செய்ய வேண்டும் என 4:75, 22:39-40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
* சமாதானத்தை விரும்புவோருடன் போர் செய்யக் கூடாது என்று 8:61 வசனம் கூறுகிறது.
* மதத்தைப் பரப்ப போர் செய்யக் கூடாது என்று 2:256, 9:6, 109:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.
இந்த வசனங்கள் எதற்காக எந்தச் சூழ்நிலையில் அருளப்பட்டன என்பதை விளங்காமல் சில தனி நபர்களும், குழுக்களும் தங்களின் வன்முறைகளுக்கு உரிய சான்றுகளாக இவ்வசனங்களை எடுத்துக் கொண்டால் அது அவர்களின் அறியாமையாகும். இவ்வசனங்களுக்கும், வன்முறைகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.
சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் தொடுத்தனர்.
போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. இதை 2:190, 9:12,13 ஆகிய வசனங்களில் காணலாம்.
ஆட்சி இல்லாமல் போர் இல்லை
திருக்குர்ஆனின் 2:247, 248 ஆகிய வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன.
அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளின் சொல்லொணாத துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த நபியின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.
எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் அவரது சமுதாயத்தவர் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பவரை மன்னராக நியமித்து அவர்கள் மீது போர் செய்வதைக் கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.
இவ்வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு சட்டங்கள் பெறப்படுகின்றன.
- படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், மன்னரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது சட்டம்.
ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.
அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்த பிறகு இறைவன் மன்னரை நியமித்தான். அதன் பிறகுதான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.
போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான்.
- இறைத்தூதர்கள் உலகில் ஆட்சியைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்டவர்களல்லர். மாறாக தமது சமுதாயத்தை ஓரிறைக் கொள்கைக்கும், ஒழுக்கத்திற்கும் அழைப்பதற்காகவே அனுப்பப்பட்டனர் என்பது இந்நிகழ்ச்சியிலிருந்து பெறப்படும் இரண்டாவது சட்டமாகும்.
ஏனெனில் ஒரு இறைத்தூதர் உலகில் இருக்கும் போது இறைத்தூதர் அல்லாத இன்னொருவரை இறைவன் மன்னராக நியமிக்கிறான். அந்த இறைத்தூதரும் அம்மன்னரின் கீழ் போரிடும் நிலையையும் ஏற்படுத்துகிறான். நபியையே மன்னராக இறைவன் நியமிக்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்காக நபிமார்கள் அனுப்பப்படுவதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
போர் செய்வது குறித்த வசனங்களை தமது செயல்களுக்குச் சான்றாகக் காட்டி ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்குவோருக்கு எச்சரிக்கையாக இவ்வசனம் அமைந்துள்ளது. இவர்களின் செயல்கள் சரியானவை அல்ல என்பதை இந்த வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
சிறிய இயக்கத்தை அமைத்துக் கொண்டு "அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வோம்'' என்று மக்களை மூளைச் சலவை செய்து ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடுவோர் ஜிஹாத் செய்பவர்கள் அல்லர். இவர்கள் பயங்கரவாதிகளே.
ஒரு இறைத்தூதர் தலைமையில் உருவான சமுதாயமாக இருந்தாலும் ஆட்சி அமைக்காமல் போர் செய்யக் கூடாது என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்வதே இவர்களின் வாதம் தவறு என்பதற்குத் தக்க சான்றாகும்.

