சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக வீதியில் இறங்கி சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் தயாராக வேண்டும் என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"எமது ஊரின் அபிலாஷையை அரசியல் தலைமைகளுக்கு தெளிவுபடுத்த பல ஆண்டுகள் சென்றது. 2006 ஆம் ஆண்டு தொடக்கம் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்ததன் மூலமே, அரசியல் தலைமைகள் எமது கோரிக்கையினை ஏற்று, அவ்வப்போது வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வந்தது. முஸ்லிம் கடசிகளின் தலைவர்கள் தொடக்கம் பிரதமர் வரை வாக்குறுதி வழங்கினார்கள். கடந்த 2015ஆம் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தில் இதுவே பேசு பொருளாக இருந்ததுடன் வாக்கு வேட்டைக்கான மூலதனமாகவும் பாவிக்கப்பட்டது.
தவிரவும் கடந்த ஒக்டொபர் 21 ஆம் திகதி உள்ளூராட்சி அமைச்சர் எமது மண்ணுக்கு நேரடியாகவே வந்து நள்ளிரவு வேளையில் மக்கள் வெள்ளத்தின் முன் பகிரங்கமாக வாக்களித்தார்.
விரைவில் பொலன்னறுவை மாநகர சபை உருவாகும்போது சாய்ந்தமருத்துக்கான உள்ளூராட்சி மன்றமும் ஏற்படுத்தப்படும் எனும் பாங்கில் நம்பிக்கை தரும் விதத்தில் அவர் உறுதியளித்திருந்தார். ஆனால் இம்மாதம் 19ஆம் திகதி அதி விஷேட வர்த்தமானி மூலம் பொலன்னறுவை மாநகர சபை, பொலன்னறுவை பிரதேச சபை என்பன ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எமது நம்பிக்கை வீணடிக்கப்பட்டு, எமது ஊரின் அபிலாஷை கேள்விக்குறியாக மாறுகின்ற நிலைவரம் தென்படுகின்றது.
அடுத்த ஒரு சில மாதங்களில் உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரகடனம் செய்யப்படவிருப்பதனால் இனியும் தாமதிக்காமல் நாட்டினதும் எமது கட்சிகளினதும் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் அனைவரும் வீறுகொண்டெழுந்து- எமது சக்தியை வெளிப்படுத்தும் வகையில்- வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாக எமக்கு தெரியவில்லை.
எமக்கான உள்ளூராட்சி மன்றம் உருவாவதை தடுக்கும் குழிபறிப்புகள் இப்படியே தொடருமாயின்- அதனை அரசியல் தலைமைகள் பார்த்துக் கொள்ளும் என்ற நப்பாசையில் தொடர்ந்தும் தூங்கிக் கொண்டிருப்போமானால் இரவோடு இரவாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு- நாம் மீண்டும் கைசேதமடையும் துக்ககரமான தருணத்தை விரைவில் எதிர்நோக்க நேரிடும் என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைவோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

