சுஹதாக்கள் தினத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு விடுக்கும் ஒரு சவால் !!
உதவி இழந்து , வருமானமுற்ற ஏழைக்குடும்பங்கள் பல இழப்பிட்டவர்களுக்கு இதுவரை முழுமையான நிவாரணமோ அல்லது நீதியோ கிடைக்கவில்லை. இதனைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய அரசியல் வாதிகள் சுஹதாக்கள் தினம் ஒவ்வொன்றிலும் உருக்கமான அறிக்கையொன்றினை மட்டும் விடுக்கின்றார்கள். அதற்கு மேல் ஒன்றுமில்லை. நேற்றும் அதுதான் நடந்தது.
இன்னுமொரு பக்கத்தில் இந்த சம்பவத்தை வைத்து நடாத்தப்படும் அரசியல் வெற்றிகரமாகவும் இலாபகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படுகொலைகள் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்தும் அதன் மூலம் வியாபாரத்தில் ஈடுபட்ட பலர் அமைச்சர்களாக, அரை மந்திரிகளாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக , மாகாண சபை உறுப்பினர்களாக பதவிகளைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் இதனைப் பயன்படுத்தி கோடிகள் இலாபம் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால் இவர்களால் உருப்படியாக சுஹதாக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை. வெறும் வெற்று அறிக்கை கட்டுக்களாக மட்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த இடத்தில் கோரிக்கையாகவும் சவாலாகவும் ஒரு விடயத்தை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
அதாவது சுஹதாக்களுக்காக வருடமொருமுறை நீலக் கண்ணீர் வடிப்பதை விட்டுவிட்டு இவர்களுக்காக ஒரு நிதியத்தையாவது உங்களால் உருவாக்கமுடியுமா..?
அதற்காக பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் ஒரு ஆறுமாத மாதாந்தக் கொடுப்பனவுகளையும் உங்களுக்குக் கிடைத்த வாகனக் கோட்டாக்களை விற்றுப் பணமாக்கிய தொகைகளையும் நிதியத்திற்காக வழங்க முடியுமா..? முடிந்தால் உங்களின் நேர்மையினை நிரூபியுங்கள். இது கோரிக்கை மட்டுமல்ல சுஹதாக்கள் தினத்தில் விடுக்கும் சவாலுமாகும்.
குறிப்பு:
01. அமைச்சர்கள், அரையமைச்சர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்தக் கொடுப்பனவுகளின் மொத்தம் ஒருவருக்கு 150000/= முதல் 300000/= வரை யாகும்
02. மாகாணசபை உறுப்பினர்களின் மாதாந்தக் கொடுப்பனவுகளின் மொத்தம் கிட்டத்தட்ட 60000/= ஆகும்
03. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வாகனக் கோட்டாக்களை விற்றுப் பெற்றுக் கொள்ளும் தொகை இரண்டு கோடியாகும்
04. மாகாணசபை உறுப்பினர்கள் வாகனக் கோட்டாக்களை விற்றுப் பெற்றுக் கொள்ளும் தொகை ஒரு கோடியாகும்
அரசியல் நகர்வுகளுக்காக சுஹதாக்கள் தினங்களை பயன் படுத்தாதீர்கள்.
முஹம்மட் பர்சாத்
காத்தான்குடி

