காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவ மாணவிகளின் கற்றல் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்துவதோடு அவர்களை ஆன்மீக, அறிவு, விளையாட்டு மற்றும் திறன் சார்ந்து வளர்த்தெடுப்பதற்கான பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் பிரயோக ரீதியில் வழங்கும் நோக்கில் வதிவிட கல்வி முகாம் ஒன்று கடந்த 2016.12.19 முதல் 2016.12.23 வரை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டடத் தொகுதியில் (Presidental Sports complex ) இடம்பெற்றது.
மாணவர்களுக்கு இரண்டு நாட்களும் மாணவிகளுக்கு இரண்டு நாட்களும் வெவ்வேறாக இக்கல்விமுகாம் இடம்பெற்றது. பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கல்விமுகாமுக்கு மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் வாமி நிறுவனமும் இணை அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கல்வி முகாமில் வெற்றியின் திறவுகோல்கள், ஞாபக சக்தியை மேம்படுத்தல், வாழ்வில் சமநிலை பேணல், தன்னம்பிக்கையை வளர்த்தல், சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஆகிய தலைப்புகளில் பிரயோக செயற்பாடுகளுடன் கூடிய விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. இக்கல்வி முகாமின் வளவாளர்களாக சகோதரர் மனூஸ் அபூபக்ர், அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி), அஷ்ஷெய்க் MSM. நுஸ்ரி (நளீமி), அஷ்ஷெய்க் MTM. சப்ரி (நளீமி), அஷ்ஷெய்க் ARM. அஸ்ஹர் (நளீமி), அஷ்ஷெய்க் AL. அப்துல் ஹாதி (நளீமி) ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.
அத்தோடு ஆன்மிக விருத்திக்கான விசேட இரவுநேர தர்பிய்யா நிகழ்வு ஒன்றும் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இரவு நேர தீ முகாம் (fire camp ) ஒன்றும் இடம்பெற்றது. மேலும் மாணவர்களுக்கான விசேட உடற்பயிற்சி மற்றும் வேடிக்கை விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு கிரிக்கெட், உதைபந்து, வலைப்பந்து, பூப்பந்து ஆகிய விளையாட்டு சுற்றுப் போட்டிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய மாணவ மாணவியர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

















































