Written By avathani Media Network on Tuesday, November 29, 2016


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றி, தண்டம் அறவிடும் நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் முன்னெடுக்கப்படவிருப்பதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

"கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. இதனால் வர்த்தகர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன் கல்முனை மாநகரை அழகுபடுத்தும் வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கட்டாக்காலி மாடுகள் நகரத்தை அசிங்கப்படுத்தி வருவதும் துர்வாடை வீசுவதும் இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான எருமை மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரில் நுழைந்து அசுத்தப்படுத்தி வருவதும் கவலைக்குரிய விடயமாகும்.  

இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தண்டம் அறவிடுவதற்குமான நடவடிக்கைகளை மீண்டும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்படும் மாடுகளுக்குரிய உரிமையாளர்கள் மீதான தண்டப்பணம் முன்னர் ஒரு மாட்டுக்கு இரண்டாயிரம் ரூபா வீதம் அறவிடப்பட்ட போதிலும், இனிவரும் காலங்களில் அதனை விட அதிகரித்த தொகையை அறவிடுவதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னர் விடுவிக்கப்படும் மாடுகளை தமது சொந்த இடங்களில் வைத்து பராமரிக்கத் தவறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அவை மீண்டும் கைப்பற்றப்பட்டு, அரசுடமையாக்கப்படும்" என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி மேலும் தெரிவித்தார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.