( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர்ப் பிரதேசத்தில் பல்கலைக் கழக பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ள 48 மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் பெருவிழா நேற்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.
ஐ.ஜி.கே நிறுவனப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.சலாம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சிறப்பித்தார்.
நிந்தவூர் நலன்புரிச் சபை தலைவரும், முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எம்.எச் யாக்கூப் ஹசன், தென் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. சபீனா கஸ்ஸாலி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
2016ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உஃத) பரீட்சையில் திறமைச் சித்திபெற்று, பல்கலைக் கழக பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ள 48 மாணவர்களும், அதிதிகளால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;:- 'மாணவர்களைப் பாராட்டுகின்ற இந்த நல்ல சிறப்பான நிகழ்வானது எதிர்காலத்தில் நிந்தவூரில் பல்கலைக் கழகப் பிரவேசத்திற்கான மாணவர்களது எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை' எனத் தெரிவித்தார்.
தென் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. சபீனா கஸ்ஸாலி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-'பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகிவிட்டோம் என நினைத்து மாணவர்கள் மமதை கொண்டு செயற்படாதீர்கள். நல்லொழுககத்துடன் உயர் கல்வியைத் தேடுவதோடு, உங்களிடமுள்ள சிறந்த திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆங்கில அறிவை மேம்படுத்துங்கள். என்றும் தன்நம்பிக்கையை கைவிடாதீர்கள். நிச்சயம் வாழ்வில் உயரலாம்.' ஏனத் தெரிவித்தார்.













