(மரியமின் புத்திரன்)
ஆயுதங்களையும் சீருடைகளையும் கண்டு சிவில் சமூகம் என்கின்ற பொதுமக்களாகிய நாம் பொலிசாரைக்கண்டு தூரவிலகிநிற்கும் மனநிலையை வளர்த்துக்கொண்டோம். அதற்குக்காரணம் கடந்த முப்பது வருடகாலமாக இந்த நாட்டில் நிலவிய யுத்தமாகும் என அன்மையில் ஊறணி மீனவர் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பொலிஸ் நடமாடும் சேவை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஷர்ரத் தெரிவித்தார்.
அவரங்கு மேலும் உரையாற்றுகையில்
இந்தநாட்டில் இடம்பெற்ற முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் பொலிஸ் திணைக்களமானது தங்கள் கடமைகளையும் தாண்டி மக்களுக்கு பயன்மிக்க சமூக சேவைகளை ஒரு நிகழ்வைக்கொண்டு நடாத்தி இவ்வாறான நடமாடும் சேவையை ஏற்பாடுசெய்திருப்பது உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.
இந்த நிகழ்வானது பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதானது இன்னுமொரு சிறப்பம்சம் என்றே கூறவேண்டும்.
கடந்த முப்பது வருடகால யுத்தத்தின்போது சிவில் சமூகம் என்கின்ற பொதுமக்களாகிய நாம் பொலிஸ் திணைக்களத்திலிருந்துஇ பொலிஸ் அதிகாரிகளிலிருந்துஇ அந்த திணைக்களத்தின் தலைவர்களிலிருந்து தூரமாகியிருக்கின்ற மனநிலையையே கொண்டிருக்கின்றோம். இதற்குக் காரணம் இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தமாகும். அவர்களின் கைகளிலும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு அவர்களும் போராடவேண்டிய நிலமை இந்த நாட்டிலே இருந்ததனால் ஆயுதங்களையும் சீருடைகளையும் கண்டு பொலிசாரிடமிருந்து சிவில் சமூகமாகிய நாம் தூரமாகி நிற்கின்ற மனநிலைக்குள்ளாகியிருப்பதை அவதானிக்கமுடிகிறது.
நாட்டில் யுத்தம் நிறைவுபெற்று சமாதானம் நிலவுகின்றபோது பொலிஸ் என்பதும் சிவில் சேவை என்கின்ற அந்த அரசகடமையை ஆற்றுகின்ற ஒரு நிறுவனம்தான் என்கின்ற விடயத்தை மக்களுக்கு மத்தியில் நிரூபிக்கவேண்டிய அதனை இன்னும் வலுப்பெறச் செய்யவேண்டிய தேவை அவர்களுக்கிருக்கிறது.
நீதிமன்றங்களோடு நேரடியான தொடர்பினைக் கொண்டிருக்கின்ற சிவில் அமைப்பாக பொலிஸ் திணைக்களம் இருந்துவருகின்றது. இந்தநாட்டிலே குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றபோது அவற்றை நீதிமன்றங்களுக்கு கொண்டுசென்று தண்டனைகளைப் பெற்றுக்கொடுத்து நீதியை நிலைநாட்டுவதனூடாக சமாதானமானஇ சுமூகமான சூழலை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் பொலிஸ்திணைக்களம் அரும்பணியாற்றிவருகிறது.
இவ்வாறான நடமாடும் சேவையை பிரதேச செயலகங்களும் முன்னெடுக்கவேண்டும். இத்தகைய சமூக சேவைகளை ஆற்றுவதன் மூலம் பொதுமக்களுக்கிடையிலும் அதிகாரிகளுக்கிடையிலும் நல்லுறவை ஏற்படுத்தவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும் முடியும் எனத்தெரிவித்தார்.





