"அழுத்தங்களை கொடுப்பதிற்கு பதிலாக ஆர்வமூட்டுவதன் மூலமே பிள்ளைகளை கல்வியில் முன்னேற்ற முடியும்" NFGG தவிசாளர் பொறியாலாளர் அப்துர் ரஹ்மான்.

Written By avathani Media Network on Thursday, December 29, 2016

(NFGG ஊடகப் பிரிவு)

"அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலமாக தமது பிள்ளைகளை கல்வியில் முன்னேற்ற முடியும் எனப் பல பெற்றோர்கள் நினைக்கின்றனர். அது பாரிய தவறாகும். பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக கல்வியில் ஆர்வத்தை ஊட்டி உக்கப்படுத்துவதன் மூலமே அதனை சாதிக்க முடியும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

FGGனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் திட்டம் கடந்த சில நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த மூன்று தினங்களில் இவ்வாறான ஆறு நிகழ்வுகளை காத்தான்குடிப் பிரதேசத்தில் NFGGநடாத்தியுள்ளது. அதில் 1500 க்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

'மாணவர்களின் கல்வி முன்னேற்றம், அவர்களின் எதிர்கால வெற்றி, அது தொடர்பில் பெற்றோர்களின் கடமைகளும் பொறுப்புகளும்' என்ற தலைப்புக்களில் பெற்றோர்களுக்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகின்ற பணியினையும் இந்த நிகழ்வுகளின் ஊடாக NFGG மேற்கொண்டு வருகின்றது.

இந் நிகழ்வுகளில் ஆற்றப்பட்ட விசேட உரைகளின் போதே NFGG யின் தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"கடந்த காலங்களைப் போலன்றி, கல்வி பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் மிக அதிகமாக காணப்படுகின்றது. தமது பிள்ளைகளை எவ்வாறாவது படிப்பித்து வெற்றியடையச் செய்து விட வேண்டும் என்பதில் ஒவ்வொரு பெற்றோரும் மிகக் கவனமாகவும் அக்கறையாகவும் இருக்கின்றனர்.

பரீட்சைப் போட்டிகளும் தொழில் போட்டிகளும் அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் தமது பிள்ளைகளை கல்வியில் வேகமாக முன்னேற்றி விட வேண்டும் என்பதற்காக பலவாறான முயற்சிகளையும் பெற்றோர்கள் மேற்கொள்கின்றனர். சில வேளைகளில் பிள்ளைகள் பரீட்சைகளில் குறிப்பிட்ட அடைவு மட்டத்தை பெறுவதென்பது தமது கௌரவப் பிரச்சினையாகவும் பெற்றோர்கள் பார்க்கத் தொடங்குகின்றனர். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

ஓடித்திரிந்து, விளையாடி, ஓய்வுகளை அனுபவித்து , அதனோடு சேர்த்து கல்வியும் கற்க வேண்டிய அந்த சிறுவயதுப் பிள்ளைகளின் தலையின் மீது அளவுக்கதிகமான சுமை திணிக்கப்படுகிறது. இறுதியில், கொஞ்சம் கொஞ்சமாக கல்வி மீதான ஆர்வத்தையும் விருப்பத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அந்த மாணவர்கள் மனதில் கல்வி என்பது ஒரு சுமையாகவும் வெறுப்புக்கும் பயத்திற்றும் உரிய ஒன்றாகவும் மாறிவிடுகின்றது.

எனவே, பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் தமக்கிருக்கும் அக்கறையினை எப்படி வெளிப்படுத்துவது என்பது பற்றி மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

முதலில் அனாவசியமான அழுத்தங்களையும் திணிப்புக்களையும் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக கற்றல் நடவடிக்கைகளில் அவர்களுக்கு விருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஆர்வமூட்டும் நடவடிக்கைகளை எல்லா வகைகளிலும் செய்யவேண்டும். அடுத்ததாக, பரீட்சைகள் பற்றிய பயத்தைப் போக்க வேண்டும்.

தன்னம்பிக்கையினை மெல்ல மெல்ல வளர்க்க வேண்டும். எந்த எந்தப் பாடங்களில் அவர்கள் பலவீனமாக இருக்கின்றார்களோ அந்தந்தப் பாடங்களை மேலும் மேலும் சுமையாக்கிவிடாமல் இலகு படுத்திக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் ஒவ்வொரு வயதுக்குமான உளவியலை நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். கல்வியில் செலவழிக்கும் நேரம் போலவே ஓய்வுகளிலும் ஏனைய விளையாட்டு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுவதற்கு நாமாகவே நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.

ஒரு மனிதனுடைய எல்லாவகையான முன்னேற்றங்களும் வெற்றிகளும் அவனது உளவியல் வளர்ச்சியிலும் அதன் காரணமாக ஏற்படுத்தப்படும் தன்னம்பிக்கை மற்றும் ஆழுமை வளர்ச்சியிலும்தான் தங்கியிருக்கிறது என்பதை பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது.

வீட்டில் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய பொருத்தமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது மிக அடிப்படையான கடமையாகும். ஏனைய எல்லா வசதிகளும் கொண்ட வீடுகளில் கூட பிள்ளைகள் படிப்பதற்கான தனியான வசிதிகள் இல்லாதிருப்பதை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன்.

அத்தோடு அடுத்த மாணவர்களோடு ஒப்பிட்டு உங்களது பிள்ளையினை நோக்காமல் நீங்கள் அவர்களை தனித்தனியாக கையாளவேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருடைய ஆளுமையும் ஆற்றலும் தனித்தனியாக வேறுபட்டது. அந்த இயற்கை யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே பிள்ளைகளை கல்வியில் முறையாக முன்னேற்ற முடியும்.

எனவே, அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கைகளைக் கைவிட்டு உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஊட்டுகின்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களின் கல்வியில் வெற்றியடைய செய்ய வேண்டும்."



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.