(Mohamed Nizous)
மம்மி சீரியல் முன்
அம்மியாய் அமர்ந்திருக்க
டடா பிஸ்னஸ் என்று
கிடாவாய் அலைகின்றார்.
டோட்டர் டேட்டா லைனில்
மேட்டராகி டாட்டா காட்ட
பேட்டா மோட்ட பைக்கில்
'போட்டுட்டு' பொழுது போக்க
கூறு கெட்ட நாகரிகம்.
நாறுகிறது குடும்பம் உறவு.
ஹை கிளாஸ் பெமிலியிலே
கல்யாண விருந்து என்றால்
ஐயாவும் அம்மணியும்
ஆளுக்காள் போட்டியிட்டு
அலங்கரித்து செல்கின்றார்.
அங்கு பிறர் முன்னே
பழங்கால மும்தாஜும்
பட்டத்து சாஜஹானும் போல்
சோடியாய்ச் சிரிக்கின்றார்
சோபனை காட்டுகின்றார்.
வீடு வந்த பின்னாலே
வேசம் கலைந்து விடும்.
மம்மி அம்மியாகும்
மவராசன் டம்மியாகும்.
வாழத் தெரியவில்லை
வளர்க்கத் தெரியவில்லை
நாலு பேர் முன்னாடி
நடிப்பதுதான் வாழ்க்கையென
போலியாய் வாழ்கின்றார்
புண்ணியம் ஏதுமில்லை.
உள்ளத்தால் நேசித்து
பிள்ளைகளும் பெற்றோரும்
அல்லாஹ்க்கு வழிப்பட்டு
அன்பாய் நடப்பதிலும்
உள்ளதை சமைத்து
ஒரு சஹனில் போட்டு
எல்லோரும் உட்கார்ந்து
இணைந்து உண்பதிலும்
அடைகின்ற சுகத்தை
அனுபவிக்கத் தெரியாது
விடைதெரியா இலக்கு நோக்கி
விரைகிறார்கள் பலர் இங்கு..!

