(இக்பால் அலி)
அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக மேற்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள தமிழ் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் என்பது பெரும் கவலையைத் தருகின்றது. இனவாதம் பேசுகின்ற எதிர் தரப்பினருக்கும் எமது தேசிய உரிமையைத் தரமறுக்கின்ற தரப்பினருக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்து விடும் என்று சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பலக்லைக்கழக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மேதலை அடுத்து விடுத்துள்ள ஊடகச் செய்தியில் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
இந்த சம்பவத்தை வைத்து இன வெறுப்புணர்வை தூண்ட அரசியல் வாதிகள் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய வன்முறை கலாசாரத்திற்குள் நாம் சிக்கிவிடுவோம் எனின் எமது இலக்கையும் இழந்து நாம் வெற்றிகொள்ள வேண்டிய அரசியல் அபிலாஷைகளையெல்லாம் இழந்து எம்மை அறியாமலே அழித்துக் கொள்வோம்.
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின் போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இன நெருக்கடி மலிந்துள்ள நாட்டை எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களிலிருந்தே இன ஒருமைப்பாட்டை கட்டி எழுப்பக் கூடிய வகையில் அறிவியல் ரீதியாகச் சிந்தித்துச் செயற்படுவது பொருத்தமானதாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
