மாணவர் சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளின் பால் கவனம் செலுத்த வேண்டும் -முத்தலீப் ஹாஜியார்

Written By avathani Media Network on Wednesday, August 17, 2016


(மாவத்தகம தினகரன் நிருபர்) 

பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம் , கணிதம் , விஞ்ஞானம் ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புதவற்காக அரசாங்கம் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீளவும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பிரச்சினையை முடிவுக்கு கொணடு வருவதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாகும். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் ஆங்கிலம். கணிதம் , விஞ்ஞானம் ஆசிரியர்களுக்கான கணிசமாளவு வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதனால் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியாமை இருக்கின்றார்கள். 

 எமது முஸ்லிம் மாணவர்களும் ஏனைய சமூக மாணவர்களுடன் போட்டி போடுகின்ற சமூகமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். வெற்றிடங்கள் நிலவுகின்ற இடங்களுக்கு எந்தப் பகுதியிலிருந்தும் சரி குறித்த பாடங்களுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொண்டு கற்பிக்க முடியும் என்ற திட்டத்தை ஏற்படுத்தி அதற்கான ஊதியத்தை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது எமது கண்டி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளைப் பொறுவத்தவரையில் வரவேற்கத் தக்க அம்சமாகும். இதன் மூலம் கண்டி மாவட்ட முஸ்லிம் மாணவர்களுடைய கல்வி நிலையை மேம்படுத்த முடியும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்தலீப் ஹாஜியார் தெரிவித்தார்.

முத்தலீப் பொது அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கண்டி கெலிஓயப் பகுதியில் கல்வி பயிலும் பாடசாலைகள் மாணவர்களுக்கான இலவசப் புலமைப் பரிசில் கருத்தரங்கும் மற்றும் தாய் மார்களுக்கான விழிபுணர்வூட்டும் கருத்தரங்கும் முறுத்தகஹமுல மஹ்றூப் மண்டபத்தில் 12-08-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்தலீப் ஹாஜியார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

கடந்த காலங்களைப் போல முஸ்லிம் மக்கள் வர்த்தக துறையில் நம்பிக்கை கொண்டு கல்வித் துறையில் பின்தங்கியவர்களாக காணப்பட்டனர். ஆனாலும் அந்த நிலை மாற்றம் பெற்றுவருகின்றது. எல்லாத் துறையிலும் போட்டி போடக் கூடிய சமூகமாக மாணவர்கள் காணப்படுகின்றார்கள் .எனவே மாணவர் சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு பெற்றோர்களின் அயராத பங்களிப்பு தொடர்ந்து பிள்ளைகளின் பால் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கண்டி நகரிலுள்ள அந்தனிஸ் கல்லூரி, தர்மராஜக் கல்லூரி, திரித்துவக் கல்லூரி ஆகிய கவர்ச்சிகரமான பாடசாலைகளுக்கு எமது பகுதியிலிருந்து வெளியே சென்று எமது மாணவர்கள் கல்வி பயிலுகின்றார்கள். இந்த நிலையை நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும். திறன் வாய்ந்த ஆசிரியர்களை எமது கிராமத்திற்கு கொண்டு வந்து எமது மாணவர்களை வெளியே செல்ல அனுமதிக்காமல் தங்கள் ஊரிலுள்ள பாடசாலையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கம் ஒவ்வொரு பெற்றோர்களிடத்திலும் வர வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை உள்வாங்கி எமது கிராமத்துப் பாடசாலையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிவகைகள் காண வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை இலங்கையின் எப்பாகத்திலிருந்து சரி கொண்டு கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி தான் எமது சமூகத்தின் உயிர் நாடி. இதற்கு பெற்றோர்களின் வழிகாட்டலும் ஊக்குவிப்பும் உந்து சக்தியாக அமைய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விசேட வளவாளராக அனஸ் மற்றும் பாடசாலை அதிபர்மாகள் உரை நிகழத்தினர்.

இக்பால் அலி





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.