சாய்ந்தமருதில் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் அங்குரார்ப்பணம்!

Written By avathani Media Network on Monday, January 9, 2017


(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலித்தீன்)

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஹோட்டல்களின் சுகாதாரம் மற்றும் நலன்களை பேணும் பொருட்டு அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாரூக் தலைமையில் இடம்பெற்ற ஹோட்டல் உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டத்தின்போதே 'சாய்ந்தமருது பிரதேச ஹோட்டல்களின் உரிமையாளர்கள் சங்கம்' எனும் பெயரில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக எம்.வை.எம்.ஜௌபர், செயலாளராக ஏ.ஆதம்பாவா (மன்சூர்), பொருளாளராக கே.எல்.எம்.பைசல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் ஹோட்டல்களின் திண்மக்க கழிவகற்றல் தொடர்பாக உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கபட்டது.

இதன்போது ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான செயற்திட்டம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை முன்னெடுப்பதற்கு சாய்ந்தமருது பிரதேச ஹோட்டல்களின் உரிமையாளர்கள் சங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய கலாநிதி டாக்டர் என்.ஆரிப், பிரதேச சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறுக், சுகாதார பரிசோகர்களான ஏ.நியாஸ். ஏ எம்.நிஜாமுடின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.