யாழ்ப்பாணத்திற்கான விஷேட விஜயமொன்றினை 2016 செப்டம்பர் 07ம் திகதி மேற்கொண்டிருந்த இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அன்ட்ரே சிஸன், மற்றும் ஜேம்ஸ் ரூசோ ஆகியோருடனான விஷேட சந்திப்பொன்றில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களின் வழிகாட்டலில் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு முன்னால் கருத்து வெளியிட்ட வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தினர்; யுத்தம் நிறைவடைந்திருக்கின்றது நிரந்த அமைதிக்கான சூழ்நிலைகள் மெதுமெதுவாக தோன்றுகின்றன, அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன, நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள், நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகள், என பல்வேறு செயற்திட்டங்கள் தற்போது தொடக்கப்பட்டிருக்கின்றன, ஆனால், வடக்கு மக்கள் இன்னமும் மிகுந்த அச்சத்தோடு வாழ்கின்ற சூழ்நிலை இன்னமும் மாறவில்லை. ஒருவித புது நம்பிக்கையை நோக்கி நாங்கள் எப்போதுமே நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.
தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம் மக்களுடைய விடயத்தில் தீர்க்கமான நிலைப்பாடுகளோடு இருக்கின்றார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்கள் முஸ்லிம்களின் விவகாரங்களில் நம்பிக்கை தருகின்ற நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள், வடக்கு மாகாணத்தின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அவர்கள் சார்ந்திருக்கின்ற பெரும்பான்மை கட்சிகளுடைய அடையாளங்களைச் சுமந்திருக்கின்ற காரணத்தினால் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் ஒருவித வேற்றுமை உணர்வோடு அவர்களை நோக்குகின்றார்கள்; இதன் காரணமாக வடக்கு முஸ்லிம்கள் பலத்த பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது.
வடக்கு மாகாண முதலமைச்சரும், வடக்கு மாகாணசபையும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் காத்திரமான எவ்வித நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை. இது பாரிய குறைபாடாகும். வடக்கு முஸ்லிம் மக்களின் சிவில் சமூக அமைப்புகளிடையே வினைத்திறன் மிக்க செயற்பாடுகளையும் எம்மால் கண்டுகொள்ளமுடிவதில்லை, எனவே வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தைப் பலப்படுத்தி அவர்களூடாக வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இதர செயற்பாடுகளை முன்னெடுப்பதுவே தற்போது எமக்கு முன்னால் உள்ள தெரிவாக இருக்கின்றது. இதனை அமெரிக்க தூதரகமும், உங்களுடைய உதவி வழங்கும் நிறுவனங்களும் நன்கு புரிந்துகொண்டிருக்கின்றீர்கள், இதற்காக முதலில் உங்களுக்கு எமது நன்றியறிதல்களை வெளிப்படுத்துகின்றோம். அத்தோடு எமது செயற்பாடுகள் மேலும் சீராக மேற்கொள்ளபப்டுவதற்கு தங்களுடைய முழுமையான ஒத்துழப்புகளையும் வேண்டி நிற்கின்றோம்.
இதற்குப் பதிலளித்துப்பேசிய துணைத்தூதுவர் அவர்கள் உங்களுடைய விவகாரங்களை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம், நீங்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட மக்கள் என்பதை நாம் அங்கீகரித்திருக்கின்றோம், இவ்வாறான சந்திப்புகள் மேலும் பல விடயங்களை எமக்குத் தெளிவுபடுத்துகின்றன, உங்களுடைய அரசாங்கத்தோடு மக்களின் நன்மைக்காகவே நான் இணைந்து செயலாற்றி வருகின்றோம். உங்களுடைய விவகாரங்கள் குறித்தும் நாம் உரிய கவனம் எடுப்போம் என்றும் உறுதியளித்தார்.
மேற்படி சந்திப்பின்போது வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தவரால் முதற்கட்டமாக தயார் செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வுக்கான செயற்திட்டத்தில், யாழ், கிளிநொச்சி முஸ்லிம் மக்கள்; உள்ளீர்க்கப்படவேண்டியதற்கான நியாயப்பாடுகள்; மற்றும் உபாய மார்க்கங்கள” என்னும் ஆவணம் அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் அவர்களிடம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களினால் கையளிக்கப்பட்டது. மேற்படி சந்திப்பில் யாழ் மாவட்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாப் நிபாஹிர், ஜனாப் தாஹிர், ஜனாப் நிராஸ், ஜனாப் லாபிர் ஆகியோரும், முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாப் குவைஸ் அவர்களும், வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாப் ஜவாஸ் அவர்களும், பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாபா பெனாஸிர், மற்றும் பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் சார்பில் செல்வன் நிப்ராஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தகவல் என்.எம்.அப்துல்லாஹ்




