'அவர்களும்' இவர்களும்

Written By avathani Media Network on Friday, January 27, 2017

(Mohamed Nizous)

கத்தமும் காசுமாய்
கற்றவர்கள் ஓத
ரத்தமும் யுத்தமுமாய்
மற்ற இனம் பார்க்க
மொத்த குர் ஆனின்
முத்தான கருத்துக்களை
சுத்தமாய் அறிந்தோர்
சொற்பமே உள்ளனர்.

தொடுத்த போர்களினை
எடுத்து 'அவர்' விமர்சிக்க
அடுத்த இயக்கத்துக்கு
ஆப்படிக்க 'இவர்' தேட
எடுத்த புஹாரியிலும்
இருக்கும் முஸ்லிமிலும்
விடுக்கும் நல்வாழ்வை
விளங்குவோர் ஒரு சிலரே

கிராமத்தை இழந்தவர்கள்
சிரமத்தில் வாட
எருமைத் தனமாக 
இனவாதி விமர்சிக்க
கறாமத்தைக் கூறி
கந்தூரி கொடுத்து
கருமத்தைச் செய்யும்
கவலையற்ற சமூகம்

ஓட்டைப் பிரிப்பதற்கு
உயர் மட்டம் குழிவெட்ட
ஓட்டை உடைசலுடன்
உள்ள மரம் தள்ளாட
காட்டிக் கொடுப்பதற்கு
கனக்கப் பேர் அணிவகுக்க
நாட்டிலே இச் சமூகம்
கேட்பாரற்று நிற்கிறது.

இறைவனின் அருளால்தான்
இன்னும் வாழ்கிறோம்
கறையான்கள் அரித்தாலும்
காலூன்றி நிற்கின்றோம்
முறையான வழிகாட்டல்
முற் போக்கு சிந்தனைகள்
சரியாகக் கிடைப்பதற்கு
ஷரியாவின் வழி இணைவோம்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.