மறையும் மறை

Written By avathani Media Network on Tuesday, November 8, 2016

(முஹம்மட் நிஷவ்ஸ்)

பகறாவை ஓதுவதை 
பாரிய சுமை என்பார்.
முக நூலில் பல மணிகள்
மூழ்கிக் கிடக்கின்றார்.

நிஷா ஓதச் சொன்னால்
நேரம் போகுமென்பார்.
விஷா ஒபிஸ் வாசலிலே
விடிய விடியக் காத்திருப்பார்

மாயிதா ஓதுவதற்கு
வாயிலே புண் என்பார்.
ஹாய் சொல்லி கோல் வந்தால்
பாய்ந்து சென்று பேசிடுவார்.

அன் ஆம் ஓதும் போது
அடித் தொண்டை நோகிறதாம்.
துன்யாப் பேச்சென்றால்
தொடர்ந்து பேசலாமாம்.

யூசுப் ஓதுவதற்கு
யூத்துக்கு நேரமில்லை
யூடியூப்பில் சேர்ச் பண்ணி
கூத்துப் பார்க்கின்றார்.

இப்றாகிம் சூறாவை
அப்புறமா பார்க்கலாம்
இப்ப இதுக்கெல்லாம்
எங்க டைம் இருக்கு.

சூறதுல் நஹ்ல் ஓத
சோம்பலாய் இருக்கிறது.
தூரத்தில் மெட்ச் என்றால்
துடித்து ஓடுகிறார்.

யாசீனை ஓதுகிறார்
இழவு வீடுகளில்தான்.
காசு கூடத் தந்தால்
கஹ்பையும் ஓதலாம்.

அலுமாரி மேல 
அஞ்சாறு குர் ஆன்கள்
அடுத்த நோன்புவரை
அப்படியே புழுதியிலே.

ஓதுவதும் விளங்குவதும்
ஒரு சிலரே செய்வதினால்
நாதியற்று நலிவுற்று
நடுத்தெருவில் நம் சமூகம்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.