காரி மற்றும் காரிஆக்களை அடையாளப்படுத்திய மர்ஹும் அஷ்ரபின் நினைவேந்தல் நிகழ்வு

Written By avathani Media Network on Monday, September 19, 2016


(எம்.எஸ்.எம். சாஹிர்)

அஷ்ரப் என்ற மாமனிதரின் அரசியல் போராட்டத்திலே நான் கழித்த நாட்களை எண்ணிப்பார்க்கின்ற போது அது அலாதியான சுகானுபவமாக இருந்தது என்பதற்கு சாட்சி கூறுகின்றவர்களாக சகவாசம் வாய்க்கப்பெற்ற நூற்றுக் கணக்கானோர் இன்று அவையிலே இருக்கிறோம். அவைக்கு வெளியிலும் இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரபின் 16 ஆவது நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு 07 இல் அமைந்துள்ள தாமரைத் தடாக அரங்கில் கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

அந்த அபூர்வ மனிதரின் அலாதியான அரசியல் பயணம், எதிர் கொண்ட சவால்கள், இந்த நாட்டின் அனைத்து இனங்களையும் சார்ந்த மக்களையும் அரவணைத்து, அந்த மக்களின் மூலம் பெற்ற நல்லாசிகள் என்பன அதிகமாக இருக்கின்றன. 

ஆலமரத்திற்குக் கீழ் எந்தப் பயிரும் வளர்வதில்லை என்று சொல்வார்கள். அதற்கு விதிவிலக்காக இருந்த ஒர் ஆலமரமாக தன்னுடைய பரந்து விரிந்த கிளைகள், விழுதுகள் இவற்றுக்கு மத்தியில் நிறைய புதிய தலைமைத்துவங்களை அடையாளங் காட்டிச் சென்ற எங்களுடைய அரும்பெருந் தலைவருக்கு நாங்கள் நிச்சயமாகச் செய்கின்ற நன்றிக்கடன் எதுவாக இருக்க முடியும் என்று அவருடைய இயக்கத்திலே இருந்தவர்கள், பிரிந்தவர்கள், பிரிந்துசென்று வந்தவர்கள், இன்னும் பிரியகாத்திருப்பவர்கள் என்றெல்லாம் இருக்கிற நீண்ட பட்டியலுக்கு மத்தியில் அவரை நினைவு கூருவதற்கு இருக்கிற மிகச் சிறந்த மார்க்கம் எல்லாம் வல்ல இறைவன் எமக்கு அருளிய திருவேதத்தை ஆய்ந்தறிவதே சிறந்த வழி எனவும் அதனை விட சிறந்த ஒன்று இருக்க முடியாது என்ற நோக்கத்திலேயே இந்த நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். 

இதன் தொடர்ச்சியாக அடுத்த வருடம் இதே தினத்தில் அஷ்ரப் அல்குர்ஆன் ஆராய்ச்சிக் கழகம் என்று அமைத்திருக்கின்ற இந்த கழகத்தினூடாக அல்குர்ஆன் ஆராய்ச்சி குறித்த ஒரு சர்வதேச மாநாட்டை அடுத்தவருடம் நடத்துவதற்கு தீர்மானித்திருக்றோம். அதைத் தொடர்ந்து அன்னார் நினைவாக வருடாவருடம் வித்தியாசமாக அல்குர்ஆனை மையப்படுத்தி அவருக்குச் செய்கின்ற கண்ணியமாக, அவருடைய மறுமைவாழ்வு ஈடேற்றம் பெற பல செயற்பாடுகளைச் செய்யவுள்ளோம்- என்றார்.

இலங்கையின் நாலாபுறங்களிலும் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டதோடு, நிகழ்வில் இனிமையான தொனியில் காரி மற்றும் காரிஆக்களுடைய குர்ஆன் ஓதல்களும் மேடையில் அரங்கேறி மேடையை அதிரவைத்தன. அதில் பல போட்டியாளர்களுடைய குரல்கள் கேட்பதற்கு இனிமையானதாகவும் மெச்சத்தக்கதாகவும் இருந்தது. 

பல வயது பிரிவுகளைக் கொண்டதாக இக்கிராஅத் போட்டி நடத்தப்பட்டு, அப்பிரிவுகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய காரி மற்றும் காரிஆக்களுக்கு முதற்பரிசு 8 கிராம் தங்கப்பதக்கமும் மற்றும் 50.000 ரூபாவும் இரண்டாம் பரிசு 4 கிராம் தங்கப்பதக்கமும் மற்றும் 30.000 ரூபாவும் மூன்றாம் பரிசாக 2 கிராம் தங்கப்பதக்கமும் மற்றும் 20.000 ரூபாவும் 7பேருக்கு 10,000ரூபாவீதம் ஆறுதல் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் தெரிவுக்குழு நடுவர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன. 

இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள், உயர்ஸ்தானிகர்கள், உயரதிகாரிகள், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பிரமுகர்கள், கட்சிப் போராளிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








படங்கள்: முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப்பிரிவு
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.