(எம்.எம்.எம்.நூறுல்ஹக்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சர்ச்சை இறுதித்தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும் இனி அது தொடர்பில் எந்தவிதமான பிணக்குகளும் தோற்றுவிக்கப்படாதென்ற கோணத்தை அடைந்திருப்பதாகவுமே பலரும் நம்புகின்றனர். செயலாளர் பிரச்சினை என்பது இனித்தான் பூதகரமாக பெருக்கப்போகின்றது. ஏனெனில், ஓர் அரசியல் கட்சியைப் பொறுத்தவரை அதன் தலைவரும், செயலாளரும் கருத்தொற்றுமையுடன் செயற்பட வேண்டிய பொறுப்புக்களைக் கொண்டவர்களாவர். இங்கு சந்தேகம் வருவதன் ஊடாக ஏற்படும் இடைவெளி என்பது மீண்டும் நெருங்குவதற்கோ, ஒட்டுவதற்கோ வாய்ப்புக்கள் குறைந்தவை.
ஒரு கட்சிக்கு ஒரு செயலாளரும் இன்னொரு உதவிச் செயலாளரும் இருப்பதுதான் சரியான திட்டமிடல்களுக்கும், செல்நெறிக்கும் உகந்ததாக அமைய முடியும். இதற்கு மாறாக இன்று செயலாளர் நாயகம் என்றும், உதவிச் செயலாளர் என்றும், உயர்பீடச் செயலாளர் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உருவாக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் செயற்பாட்டுக்கு பல குந்தகங்களையும் தடுமாற்றங்களையும் ஏற்படுத்த வல்லதாகும்.
தேர்தல் ஆணைக்குழுவைப் பொறுத்தவரை தேர்தல் செயற்பாடுகள் குறித்து கையாள்வதற்கு உரித்துடைய ஒரு செயலாளரை குறித்த கட்சி அடையாளப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவைப்படும் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரித்தான உத்தியோகபூர்வமான செயலாளராக மன்ஸூர் ஏ காதிர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றார். இது மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹஸன் அலியின் முழு விருப்பத்தோடு கடந்த 16.12.2016 இல் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டிருக்கின்றது.
இதன் ஊடாக இனி எந்தச் சூழலிலும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, மன்ஸூர் ஏ காதிர் நியமிக்கப்பட்டதை எங்குமே கேள்விக்குட்படுத்த முடியாது. இதன் இன்னொரு பக்கம் கடந்த வருடம் தேர்தல் செயலகத்தோடு தொடர்புறும் வகையில் நியமிக்கப்பட்ட செயலாளராக மன்ஸூர் ஏ காதிரின் நியமிப்பு சட்டத்தின் பார்வையிலும் வலிதுடையதாக ஆகுவதற்கும் மு.கா. செயலாளர் நாயகம் ஹஸன் அலி தன்னை காவுகொடுத்திருக்கின்றார். அதேநேரம் கட்சி மீதும் அதன் தலைவர் மீதும் இன்னும் தான் நம்பிக்கை இழக்கவில்லை என்ற செய்தியையும் இதன் ஊடாக வலிமைப்படுத்தியும் இருக்கின்றார்.
மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹஸன் அலியுடைய செயலாளர் அதிகாரப் பறிப்பு ஏற்படுத்தப்பட்டமைக்கு அவரது இயலாமை அல்லது அவரது துரோகச்செயல் என்று எவற்றினையும் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அறிவித்து இன்றுவரை உறுதிப்படுத்தாத ஒரு நிலைதான் உத்தியோகபூர்வமாக காணப்படுகின்றது. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும், வெளிச் சக்திகளும், அரசியல் விமர்சகர்களும் பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவையாவும் மிகத் துல்லியமான கருத்தாகவோ ஆதாரபூர்வமானவையாகவோ நோக்கப்படத்தக்கதல்ல.
என்றாலும் மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீம் அதன் செயலாளர் நாயகத்தின் பதவிக் குறைப்புக் குறித்து அதற்கான காரணத்தை உத்தியோகபூர்வமான அறிவிப்பாக வெளிப்படுத்தாது இன்றுவரை மௌனம் சாதிப்பது மு.கா. செயலாளர் நாயகம் ஹசன் அலி தமது பதவிப் பொறுப்பை செயற்படுத்துவதில் தளர்வு நிலையையோ இயலாமையையோ கொண்டவர் அல்ல என்பதையும் கட்சிக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை என்பதையும் நிரூபிப்பதாகவே பார்க்க முடியும்.
செயலாளர் பிணக்கு தொடர்பில் தலைவரின் வாக்குறுதிகளை முழுமையாக நம்பிய ஒரு நிலையில்தான் மு.கா. செயலாளர் நாயகம் ஹசன் அலியுடைய அனைத்து விட்டுக்கொடுப்புக்களும் நடைபெற்றிருப்பது மிகப் பகிரங்கமானவை. செயலாளர் அதிகாரப் பறிப்போடு சூடு பிடிக்கப்பட்ட மூன்று விடயங்கள் காணப்படுகின்றன.
(01) தலைவர் வாக்குறுதி அளித்த பிரகாரம் தேசியப் பட்டியல் நியமனம் தரப்பட வேண்டும் (இந்தக் கோரிக்கை சில நேரங்களில் தான் கோரவில்லை என்றும், சில இடங்களில் கோருவது போன்ற பாங்கையும் வெளிப்படுத்தும் வகையில் ஹஸன் அலி தரப்பிலிருந்து வெளிப்பட்ட ஊடகச் செய்திகள் கொண்டிருந்தன)
(02) கடந்த 2015இற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் கொண்டிருந்த அதிகாரங்களில் எவ்விதக் குறைப்புமில்லாது மீண்டும் அப்பதவி வழங்கப்படல் வேண்டும்.
(03) 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்சியின் யாப்புத் திருத்தத்திற்கு அமைவாக தலைவரிடம் குவிந்து காணப்படுகின்ற அதிகாரங்கள் குறைக்கப்படல் வேண்டும்.
மேற்குறித்த மூன்று விடயங்களில் எதுவுமே நிறைவேற்றப்படாத நிலையில்தான் மு.கா. வின் செயலாளர் நாயகம் ஹஸன் அலியுடைய விட்டுக்கொடுப்பும் சமரசமும் நிகழ்ந்திருகின்றது என்பதை மிகத் தெளிவாகவே சுட்டி நிற்கின்றது. மு.கா. செயலாளர் நாயகம் ஹசன் அலியுடைய விட்டுக்கொடுப்பு என்பது அன்றைய தருணத்தில் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு மிகவும் அவசியப்பட்டதும் அவசரப்பட்டதுமாக இருந்ததை நாம் அவதானிக்கலாம்.
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார் என்பதை அறிவிக்கக் கொடுத்த காலக் கெடு 15.12.2016 ஆகும். இவ்விடத்தில் இப்பிரச்சினை தீர்க்கத் தவறின் கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் முடக்கப்படுவதும் கட்சியின் சின்னத்தை கையாள முடியாத ஒரு நெருக்குவாரத்தையும் கட்சிக்கு தோற்றுவித்திருக்கும்.
இத்தகைய இக்கட்டுக்களை தவிர்த்துக் கொள்வதற்காக செயலாளர் நாயகம் ஹஸன் அலியோடு இணங்கிப் போக வேண்டிய தேவையை தலைவருக்கு மேலெழச்செய்திருந்தது. இதனைத் தனித்துக்கொள்ளும் வகையில்தான் செயலாளர் நாயகத்தின் எல்லாக் கோரிக்கைகளையும் விரும்பியோ , விரும்பாமலோ அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டவர் போல் தலைவர் தன்னை காட்டிக் கொள்வதிலும், அதிக விட்டுக் கொடுப்புக்களை தான் செய்தது போன்ற ஒரு தோற்றப்பாட்டையும் ஹஸன் அலிக்கு ஏற்படுத்தியிருந்தார். அதனை மக்கள் மயப்படுத்தவும் அவர் தவறவில்லை.
அடுத்த பேராளர் மாநாடு நடைபெறும்வரை உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட செயலாளருக்கான அதிகாரக் குறைப்பை பொறுத்துக்கொண்டு மன்ஸூர் ஏ காதிரை அதுவரை தேர்தல் செயலகத்துடன் இணைந்து செயற்படும் உரித்தை வழங்க வேண்டுமென்பதும், பேராளர் மாநாட்டிற்குப் பின்னர் ஏக செயலாளராகவும் சகல அதிகாரங்கள் கொண்டவையாகவும் ஏற்படுத்தி அதற்கு உங்களை செயலாளராக நியமிப்பது என்று எடுக்கப்பட்ட முடிவுமாகும்.
தற்போது தேசியப்பட்டியலில் இருக்கின்ற எம்.எச்.எம்.சல்மானின் 2016.12.16ஆம் திகதி இடப்பட்ட இராஜினாமாக் கடிதத்தின் பிரதி ஒன்று மு.கா. செயலாளர் நாயகம் ஹஸன் அலியிடம் கையளிக்கப்பட்டது. சட்டபூர்வமாக சல்மானின் பாராளுமன்ற உறுப்புரிமை வறிதாக்கப்பட்டு அந்த இடத்துக்கு நீங்கள் நியமிக்கப்படுவதென்றும் இணக்கம் காணப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில் திருத்தம் கொண்டு வந்துதான் செயலாளர் பதவியின் அதிகாரத்தில் பகிர்ந்து வழங்கப்பட்ட பங்கீட்டை இரத்துச் செய்துகொள்ள முடியும். அதுமாத்திரமன்றி தலைவர் விரும்புபவரை செயலாளராக நியமிப்பது அவர் விரும்புகின்ற போது அவரை நீக்குதல் என்கின்ற தலைவருக்கான அதிகாரங்களெல்லாம் இல்லாமல் செய்யப்பட முடியும்.
எதிர்வரும் பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் யாப்புத்திருத்தத்தின் ஊடாகவே 2015இற்கு முன்னர் இருந்த செயலாளர் கட்டமைப்பைப் போன்று உருவாக்குவதற்கு அவசியப்படுகின்றது. இந்தத் திருத்தம் மட்டுமே அங்கு மேற்கொள்ளப்படப்போகின்றதா? அல்லது ஏலவே முன்வைக்கப்பட்ட தலைவரிடம் குவிந்து கிடக்கின்ற அதிகாரங்களைக் குறைக்கின்ற சரத்துகளிலும் மாற்றம் செய்யப்படப் போகின்றதா? என்பதில் இவ்விடத்தில் ஒரு குழப்ப நிலை இருப்பதும் நமக்கு மறைவன்று.
இவை ஒருபுறம் இருக்க எதிர்வரும் 02.01.2017இல் ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நடைபெறுவதற்கான அறிவிப்புக்கள் உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது. அதில் நிகழ்ச்சி நிரலும் வழமை போன்று குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அப்பால் மு.கா. வின் செயலாளர் நாயகம் ஹஸன் அலிக்கு வழங்கப்படவிருக்கின்ற தேசியப்பட்டியல் தொடர்பில் சர்ச்சை ஒன்று கிளப்பப்பட்டு அதில் விவாதம் ஒன்று மிகவும் பூதகரமாக நடைபெறுவதற்கான வாய்ப்புக்களும் இல்லாமலில்லை.
ஏன் இவ்வாறு அனுமானிக்கின்றோம் என்றால், மு.கா. செயலாளர் நாயகம் ஹஸன் அலிக்கான தேசியப்பட்டியல் தருவதாக சமரசத்தின் போது கூறப்படுகின்ற போது காலங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆதலால், இதனை ஒரு சுழற்சி முறை தேசியப்பட்டியலாக மாற்றுவதில் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு தேவைப்பாடு அதிகம் இருக்கின்றது. அதற்கு வழி ஏற்படுத்திக் கொள்வதற்காக நடைபெற உள்ள உயர்பீடக் கூட்டத்தில் தனக்கு வேண்டிய விசுவாச உறுப்பினர்களை வைத்து காரசாரமாக கருத்துரைத்தலை உருவாக்கி சில நியாயங்களைச் சொல்லி ஹஸன் அலிக்கு வழங்கப்படும் தேசியப்பட்டியல் உறுப்புரிமை சுழற்சி முறைக்கு உட்பட்டதென்பதை நிரூபித்து, தனது முன்னைய வாக்குறுதியினால் தேசியப்பட்டியலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரதேசம் அல்லது நபர்களை இன்னும் நம்ப வைத்து காலத்தை கழிப்பதற்கு கட்டாயமாக தேவைப்படுகின்ற ஒன்றுமாகும்.
எது எவ்வாறிருந்தாலும் ஹஸன் அலியின் தேசியப்பட்டியல் விவகாரம் சூடான பிரதி வாதங்களுக்கு உட்படுத்தப்படுமானால் அதில் மு.கா. செயலாளர் நாயகம் ஹஸன் அலி சமூகமளித்திருந்தாலும் தனக்கு தேசியப்பட்டியல் தந்தாக வேண்டுமென்ற நியாயங்களை ஆணித்தரமாக அங்கு வாதாடுவதற்கு அவரிடம் காணப்படுகின்ற நாகரிகப் பணிவின் குணாம்சத்தின் காரணமாக வாயடைத்துப் போகும் சூழல் உருவாகும். அல்லது தேசியப்பட்டியலே எனக்கு வேண்டாம் என்கின்ற கருத்தை மு.கா. வின் செயலாளர் நாயகமான ஹஸன் அலியே முன்வைக்கின்ற ஒரு நெருக்குவாரம் உருவாக்கப்படும் சாத்தியத்தையும் நாம் மறுத்துவிட முடியாது.
இவ்வாறான சூழல் ஒன்று எதிர்வரும் உயர்பீடக் கூட்டத்தில் அரங்கேற்றப்படும் நிலைக்கு தலைவர் ரவூப் ஹக்கீம் கிஞ்சித்தும் இடம் நல்கக் கூடாது. முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தலைவர் மீதும், கட்சி மீதும் நல்லெண்ணமும் நம்பிக்கையும் வைத்து பலத்த விட்டுக் கொடுப்புக்களை செய்திருப்பது போன்று தலைவரும் தமது நேர்மையை நிரூபிக்க வேண்டிய கடப்பாட்டையும் அவர் புறந்தள்ளிவிடக் கூடாது.
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் ஒன்று வழங்குவதாக தலைவர் ரவூப் ஹக்கீம் வாக்குறுதியளித்திருந்தமை மிக பிரசித்தமானதும், பகிரங்கமானதுமாகும். இந்த வாக்குறுதியென்பது அட்டாளைச்சேனைக்கு கடந்த பொதுத் தேர்தலின் போது மாத்திரம் வழங்கப்பட்ட உறுதிமொழியல்ல. இதற்கு முன்னரும் அப்பிரதேச மக்களுக்கு இந்த வாக்குறுதியை தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தலைவர் ரவூப் ஹக்கீமின் தேசியப்பட்டியல் வாக்குறுதிகள் இதய சுத்தியோடும், உறுதியான கருத்தாகவும் வெளிப்படுகின்றதில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டு தலைவர் ரவூப் ஹக்கீம் மீது நீண்ட காலமாகவே இருந்து வருவது வெளிப்படையானது. இவைகளுக்கப்பால் இம்முறை அட்டாளைச்சேனைக்கு வழங்கிய தேசியப்பட்டியல் வாக்குறுதி உண்மைக்கு உண்மையானது என்று அப்பிரதேச மக்கள் நம்புவார்களாயின் அந்த போராட்டத்தை அவர்கள் பின்வரும் கோணத்தில் நிறைவேற்றியிருப்பதற்கு முயன்றிருக்க வேண்டும்.
கடந்த பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கியிருந்த இடங்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவருடைய பெயரை இடம்பெறச் செய்வதில் அதிக சிரத்தை எடுத்து தேசியப் பட்டியலில் இடம்பெறச் செய்வதை நன்கு திட்டமிட்டு முன்னெடுத்திருக்க வேண்டும். அது இங்கு கையாளப்படாமை அவர்களுடைய விடயத்தை பின்னடையச் செய்வதற்கு வழி ஏற்படுத்தியிருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸிற்கு இம்முறை கிட்டிய இரண்டு தேசியப் பட்டியலும் சுழற்சி முறைக்குரியதானால், தங்களது பிரதேசத்திற்கு எத்தனையாவது சுழற்சி முறைப் பகிர்வாக அது அமையும் என்பதை தலைவர் வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அந்தக் காலத்தை உறுதி செய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் எதனையும் உறுதி செய்யாமல் தவறவிட்டிருப்பதும் கவனத்திற்குரியது.
எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மானுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற தேசியப்பட்டியல் காலங்கள் சுமார் 15 மாதங்கள் கழிந்தும் அது தொடர்பில் வாய் திறக்காமல் இருகின்ற அட்டாளைச்சேனை மக்கள், முஸ்லி காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுவதாக கருத்துக்கள் ஊசலாடப்படுகின்ற போது மாத்திரம் உஷார் பெற்று உக்கிரமாக தேசியப் பட்டியல் கோரத் தொடங்குவது ஒரு காழ்ப்புணர்வு வெளிப்பாடாகவே நோக்க வைக்கின்றது.
தேசியப் பட்டியல் போராட்டம் அட்டாளைச்சேனை மக்களுக்கு நியாயமானதென்பதை யாரும் எளிதாக மறுத்துரைக்க முடியாது. ஆனால். அது முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலியின் பெயர் சொல்லப்படுகின்ற போது மாத்திரம் கொதித்தெழாது கடந்த 15 மாதங்களாக தேசியப்பட்டியலில் சல்மான் நீடித்து வருகின்ற சூழலில் தங்களது பிரதேசத்துக்குரிய காலத்தை உறுதி செய்ய வேண்டுமென்று தலைவரிடம் தொடர்ந்தேர்ச்சியாக கோரிவரும் ஒரு சந்தர்ப்பமாக இருந்து வந்திருப்பின், அதற்குள் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகத்தின் பெயர் அடிபடுகின்ற போதும் அவர்கள் கோருகின்றார்கள் என்றால் அது அவர்களின் பொது நியாயத்தின் எதிரபார்ப்பென்று உறுதி செய்ய முடியும்.
எந்தவகையிலும் வழங்கப்பட வேண்டிய தேவையும், காரணங்களும் இல்லாத சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மானுக்கு தேசியப் பட்டியலில் நீடிப்பதை கண்டிக்கவோ அதிகுறித்தான நியாயங்களைப் பேசுவதற்கோ முன்வராத அட்டாளைச்சேனை அரசியல்களம் முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸன் அலியை முன்னிறுத்தி மாத்திரம் சண்டைக்கு வருவதோ, நியாயம் பேச வருவதோ ஒரு குறுகிய உணர்வின் வெளிப்பாடன்றி வேறெதுவாக இருக்க முடியும்?
இவைகளுக்கெல்லாம் அப்பால் தேசியப் பட்டியல் உறுப்புரிமை இல்லாமலும் பழைய அதிகாரங்களைக் கொண்ட செயலாளர் பதவியை வழங்காமலும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி ஏமாற்றப்படுவாரா என்கின்ற ஒரு பலத்த சந்தேகமும் முஸ்லிம் அரசியல் களத்தில் இன்று எழுப்பப்பட்டிருக்கின்ற முக்கிய கேள்வியாக உள்ளது. ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேச அரசியல் சூழலிலும், தமது கட்சி மட்டத்திலும் அரசியல் ரீதியாக வழங்குகின்ற பல வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஏமாற்றிய சந்தர்ப்பங்கள் தடயங்களாக பதிவு பெற்றிருப்பதை வைத்து நோக்குகின்ற போது இவ்வாறான சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகும்.
எதிர்வரும் மு.கா வின் உயர்பீடக் கூட்டத்தில் எடுத்த எடுப்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸன் அலிக்கு கடந்த பொதுத் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் நான் வாக்களித்த பிரகாரம் தேசியப் பட்டியல் வழங்கப்படுகின்றது. மற்றும் எதிர்வரும் எமது பேராளர் மாநாட்டில் நமது கட்சியின் யாப்பில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு முழு அதிகாரம் கொண்ட செயலாளராக ஹஸன் அலி நியமிக்கப்படுவார். என்றும் தலைவராகிய என்னிடம் குவிந்திருக்கின்ற அதிகார குவிப்பை குறைத்தும், மேலும் கட்சித் தீர்மானங்களை தலைவர் மாத்திரம் எடுக்காது ஒரு குழுச் செயற்பாட்டு ரீதியாக செயற்படுகின்ற கோணத்துக்கு நமது கட்சி வருவதையே நான் விரும்புகின்றேன். என்று முன்வைப்பாரானால், இக்கட்சி மீது அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற விமர்சனங்கள் தலைமைத்துவத்தின் மீதான அவநம்பிக்கைகள் போன்ற அனைத்து பிரச்சினைகளும் முடிவுறுவதோடு இன்றைய தேசிய அரசியலில் காணப்படுகின்ற முஸ்லிம்களுக்கான தேவைகளை தீர்த்துக்கொள்வதற்கு வலிமையோடு செயற்படும் திடத்தை முஸ்லிம் காங்கிரஸ் தனதாக்கும் என்பதில் சந்தேகப்படத் தேவையில்லை.
MMM. Noorulhague
129,b Osman Road,
Sainthamaruthu - 05

