(அஸ்லம் எஸ்.மௌலானா)
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் கண்டிப்பான தீர்மானத்தின் பேரில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மைக் கழிவுகளை வகைப்படுத்தி சேகரிக்கும் நடைமுறை இன்று செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய நடைமுறையை ஆரம்பித்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இந்நடைமுறை குறித்தும் அதனால் சுற்றாடலுக்கும் மக்களுக்கும் ஏற்படவுள்ள அனுகூலங்கள் தொடர்பிலும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணக்கவர்களுக்கு தெளிவுபடுத்திய ஆணையாளர், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இன்று நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்து மாநகர சபைகளும் உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள் என வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரமே சேகரிப்பது என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் சில வாரங்களுக்கு முன்னர் கண்டிப்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்டிருந்தது.
இதன் பிரகாரமே கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எமது மாநகர சபை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதன்போது கடதாசிக் குப்பைகள், உணவுக் கழிவுகள், பொலித்தீன், கண்ணாடி என நான்கு வகையாக குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்காக மாநகர சபையினால் நான்கு நிறங்களைக் கொண்ட குப்பைத் தொட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இது தொடர்பில் மாணவர்களுக்கு அறிவூட்டல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.சி.தஸ்தீக், சுகாதார பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அஹ்சன், பாடசாலை அதிபர் ஏ.குனுக்கத்துல்லாஹ், பிரதி அதிபர் ஐ.உபைதுல்லாஹ் உட்பட ஆசிரியர்களும் மாநகர சபை ஊழியர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.






